தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 17 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளதாகவும் மற்றும் இந்த கனமழை வரும் 19 ஆம் தேதி வரை தொடரலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகும் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி வட தமிழகம் நோக்கி வர வாய்ப்பு இருப்பதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்றைய வானிலை அறிக்கையில் அறிவித்திருந்தது.
17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
வட தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும் மற்றும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையின் பெரும்பாலான இடங்களில் அநேக பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர், விழுப்புரம், புதுகோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், அரியலூர், திருவண்ணாமலை, திருச்சி, சிவகங்கை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, விருதுநகர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பரவலான மழை மக்கள் மகிழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 வது நாளாக மிதமான மழை தொடர்ந்தது. நல்ல மழையால் பூமி குளிர்ந்து மானாவாரி பயிர் சாகுபடிக்கு ஏற்றதாக இருக்கிறது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சுற்றுவட்டாரத்தில் காலை முதல் வெயில் வாட்டிய நிலையில் மாலை திடீரென கருமேகம் சூழ்ந்து மல்லவாடி நாயுடுமங்கலம், ஜவ்வாதுமலை, ஆதமங்கலம்புதூர், வீரளூர், உள்ளிட்ட இடஙக்ளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கருவேல் நாயக்கன்பட்டி, பழனிசெட்டிபட்டி, அல்லிநகரம், ஜக்கம்பட்டி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
கொடைக்கானல் மழை பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக காலை மற்றும் மாலை நேரங்களில் மிதமான மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது.
இதே போல் விருதுநகர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கோவை மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்திருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர் நிலவியது.
அதிக மழை பொழிவு
அதிக பட்ச மழையாக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 12 செ.மீ, போளூரில் 9 செ.மீ, ஆரணியில் 8 செ.மீ மழையும், மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் ஆணை, புதுச்சேரி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், வேலூர் மாவட்டம் ஆம்பூர், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர், ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ மழையும் பதிவாகியள்ளது.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments