இந்தியாவில் கொரோனவினால் ஏற்பட்ட பேரழிவினைக் காட்சிப்படுத்தும் விதமாக புகைப்படங்கள் எடுத்த டேனிஷ் சித்திக் உட்பட நான்கு இந்தியர்களுக்கு புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டாவது முறையாக டேனிஷ் சித்திக் இப்பரிசினை பெறுகிறார்.
புலிட்சர் பரிசு (Pulitzer Prize)
ஜோசப் புலிட்சர் என்ற புகழ்பெற்ற பத்திரிக்கைப் பதிப்பாளரின் நினைவாக 1917ம் ஆண்டு முதல் புலிட்சர் பரிசு வழங்கப்படுகிறது. இதழியல், பத்திரிக்கை, இலக்கியம், இசை தொகுத்தல் ஆகிய பிரிவுகளுக்கு வழங்கப்படும் இப்பரிசினை, ரோஹிங்கிய அகதிகளின் அவல நிலையினை எடுத்துக்கூறும் விதமாக எடுக்கப்பட்ட புகைப்படத்திற்காக 2018ம் ஆண்டு டேனிஷ் சித்திக் புலிட்சர் விருதை முதல் முறையாக பெற்றார். புலிட்சர் பரிசினைப் பெற்ற முதல் இந்தியரும் இவரேயாவார்.
இந்நிலையில், இந்தியாவில் 2020ம் ஆண்டு பேரழிவினை ஏற்படுத்திய கொரோனாவின் கோரத்தாண்டவத்தினை உலகிற்கு எடுத்துக்கூறும் விதமாக எடுக்கபப்பட்ட புகைப்படத்திற்கு இந்த ஆண்டிற்கான புலிட்சர் பரிசு வழங்கப்படுகிறது. இப்பரிசானது, சித்திக் மற்றும் அதன் அபிடி, சன்னா இர்ஷாத் மட்டோ, அமித் தேவ் ஆகிய நான்கு பேருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
புகைப்படக் கலைஞர் (Photographer)
1983ம் ஆண்டு பிறந்த டெல்லியில் பிறந்த சித்திக், ஹிந்துஸ்தான் டைம்ஸில் தனது பணியினைத் தொடங்கினார். பிறகு லண்டனை தலைமையிடமாகக் கொண்ட ரியூட்டர்ஸ் என்ற நிறுவனத்தில் புகைப்படக் கலைஞராகப் பணிபுரிந்தார். ரோஹாங்கியா அகதிகளின் நெருக்கடி நிலை, ஹாங்காங் கலவரம், நேபாளில் ஏற்பட்ட பூகம்பம், ஈராக் மற்றும் ஆப்கானிய போர்கள் போன்ற உலகின் மிக முக்கியமான நிகழ்ச்சிகளைக் காட்சிப்படுத்திய சித்திக், 2021ம் ஆண்டு தலிபான் கிளர்ச்சியாளர்களுக்கும், ஆப்கான் சிறப்பு படைப்பிரிவிற்கும் நடுவில் நடைபெற்ற யுத்தக் காட்சிகளைப் படமெடுக்கச் சென்ற பொழுது கொல்லப்பட்டார்.
இறந்த பின்பும் தனது கலைத்திறமையின் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கும் டேனிஷ் சித்திக்கிற்கு உலகெங்கிலுமிருந்து வாழ்த்துக்கள் வந்த வண்ணமுள்ளன. கலைஞர்களுக்கு அழிவில்லை, தங்களது திறமையின் மூலம் இவ்வுலகில் ஏதோ ஒரு ரூபத்தில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு சித்திக்கின் வாழ்க்கையை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதலாம்.
மேலும் படிக்க
ஊரடங்கில் தொடர் குடி: இந்தியர்களுக்கு இந்த நோய் அதிகரிப்பு!
கொரோனா உயிரிழப்பு இந்தியாவில் தான் அதிகம்: WHO சர்ச்சைக் கருத்து!
Share your comments