தமிழ்நாட்டில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் வருடந்தோறும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 26 சுங்கச் சாவடிகளிலும், மற்ற சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுங்க கட்டணத்தை மாற்றுவது வழக்கம். அதைப் போலவே, இந்த ஆண்டும் நடப்பு மாதத்தில் சுங்க கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது.
மேலும், விதிகளுக்கு உட்பட்டு செயல்படாத சுங்கச் சாவடிகள் விரைவில் அகற்றப்படும் என்று, மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த மாதம் அறிவித்திருந்தார். இந்நிலையில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சுங்கச் சாவடியில், சுங்க கட்டணம் செலுத்தாமல் லாரி ஒன்று வேகமாக கடந்துள்ளது. இந்த லாரியைப் பிடிக்க சுங்கச் சாவடியின் ஊழியர் ஒருவர், லாரியின் பம்பரில் தொங்கியபடி சென்றுள்ள வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகப் பரவியுள்ளது.
சுங்கச் சாவடி (Toll gate)
சுங்கச் சாவடியில், வாகனங்களில் வருவோர் சுங்க கட்டணம் செலுத்துவது வழக்கம். ஆனால், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஒரு லாரி மட்டும் சுங்க கட்டணம் செலுத்தாமல், நிற்காமல் சென்றுள்ளது. இதையறிந்த சுங்கச் சாவடி ஊழியர், எதற்காக லாரி ஓட்டுநர் சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்கிறார் என்று, விரட்டிப் பிடிக்க முற்பட்டார். அப்போது, லாரியின் முன்பகுதியில், சுங்கச்சாவடி ஊழியர் தொற்றிக்கொண்டு சென்ற காட்சியை, அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்ற, அந்த வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
லாரி டிரைவர் (Lorry Driver)
ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில், உருளைக்கிழங்கு ஏற்றிக்கொண்டு, லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தது. அப்போது, வழியில் இருந்த சுங்கச்சாவடிக்கு வந்தது. அந்த லாரி ஓட்டுநரால், ‘பாஸ்ட்டேக்’ வழியாக கட்டணம் செலுத்த முடியவில்லை. அதைத் தொடர்ந்து அபராதம் செலுத்துமாறு லாரி ஓட்டுநரிடம் சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் கேட்டார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
உடனடியாக, லாரியை அங்கிருந்து ஓட்டிச்செல்ல ஓட்டுநர் முயன்றுள்ளார். அதைத் தடுக்க சுங்கச்சாவடி ஊழியர் லாரியின் குறுக்கே நின்று விட்டார். ஆனால், ஓட்டுநர் லாரியை நிறுத்தாமல் ஓட்டிச்செல்ல , என்ன செய்வதென்று, திகைத்து நின்ற ஊழியர் லாரியின் முன்புற பம்பரில் ஏறி தொற்றிக்கொண்டார்.
அதன் பிறகும், லாரியை நிறுத்தாத ஓட்டுநர், கிட்டத்தட்ட 10 கி.மீ. வரை ஒட்டிச் சென்றார். அதுவரையில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள லாரி முன்புற கம்பியை கெட்டியாய் பிடித்தார் சுங்கச்சாவடி ஊழியர். இந்த வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரைலாகப் பரவியது . தகவல் அறிந்து வந்த காவல் துறை, லாரியை துரத்தி ஒருவழியாக மடக்கிப் பிடித்து, ஓட்டுநரை கைது செய்து, சுங்கச்சாவடி ஊழியரை பத்திரமாக மீட்டனர்.
மேலும் படிக்க
குளியலறையில் சமையலறை! சவுதி அரேபியாவில் அதிர்ச்சி சம்பவம்!
உலகிற்கு அடுத்த பேராபத்து: சீனாவில் மனிதருக்கு பரவிய பறவைக் காய்ச்சல்!
Share your comments