விவசாயிகள் மற்றும் வேளாண் சார்ந்த தொழில் முனைவோரின் நலனில் முக்கியப்பங்கு வகிக்கும் வேளாண் அறிவியல் மையம் (KVK) இந்தாண்டு அதன் பொன்விழாவை சமீபத்தில் பாண்டிச்சேரியில் கொண்டாடியது. அந்த வகையில் தமிழ்நாட்டிலுள்ள கேவிகே-களின் செயல்பாடுகளும், அதனால் பயனடைந்தவர்களின் விவரம் குறித்தும் கிரிஷி ஜாக்ரன் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
இதனிடையே, அரியலூர் மாவட்டத்தில் மதிப்பு கூட்டுமுறையில் சிறந்து விளங்கும் உதயபாரதிக்கு அம்மாவட்ட கேவிகே எந்த வகையில் தொழில் வளர்ச்சிக்கு உதவியது என்பது குறித்து அவர் பல தகவல்களை நம்முடன் பகிர்ந்துள்ளார். உதயபாரதி என்ன மாதிரியான தொழிலில் ஈடுபட்டு வருகிறார், அவர் கேவிகே குறித்து தெரிவித்த கருத்துகள் என்ன? என்பன பின்வருமாறு-
ஹெர்பல் தயாரிப்பு- கௌரவப்படுத்திய விஞ்ஞானிகள்:
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த உதயபாரதி கடந்த 10 வருடங்களாக (PRIYA'S UDHAYAM) என்கிற நிறுவனம் பெயரில் ஹெர்பல் மற்றும் மதிப்பு கூட்டு முறையில் உணவுப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவரின் செயல்பாடுகள் குறித்து அறிந்த அரியலூர் மாவட்டம் சோழமாதேவி பகுதியில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தினை சேர்ந்த விஞ்ஞானிகள் அழகு கண்ணன் மற்றும் சோபானா அவர்கள் நேரடியாக உதயபாரதியினை பாராட்டியதுடன், அவரின் பல முன்னெடுப்புகளுக்கு தகுந்த ஆலோசனையினையும் வழங்கி உள்ளார்கள்.
தொழில் வளர்ச்சி சார்ந்து உதயபாரதியின் முன்னெடுப்புகளை வலுப்படுத்தும் விதமாக சோலார் உலர்த்தினையும் கேவிகே மூலம் பெற்றுள்ளார். மேலும், APEDA வாயிலாக மதிப்பு கூட்டு பொருட்கள் ஏற்றுமதி தொடர்பான பயிற்சியினையும் பெற்றுள்ளார்.
சிறந்த தொழில் முனைவோருக்கான விருது:
மூன்று வருடங்களுக்கு முன்பு, மகளிர் தினத்தன்று ஹெல்த் மிக்ஸ் தயாரிப்பில் சிறந்து விளங்கிய காரணத்திற்காக “சிறந்த தொழில் முனைவோருக்கான” விருதினையும் வழங்கி உதயம் பாரதியை கௌரவப்படுத்தியுள்ளது அரியலூர் மாவட்ட வேளாண் அறிவியல் மையம்.
சமீபத்தில் இந்தியா முழுவதும் “வளர்ச்சி அடைந்த பாரதம்” என்ற நிகழ்வு நடைப்பெற்றது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், அரியலூர் மாவட்ட கேவிகே, கனரா வங்கி, மாவட்ட தொழில் மையம் ஒருங்கிணைந்து நடத்திய நிகழ்விலும் உதயம் பாரதியின் செயல்பாடுகளை பாராட்டி அவரை கௌரவப்படுத்தியுள்ளனர். இதுப்போன்ற பாரட்டுகள் தான் எனக்கு தொடர்ந்து மதிப்பு கூட்டு முறையில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள உத்வேகம் அளித்தது என்றார் உதயபாரதி.
Read also: ஒரே கிணறு- 50 ஏக்கருக்கு சொட்டு நீர் பாசனம்: அசத்தும் சிவகங்கை இளைஞர்!
இதுக்குறித்து அவர் நம்மிடம் தெரிவிக்கையில், “மதிப்பு கூட்டு முறை தொடர்பாக எந்த வகையான சந்தேகம் இருப்பினும் தயங்காமல் கேவிகே விஞ்ஞானிகளிடம் கேட்கலாம். அவர்களும் எந்த பலனும் எதிர்ப்பாரமால், முகம் சுளிக்காமல் நட்பு பாராட்டி விளக்கம் அளிப்பார்கள். இன்று சொல்லிக் கொள்ளும் வகையில், நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம் என்றால், அந்த வெற்றிக்கு முதுகெலும்பாக செயல்பட்டவர்கள் வேளாண் அறிவியல் மையத்தினை சேர்ந்த விஞ்ஞானிகள் தான்” என்றார்.
மேலும் கூறுகையில் ”நான் தற்போது நலங்குமாவு, சீயக்காய், ஹெல்த் மிக்ஸ் (சிறுதானியம்), சோப், பொடி போன்ற தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறோம். இதுக்குறித்து மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்க விருப்பமிருப்பின் தெரிவியுங்கள், அதற்கும் நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்” என வேளாண் அறிவியல் மையத்தினை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்தது எங்களை இன்னும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்றார் உதயபாரதி.
திருச்சி ஆல் இந்தியா ரேடியோவில் உரை:
தொழில் வளர்ச்சிக்கு ஆலோசனைகள் வழங்கி உதவி செய்வதோடு, அரியலூர் மாவட்டத்தில் சிறந்து விளங்கும் பெண் தொழில் முனைவராக உதயபாரதியை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும் வகையிலும் கேவிகே உதவியுள்ளது. திருச்சி ஆல் இந்தியா ரேடியாவில், இந்த வார நட்சத்திரம் என்ற நிகழ்விலும், தினை சார்ந்த மதிப்புக் கூட்டு முறை தொடர்பாகவும் உதயபாரதி பேசுவதற்கு கேவிகே மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது.
பொன்விழா கொண்டாடும் கேவிகே-க்கு தனது வாழ்த்துகளையும் நம் மூலம் பகிர்ந்துள்ளார் உதயபாரதி. அரியலூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் வேளாண் சார்ந்த தொழில் முனைவோர்கள் தங்களது பணி தொடர்பான சந்தேகம் ஏதேனும் இருப்பின் அரியலூர் மாவட்ட வேளாண் அறிவியல் மையத்தினை தயங்காது தொடர்புக் கொள்ளலாம்.
இந்தியாவின் முதல் வேளாண் அறிவியல் மையம், மார்ச் 21 ஆம் தேதி 1974 ஆம் ஆண்டு புதுச்சேரியில் தொடங்கப்பட்டது. அதன்பின், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தனது தடத்தை பதியத்தொடங்கி இன்றளவு நாடு முழுவதும் சுமார் 731 KVK (Krishi Vigyan Kendra) செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more:
மின்கம்பம் அருகே நாற்றங்கால் தேர்வு செய்தால் ஆபத்தா? உழவியல் முறையில் IPM!
ONDC: விவசாயிகளின் கூட்டமைப்பான FPO லாபம் பார்க்க சூப்பர் வழி!
Share your comments