போபாலினை சேர்ந்த இளம் விவசாயி அவகேடோ பழம் (வெண்ணெய் பழம் என தமிழில் அறியப்படுகிறது) சாகுபடி மூலம் ஆண்டுக்கு 1 கோடி வரை சம்பாதிக்கிறார். வணிகவியல் துறையில் இயங்கி வந்த ஹர்ஷித், அவகேடோ சாகுபடியில் இறங்கியதன் பின்னணி என்ன? அதுவும் அவர் இஸ்ரேலிய முறையினை கடைபிடிக்க தொடங்கியது ஏன் போன்ற பல தகவல்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
ஹர்ஷித் கோதா போபாலில் பிறந்து வளர்ந்தவர். அவர் 2013-20 கால இடைவெளியில் இங்கிலாந்திலுள்ள பாத் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் படிப்பைத் தொடர்ந்தார். விவசாயியாக மாறியதன் பின்னணி குறித்து ஹர்ஷித் கூறுகையில், "நான் படிப்பிற்காக இங்கிலாந்து சென்றபோது, அவகேடோ பழங்கள் எளிதாகக் கிடைத்தன. ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி ஆகியவற்றில் நான் நாட்டம் கொண்டதால், சத்துக்கள் நிறைந்த பழத்தை விரும்ப ஆரம்பித்தேன். இருப்பினும், கோடை காலத்தில் நான் இந்தியாவிற்கு வரும்போதெல்லாம், நல்ல அவகேடோ பழங்களை என்னால் கண்டறிய முடியவில்லை, மேலும் கிடைக்கும் அவகேடோ பழங்கள் மிகவும் விலை அதிகமாக இருந்தது." இவை தான் அவகேடோ விவசாயத்தில் ஈடுபட காரணமாக விளங்கியது.
இஸ்ரேலிய முறையில் அவகேடோ சாகுபடி:
பழங்களின் இருப்பு மற்றும் விலையில் உள்ள ஏற்றத்தாழ்வு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டதில், இங்கிலாந்தில் கிடைக்கும் அவகேடோ பழங்கள் இஸ்ரேலில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை கண்டறிந்துள்ளார் ஹர்ஷித். வறண்ட மற்றும் வெப்பமான நாடான இஸ்ரேல் அவகேடோ பழங்களை எவ்வாறு பயிரிட்டு ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்கிறது என்கிற உண்மையைக் கண்டு ஆச்சரியமடைந்த ஹர்ஷித், அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, போபாலில் அவகேடோ பழத்தை பயிரிட முடிவு செய்தார்.
இஸ்ரேல் நாட்டில் அவகேடோ சாகுபடி பயிற்சி:
அவகேடோ சாகுபடியை இந்தியாவுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன், ஹர்ஷித் இஸ்ரேலில் உள்ள அவகேடோ விவசாயிகளைத் தொடர்பு கொள்ளத் தொடங்கினார். அப்போது அவர் பலரிடம் பேசினார். சிலர் அவருக்கு கற்பிக்க மறுத்தனர், மற்றவர்கள் நிறைய பணம் கேட்டார்கள். இருப்பினும், ஒரு நபர் அவரை வழிநடத்த ஒப்புக்கொண்டார்.
மேலும் ஒரு இஸ்ரேலிய கிராமத்தில் தங்குவதற்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்தார். ஹர்ஷித் அங்கு சென்று ஒன்றரை மாதங்கள் தங்கி பயிற்சியில் ஈடுபட்டு அவகேடோ சாகுபடிக்கு இஸ்ரேலியர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் மற்றும் நடைமுறைகள் பற்றிய போதுமான அறிவைப் பெற்றார்.
சிக்கலில் சிக்கிய ஹர்ஷித்:
பயிற்சியை முடித்த ஹர்ஷித் இந்தியா திரும்பினார். இருப்பினும், மண்ணின் நிலை, நீர் இருப்பு மற்றும் காலநிலை ஆகியவற்றை ஆய்வு செய்வதே மிகப்பெரிய தடையாக இருந்தது. இதற்காக இஸ்ரேலில் இருந்து தனது வழிகாட்டியை தனது சொந்த செலவில் இந்தியாவிற்கு வரவழைத்தார். போபாலில் உள்ள மண் மற்றும் தட்பவெப்ப நிலைகளை மதிப்பீடு செய்த வழிகாட்டி, அங்கு சில அவகேடோ வகைகளை வெற்றிகரமாக வளர்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் உயர்தர அவகேடோ செடிகளை கண்டுபிடிப்பது சவாலான பணியாக இருந்தது. இதனையடுத்து 2019 ஆம் ஆண்டு இஸ்ரேலில் இருந்து உள்ளூர் காலநிலைக்கு ஏற்ற அவகேடோ வகைகளை இறக்குமதி செய்ய ஹர்ஷித் முடிவு செய்தார்.
