இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. குறிப்பாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தான் அதிகளவில் விற்பனைக்கு வந்து கொண்டுள்ளன. இந்த வரிசையில் பூம் மோட்டார்ஸ் நிறுவனம் (Boom Motors), புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
கார்பெட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கார்பெட் (Corbett EV) என பெயரிடப்பட்டுள்ளது. இதில் EV என்பது, Electric Vehicle என்பதை குறிக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு, பூம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்பெட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூம் கார்பெட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவு தொடங்கி உள்ள நிலையில், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.3 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 200 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மற்றொரு சிறப்பம்சமும் உள்ளது.
சிறப்பம்சங்கள்
பேட்டரியை அப்படியே இரட்டிப்பாக, அதாவது 4.6 kWh பேட்டரியாக மாற்றி கொள்ளும் ஆப்ஷனை பூம் மோட்டார்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இவை 'ஸ்வாப்பபிள் பேட்டரிகள்' (Swappable Batteries) ஆகும். போர்ட்டபிள் சார்ஜர் உடன் இது வழங்கப்படுகிறது. வீடுகளில் உள்ள எந்தவொரு சாக்கெட்டில் வேண்டுமானாலும் இந்த போர்ட்டபிள் சார்ஜரை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூம் கார்பெட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 75 கிலோ மீட்டர்கள் ஆகும். அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்ச லோடிங் திறன் 200 கிலோவாக இருக்கிறது. பூம் மோட்டார்ஸ் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சேஸிஸிற்கு 7 ஆண்டுகள் வாரண்டியும், பேட்டரிக்கு 5 ஆண்டுகள் வாரண்டியும் வழங்குகிறது.
இது குறித்து பூம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அனிருத் ரவி நாராயணன் கூறுகையில், ''பருவ நிலை மாற்றம் தான் நமக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய அச்சுறுத்தல் என நான் நம்புகிறேன். இந்தியாவில் வாகனங்கள் சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைகிறது. எனவே வாகனங்களால் காற்று மாசுபடுவதை குறைப்பதை எங்கள் பணியாக மாற்றியுள்ளோம்.
இந்த தயாரிப்பை சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்காக பூம் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும் கடந்த 2 வருடங்களாக இடைவிடாமல், சோர்வின்றி உழைத்துள்ளனர். நாங்கள் கோவையில் தொழிற்சாலையை அமைத்துள்ளோம். ஆண்டுக்கு ஒரு லட்சம் பைக்குகளை உற்பத்தி செய்யும் திறன் இதற்கு உண்டு.
நாங்கள் இங்கு உற்பத்தி பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டோம். உற்பத்தியை அதிகரிக்கும் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளோம். இந்த தொழிற்சாலை மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளோம்'' என்றார். பூம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்பெட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுவது நாம் பெருமை கொள்ள வேண்டிய விஷயம்தான்.
முன்னதாக சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஓலா எஸ்1 (OLA S1) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் கூட தமிழகத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழக தலைநகர் சென்னையில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நிரம்பியிருப்பதால், அதனை 'ஆசியாவின் டெட்ராய்டு' என பெருமையுடன் வர்ணிக்கின்றனர்.
விலை
தற்போது தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அதிகரித்து வருவது சிறப்பான விஷயம்தான். இதற்கிடையே புதிதாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள பூம் கார்பெட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 89,999 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கென தனியாக ஒரு நிறுவனம்!
மூன்று சக்கர மின்சார வாகனம்: யூலர் நிறுவனம் அறிமுகம்!
Share your comments