ஆன்லைன் செயலியில் கடன் வழங்கும் நிறுவனங்கள், இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த செயலிகள் மிகவும் ஆபத்தானவை என்றும், மக்கள் நம்பி ஏமாற வேண்டாம் ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. ஆனால், பொதுமக்களில் சிலர் அவசரத் தேவைக்காக, ஆன்லைன் செயலியில் கடன் வாங்கி விட்டு, பிறகு வாழ்க்கையையே தொலைக்கின்றனர்.
ஆன்லைன் கடன் (Online Loan)
தன் வாழ்க்கையைத் தொலைத்து நிம்மதியின்றி தவிரப்பவர் தான் புனேவைச் சேர்ந்த ராஜ். கடந்த மார்ச் மாதம் உடனடித் தேவைக்காக, ஆன்லைன் செயலியில் ரூ. 10,000 கடன் வாங்கினார் ராஜ். ஆனால், இதில் பாதி தொகை தான் கடனாக வழங்கப்பட்டது. கடன் வழங்கிய அடுத்த 3 நாட்களுக்குள், கடன் பெற்றத் தொகையை விட மூன்று மடங்கு பணம் கேட்டு ராஜை மிரட்டினர்.
இதனால், மிகுந்த மன வேதனை அடைந்த ராஜ், இந்தக் கடனைத் தீர்க்க இன்னொரு ஆன்லைன் செயலியில் கடன் வாங்கியுள்ளார். இப்படியே 33 ஆன்லைன் செயலிகளில் கடன் வாங்க, தற்போது 35,000 ரூபாய்க்கும் மேல் திருப்பி செலுத்த வேண்டிய கடன் தொகை உள்ளது.
நாளுக்கு நாள், இவர்களின் மிரட்டல் அதிகரிக்க காவல் துறையில் புகார் அளிக்கவும் பயந்துள்ளார் ராஜ். செயலிகளை இயக்கும் நபர்கள், அவரது தொலைபேசியில் இருந்த அனைத்து தொடர்புகள் மற்றும் அவரது புகைப்படங்களை அணுகுவதற்கான அனுமதியைப் பெற்றனர். அவரது தொலைபேசியில் உள்ள அனைவரது தொலைபேசி எண்ணிற்கும், அவரது மனைவியின் நிர்வாணப் படங்களை அனுப்புவதாக அச்சுறுத்தியுள்ளனர். கடனைச் செலுத்துவதற்காக, ராஜ், தனது மனைவியின் நகைகள் அனைத்தையும் விற்று விட்டார். ஆனால் அவர் இன்னும் அச்சமாகத் தான் இருக்கிறார்.
இந்தியாவில், இந்த மாதிரியான மொபைல் போன் மோசடி மிகவும் பொதுவானதாகி விட்டது. ஜனவரி 1, 2020 முதல் மார்ச் 31, 2021 வரை, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நடத்திய ஆய்வில், ஏறக்குறைய 600 சட்டவிரோத கடன் வழங்கும் செயலிகள் கண்டறியப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அனைவரும் இனி ஆன்லைனில் கடன் வாங்குவதை தவிர்த்து, எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் படிக்க
மீன்பிடி மானியம் இரத்து: எதிர்ப்பு தெரிவித்த இந்திய மீனவர்கள்!
புகைப் பழக்கத்தை விட நினைப்பவரா நீங்கள்? இது உங்களுக்கு தான்!
Share your comments