அப்துல் கலாம் என்று சொன்னாலே அனைவரிடமும் உற்சாகமும், நம்பிக்கையும் தானாகவே பிறக்கும். கனவு காணுங்கள்; உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள்; தோல்விகளை எதிர்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்; என அனைவரையும் உத்வேகப்படுத்தியவர். ஏவுகணை நாயகனான இவர் இளைஞர்களின் எழுச்சி நாயகனும் ஆவார்.
அப்துல் கலாம் (Abdul Kalam)
ராமேஸ்வரத்தில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் முதல் குடிமகன் என்ற உச்சத்தை எட்டியவர் அப்துல் கலாம். பேராசிரியர், விஞ்ஞானி, பிரதமரின் அறிவியல் ஆலோசகர், குழந்தைகளின் நண்பன், இளைஞர்களின் எழுச்சி நாயகன் என பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கினார். இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற கனவை இளைஞர்களின் மனதில் விதைத்தவர். நாட்டின் பாதுகாப்புத் துறையிலும் இவரின் பங்களிப்பு அளவிட முடியாதது. அக்னி ஏவுகணை, அணுகுண்டு சோதனை போன்றவற்றில் ஆச்சரியங்களை நிகழ்த்தி உலக நாடுகளின் பார்வையை இந்தியா பக்கம் திருப்பியவர்.
இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ ஆகியவற்றில் முக்கிய பதவிகளை வகித்த இவர், பத்ம விபூஷன், பத்ம பூஷன், பாரத ரத்னா போன்ற உயரிய விருதுகளையும் குவித்துள்ளார். விஞ்ஞானி, ஏவுகணை நாயகன், ஜனாதிபதி உள்ளிட்ட பல பெருமைகளுக்கு கலாம் சொந்தக்காரர். இருப்பினும், மாணவர்களுடன் உரையாட வேண்டும் என்பதே இவரின் விருப்பமான பணியாக இருந்தது எனச் சொல்லலாம். மாணவர்களை மெருகேற்றும் வகையில் அவர்களுடன் கலந்துரையாடி வழிகாட்டி உள்ளார். பல்வேறு மொழி, இனங்களை கடந்து தேசம் முழுவதும் உள்ள மாணவர்களின் ரோல்மாடலாக தன்னை உயர்த்திக் கொண்டார்.
கனவு காணுங்கள் (Dream On)
2015ம் ஆண்டு இதே நாளில் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்., மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து தனது இன்னுயிரை நீத்தார். வாழ்நாள் முழுவதும் எளிமையாகவும், முன்னுதாரணமாகவும் வாழ்ந்த இவர் பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். அதில், அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள் போன்றவை படிப்பவர்களையும் லட்சிய நாயகர்களாக மாற்றக்கூடும். பிரம்மச்சாரியாக வாழ்ந்த அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், 'கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்' என்ற அவரது வார்த்தைகளும் என்றும் நமக்கு வாழ்வின் படிக்கல்லாகும்.
மேலும் படிக்க
Share your comments