வங்கக் கடலில் வரும் 15, 16 தேதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவா வாய்ப்புள்ளது. தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், பல்வேறு பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.
இதை தொடர்ந்து தென் மேற்கு பருவமழை 10 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெப்பச்சலனம்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடனேயே காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் மாலையில் திடீரென கனமழை பெய்தது. இதனால் சோத்துப்பாறை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கும்பகோணத்தில் இடிமின்னலுடம் 2 மணி நேர கனமழை பெய்தது.
நாக்கை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் 1 மணி நேரம் கனமழை பெய்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஒன்றரை மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.
மதுரை மாவட்டத்தில் திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. மேலூர், பெரியார் பேருந்து நிலையம், காளவாசல், பழங்காநத்தம், கோரிப்பாளையம், புதூர், மூன்றுமாவடி, அண்ணாநகர், கருப்பாயூரணி உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.
திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்தது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததில் 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் சாய்ந்தது.
மேலும் வங்கக் கடலில் வரும் 15 மற்றும் 16 தேதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் என எதிர் பார்க்கப் படுகிறது மற்றும் சென்னைக்கு தெற்கே நெருங்கிவர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகம் மாற்று புதுச்சேரியில் வரும் 17 ஆம் தேதியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments