ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான தாய்மொழி தின யுனெஸ்கோவின் கருதுகோளாக "பன்மொழிக் கற்றலுக்கு தொழில் நுட்பத்தின் பயன்பாடு" என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
1956ம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தான் மொழியாக வங்க மொழி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, டாக்காவில் நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும், பிப்ரவரி 21ம் தேதி, உலக தாய்மொழிகள் தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை வங்கதேச அறிஞர் ரபீக்குல் இஸ்லாம் 1998ம் ஆண்டு யுனெஸ்கோவில் முன்மொழிந்தார்.
தாய் மொழிக்காக போராடி உயிரிழந்தவர்கள், அதற்கான இயக்கத்தை நினைவுகூறி, அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், பிப்ரவரி 21ம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக யுனெஸ்கோ 1999ம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து, பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு அவர்கள் பேசுகின்ற மொழி அல்லது அவர்களுக்கு புரிகின்ற மொழியில் கல்வி கிடைப்பதில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. இன்றைக்கு உலகம் முழவதும் 7 ஆயிரம் மொழிகள் பேசப்பட்டாலும், பல மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றன, என்பதும் குறிப்பிடதக்கது. ஒரு மொழி அழிந்து விட்டால், ஒரு கலாசாரமும், அறிவு சார் பாரம்பரியமும் அத்தோடு அழிகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் மொழிகளை இணைப்பதும் கற்றல் உள்ளடக்கத்தை உருவாக்குவதும் அவசியமாகும்.
தாய்ப்பாலும் தாய்மொழியும்
ஒரு குழந்தை முதலில் அறிகின்ற ருசி தாய்ப்பாலாகும். அந்த குழந்தை முதலில் உணர்கின்ற மொழி தாய் மொழியாகும். எனவே, தாய்ப்பாலை போல் தாய்மொழியும் நம் உயிர்ப்பானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கருவில் இருக்கும் போதே தாய்மொழிச் சொற்களை குழந்தை கேட்கத் தொடங்குகிறது. நம்முடைய எண்ணம், படைப்பாற்றல் தாய்மொழி வழியாகவே நடக்கும். தாய் மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டால் சிந்தனைத்திறன் பெருகும். ஆகையால் அடிப்படைக் கல்வி என்பது தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். அதுதான் ஒரு அறிவார்ந்த சமூகத்தை தொடரச் செய்யும் என்பது குறிப்பிடதக்கது.
பன்மொழிக் கற்றலுக்கு தொழில்நுட்பம் எவ்வாறு பயன்பாடுகிறது
பன்மொழிக் கற்றலுக்கு தொழில்நுட்பத்தின் பயன்பாடு என்கிற கருதுகோளை யுனேஸ்கோ அறிவித்துள்ளது. இன்றைய தொழில்நுட்பத்தில் யுனிகோட்-டில் அனைத்து மொழிகளையும் எளிதில் கற்றுக் கொள்ள முடியும். பல மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கு இன்றைய தொழில்நுட்பம் பெரும் பயனாக இருக்கிறது.
தாய்மொழியில் கல்வியின் சிறப்பு
ஒரு மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்றால், எந்த சாதனையையும் படைக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. சாதனையாளராக வளர தாய்மொழி வழிக் கல்வி மிக அவசியமானதாகும். குறிப்பாக, ஜப்பான், கொரியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் தாய்மொழி வழிக்கல்வியை வழங்கி பல கண்டுபிடிப்புகளை, சாதனைகளை நிகழ்த்தி வருவதை, நாம் காணலாம். மாறாக வேற்றுமொழியில் பயிற்றுவிக்கப்படும் கல்வி குறைவான பலனைதான் தரும் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
900 தன்னாட்சிக் கல்லூரிகளில் ஆன்லைன் பட்டப்படிப்பிற்கு UGC அனுமதி..
இந்தியாவில் வளர்ந்து வரும் ட்ரோன் சந்தைக்கு, பிரதமர் ஆதரவு உறுதி!
Share your comments