தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் ஒரு விவசாய வணிக ஊக்குவிப்பு மையத்தை உருவாக்க, திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேளாண் வணிக காப்பகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மரவள்ளிக்கிழங்கு 89610 ஹெக்டேரில் பயிரிடப்பட்டு ஆண்டுக்கு 2862400 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. நாமக்கல், விழுப்புரம், தருமபுரி, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மரவள்ளிக்கிழங்கு அதிக அளவில் பயிரிடப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் குறைந்த விலை, பூச்சி சேதம், காட்டுப்பன்றிகள் / எலி தாக்குதல் போன்ற கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றனர்.
இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் ஒரு விவசாய வணிக ஊக்குவிப்பு மையத்தை உருவாக்க, திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேளாண் வணிக காப்பகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டாக்டர் என்.கே. சுதீப்குமார், விரிவாக்கக் கல்வி இயக்குநர் (TANUVAS) மற்றும் டாக்டர் எம்.என். ஷீலா, இயக்குனர், ICAR-CTCRI, ஆகியோர், மாண்புமிகு துணைவேந்தர் டாக்டர் கே.என். செல்வகுமார், முன்னிலையில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தில் அடிப்படையில், நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சியில் மரவள்ளி கிழங்கு வணிகத்தை ஊக்குவிக்கும் வணிக அடைகாக்கும் மையம் தொடங்கப்படும்.
அதன் தொடர்ச்சியாக ஒரு செயலாக்க திட்டத்தை உருவாக்குவதற்காக மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரியில் திட்டமிடல் கூட்டம் நடத்தப்பட்டது. டாக்டர் என்.கே. சுதீப்குமார், விரிவாக்கக் கல்வி இயக்குநர் இந்த பயிலரங்கைத் தொடங்கி வைத்தார். தொடக்க உரையின் போது, டாக்டர் சுதீப் குமார், நிலையற்ற சந்தை மற்றும் காலநிலை மாற்றத்தால் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட, மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு, விரிவாக்கத் தலையீடு மாதிரிகளை வடிவமைத்து செயல்படுத்துவதற்கு ஒரு கூட்டு அணுகுமுறை தேவை என்று சுட்டிக்காட்டினார். முதல்வர் டாக்டர் கருணாகரன் பேசும்போது கால்நடை உற்பத்திச் செலவைக் குறைக்க கால்நடைத் தீவன கலவைகளில் உள்ளூரில் கிடைக்கும் மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றைச் சேர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். டாக்டர் எம்.என். ஷீலா, ICAR-CTCRI இயக்குனர் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள தீவிர தொழில்நுட்ப பரவல் வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ICAR-CTCRI அக்ரி-பிசினஸ் இன்குபேட்டரின் பொறுப்பாளர் டாக்டர். பி. சேதுராமன் சிவக்குமார், வணிக அடைகாக்கும் மையத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். டாக்டர். டி. திருநாவுக்கரசு, துணைப் பேராசிரியர், விவசாயிகளின் பிரச்சனைகளைக் கண்டறிந்து, அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட உத்திகளை வடிவமைக்க ஒரு விவாதத்தை நடத்தினார். இந்த திட்டமிடல் பட்டறையின் போது, மரவள்ளிக்கிழங்கு கால்நடை தீவன தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், குறுகிய கால மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட மரவள்ளிக்கிழங்கு நடவுப் பொருள் உற்பத்தி முறையை உருவாக்குதல், மாவுப் பூச்சிகளை நிர்வகிப்பதற்கான ஒட்டுண்ணி உற்பத்திக்கான வசதியை நிறுவுதல் ஆகியவை முன்னுரிமைப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டன. கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம் மற்றும் நாமக்கல்லைச் சேர்ந்த மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள, TANUVAS மற்றும் ICAR-CTCRI விஞ்ஞானிகள் மற்றும் உட்பட 30 பங்குதாரர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும் படிக்க:
MSP: குறுவை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அமைச்சரவை ஒப்புதல்
Share your comments