தன் குழந்தைக்கு ஆபத்து என வரும்போது, எந்த இன்னலையும், எதிர்கொள்ளும் துணிச்சல், தானாகவே தாய்மைக்கு வந்துவிடும். இதற்கு நம் வரலாற்றில் இருந்து எத்தனையோ உதாரணங்கள் எடுக்கலாம்.
ஏனெனில் தாய்மையின் தன்னிகரில்லாத் தன்மையே அதுதான். இதனை உறுதிப்படுத்தும் வகையில், தன் குழந்தைக்காகப் புலியுடன் சண்டையிட்டிருக்கிறார் இந்த வீரத்தாய். மத்திய பிரதேசத்தில் புலியுடன் வீராவேசமாக சண்டையிட்டு, தன் குழந்தையை காப்பாற்றிய தாய், படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மத்திய பிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் போலா பிரசாத். இவர் வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது மனைவி அர்ச்சனா, 25, பிறந்து 15 மாதமேயான தன் ஆண் குழந்தையை வீட்டுக்கு வெளியில் அழைத்துச் சென்றார்.
பாசப் போராட்டம்
அப்போது வனப் பகுதிக்குள் இருந்து வந்த ஒரு புலி, குழந்தை மீது பாய்ந்தது.
அர்ச்சனா எவ்வளவோ தடுத்தும், அந்த புலி, குழந்தையை வாயில் கவ்வியபடி வனப் பகுதிக்குள் ஓட முயற்சித்தது. அர்ச்சனா அந்த புலியை விரட்டிச் சென்றார். புலியுடன் கட்டிப் புரண்டு சண்டையிட்டார்.
திசைதிரும்பிய கோபம்
ஆத்திரமடைந்த புலி, குழந்தையை கீழே போட்டு விட்டு, அர்ச்சனாவை தாக்கியது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கூச்சலிட்டதை அடுத்து, புலி வனப் பகுதிக்குள் தப்பி ஓடியது.
புலி தாக்கியதில் அர்ச்சனாவும், குழந்தையும் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். புலியை பிடிப்பதற்கு வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
புலியுடன் ஆவேசமாக சண்டையிட்டு குழந்தையை காப்பாற்றிய அர்ச்சனாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க...
அரசுப் பேருந்தில் பயணிப்போருக்கு ஜாக்பாட் !
இட்லி ரூ.2க்கும், தோசை ரூ.3க்கும் விற்பனை செய்யும் சூப்பர் கடைகள்!
Share your comments