ரிசர்வ் வங்கி ஏற்கெனவே டிஜிட்டல் ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில், குறிப்பிட்ட சில பயன்பாடுகளுக்கு மட்டும் இ-ரூபாய் (e-rupee) டிஜிட்டல் ரூபாய் நாணயம் சோதனை அடிப்படையில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது.
இ-ரூபாய் (e-Rupee)
இ-ரூபாய் டிஜிட்டல் நாணயம் பற்றிய குறிப்பையும் (Concept Note) ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது. மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் (CBDC) பற்றியும், இ-ரூபாயில் திட்டமிடப்பட்டுள்ள வசதிகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த குறிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தொழில்நுட்பம், வடிவமைப்பு, பயன்பாடு, வெளியீடு உள்ளிட்டவை குறித்தும் இந்த குறிப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. இ-ரூபாயால் வங்கி அமைப்பில் ஏற்படும் பாதிப்புகள், பணக் கொள்கை, நிதி நிலை, தனியுரிமை விவகாரங்கள் குறித்தும் இந்த குறிப்பு விவாதிக்கிறது.
இதுபோக, குறிப்பிட்ட சில பயன்பாடுகளுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் இ-ரூபாய் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. சோதனை திட்டம் விரிவடைய விரிவடைய, இ-ரூபாயின் சிறப்பு அம்சங்கள் மற்றும் பயன்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் இ-ரூபாய் குறிப்பில் உள்ள முக்கிய தகவல்கள்:
- இ-ரூபாய் என்பது ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் இறையாண்மை கொண்ட நாணயம்.
- இ-ரூபாய் என்பது பரிவர்த்தனைகளுக்கும், சட்ட முறை பணமாகவும், குடிமக்கள் சேமித்து வைத்துக்கொள்ளவும், நிறுவனங்கள் மற்றும் அரசு ஏஜென்சிகள் பயன்படுத்தவும் முடியும்.
- இ-ரூபாயை மாற்றி நிஜ ரூபாயாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
- இ-ரூபாயை பயன்படுத்த வங்கிக் கணக்கே தேவையில்லை.
- இதனால் காகித நாணயங்களின் பயன்பாடு குறையும். எனவே, காகித நாணயங்களை அச்சிடுவதற்கான செலவுகளும் குறையும்.
- இ-ரூபாய் மீதான சைபர் அச்சுறுத்தல்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
PF வட்டி எப்போது கிடைக்கும்? வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Share your comments