இன்றைய நவீன உலகை மொபைல் போன் ஆள்கிறது என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு அனைவரது கைகளிலும் மொபைல் போன் இடம் பிடித்து விட்டது. புதுப்புது அம்சங்களுடன் பல வித ரகங்களில், நாளுக்கு நாள் புதிய வகை மொபைல் போன்கள் அறிமுகமாகி கொண்டே இருக்கிறது. முந்தைய காலங்களில் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால், அது அவ்வளவு எளிதாக முடியாது. ஆனால், இன்றோ நினைத்த நொடியிலேயே குறுஞ்செய்தி அனுப்பவும், டயல் செய்து பேசவும் முடிகிறது. அதிலும், அனைவரது மொபைல் போனிலும் வாட்ஸ்அப் செயலி இல்லாமல் இருக்காது.
வாட்ஸ்அப் டிக்கெட் (Whatsapp Ticket)
பள்ளி கால நண்பர்கள் முதல் சிறு வயது நண்பர்கள் வரை யாரைக் கண்டாலும், உடனே நாம் கேட்பது "உன்னோட வாட்ஸ்அப் நம்பர் சொல்லுடா" என்பது தான். திருமண அழைப்பிதழ்களை கூட வாட்ஸ்அப் வழியே அனுப்பி நண்பர்களை அழைக்கும் அளவிற்கு இன்றைய தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. குறுஞ்செய்தி, வீடியோ அழைப்பு, பணம் அனுப்பும் வசதி உள்ளிட்ட பல அம்சங்களை கொண்ட வாட்ஸ்அப்பில், மேலும் ஒரு புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. இனி வாட்ஸ்அப்பிலேயே இரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்வது தான் அந்த அம்சம்.
மும்பை மெட்ரோ நிலையம், வாட்ஸ்அப் அடிப்படையிலான இ-டிக்கெட் வசதியை வழங்கியுள்ளது. வாட்ஸ்அப்பில் மின் டிக்கெட்டுகளை வழங்கும் உலகின் முதல் எம்ஆர்டிஎஸ் (மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம்) மும்பை மெட்ரோ ஒன் ஆகும். நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதை தவிர்ப்பதே இதன் நோக்கம். உலகிலேயே முதன் முதலாக மெட்ரோவிற்கு இ-டிக்கெட் வசதியை ஏற்படுத்தி இருப்பது மும்பை மெட்ரோ தான். இ-டிக்கெட் சேவையில் இணைய பயனர்கள் தங்களின் வாட்ஸ்அப் எண்ணில் இருந்து 'Hi' என டைப் செய்து 9670008889 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் தனது பேமண்ட் சேவையை 40 மில்லியன் என்ற அளவிலிருந்து 100 மில்லியன் பயனர்களுக்கு நீட்டிக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. Gpay, phonepay வரிசையில் வாட்ஸ்அப்பும் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இனி வரும் காலங்களில், மேலும் பல வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால், உலகமே இன்று உள்ளங்கையில் என சுருங்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் படிக்க
Share your comments