இறக்குமதி செயல்முறை அவர் நினைத்தது போல் உடனடியாக நடக்கவில்லை. COVID-19 தொற்றுநோயால் இந்தியா மற்றும் இஸ்ரேல் நாட்டில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. பல தடைகளுக்குப் பிறகு, இறுதியாக 2021 இல், இஸ்ரேலில் இருந்து அவகேடோ செடிகளை இந்தியாவிற்குள் கொண்டு வந்து, 2023-ல் தனது தோட்டங்களில் நட்டினார் ஹர்ஷித். நடவு செய்த 14 மாதங்களில் செடிகள் காய்க்க ஆரம்பித்தன.
இஸ்ரேலிய விவசாயிகள் பயன்படுத்தும் Netafim UniRam சொட்டு நீர் பாசன அமைப்பினை இங்கும் செயல்படுத்தினார். நீர் பாசன முறை மூலம் தாவரங்களுக்கு உரங்களை வழங்கும் முறை. UniRam என்பது ஒரு தொழில் நுட்ப முறையாகும். இது ஒவ்வொரு தாவரமும் ஒவ்வொரு நாளும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உரத்தைப் பெறுவதை உறுதி செய்கிறது. இந்தியாவில் தினசரி உரமிட வேண்டிய ஒரே பயிர் அவகேடோ மட்டுமே என்றும் ஹர்ஷித் தெரிவித்தார்.
வருமானம் எப்படி?
தற்போது ஹர்ஷித் 10 ஏக்கர் நிலத்தில் அவகேடோ சாகுபடி செய்து ஆண்டுக்கு ரூ.1 கோடி வருமானம் ஈட்டி வருகிறார்.
ஹர்ஷித் கூறும்போது, “அந்தச் செடியின் விலை அதன் வயதைப் பொறுத்து விலை போகிறது. உதாரணத்திற்கு, ஒன்றரை வயதுள்ள செடிகள் ரூ.2,500-க்கும், இரண்டு வருடச் செடிகள் ரூ.3,000-க்கும் விற்கப்படுகிறது. அவகேடோ பழங்களின் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விலையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.250-300 ஆகவும், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ அவகேடோ பழம் ரூ.200-250 ஆகவும் உள்ளது. ஒரு அவகேடோ பழம் 250-300 கிராம் எடை கொண்டது. ஒவ்வொரு செடியும் 40-50 ஆண்டுகள் பழம் தரும். வருமானம் பல்வேறு வகையினைச் சார்ந்தது, ஆனால் சராசரியாக ஒரு நபர் ஒரு ஏக்கருக்கு 6-12 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.
Read more: STI HUB திட்டம்: மீன் கழிவுகளை உரமாக மாற்றும் கேரளப் பெண்ணிற்கு குவியும் பாராட்டு!
மேலும் கூறுகையில், “கடந்த மூன்று ஆண்டுகளில், இந்தியாவில் அவகேடோ இறக்குமதி சுமார் 400% அதிகரித்துள்ளது. எனவே, சந்தையில் அவகேடோ பழங்களை விற்பனை செய்வது ஒரு பிரச்சினை அல்ல. எனவே, விவசாயிகள் தங்கள் விவசாயத்தை மறுபரிசீலனை செய்வது நல்லது. அதிக லாபம் தரக்கூடிய பயிர்களை பயிரிடுங்கள். அவுரிநெல்லிகள் மற்றும் அவகேடோ பழங்கள் வேகமாக வளர்ந்து வரும் சந்தையை கொண்டுள்ளது, ”என்றும் அவர் குறிப்பிட்டார்.
Read more:
Automatic Drip Irrigation system- விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு தருமா?
வருடத்திற்கு 9 முறை அறுவடை- அடர்நடவு முறையில் முருங்கையில் இலை உற்பத்தி!
Share your comments