நஷ்டமடைந்த விவசாயிகள் என தினந்தோறும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கும் நிலையில் எங்கையோ லாபம் பார்த்த விவசாயி என செய்திகள் வரும் போது நம் புருவம் விரிவது இயல்பு தான். அப்படிதான் இங்கு ஒரு விவசாயி வெறும் ரூ.10,000 மட்டும் முதலீடு செய்து இரண்டு மாதங்களில் ரூ.30,000 சம்பாதித்துள்ளார்.
ஹரியானவைச் சேர்ந்த கன்வால் சிங் சௌஹான் என்கிற விவசாயி 10,000 ரூபாய்க்கும் குறைவான முதலீட்டில் பேபி கார்ன் விவசாயத்தில் ஈடுபட்டு இரண்டே மாதங்களில் 30,000 ரூபாய் சம்பாதித்துள்ளார். இவர் மேற்கொண்ட விவசாய முறை மற்றும் எப்படி குறுகிய காலத்தில் லாபம் பார்க்க முடிந்தது என்பதை இங்கு காணலாம்.
வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான ICAR-Indian Institute of Maize Research அறிக்கையின்படி, ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள அடெர்னா கிராமத்தில் ஒவ்வொரு விவசாயியும் பேபி கார்னை பயிரிடுகின்றனர். அடெர்னா கிராமத்தில் பேபி கார்ன் பயிரிடும் ஒவ்வொரு விவசாயியும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து விதைகளை கிலோ ஒன்றுக்கு ரூ.160 மற்றும் ரூ.200 என்கிற விலையில் வாங்கி வருகின்றனர்.
கைக்கொடுத்த ஹைபிரிட் விதை:
ஹெச்எம் 4 பேபி கார்ன் ஹைப்ரிட் (HM 4 baby corn hybrid) விதை பற்றி டாக்டர் சைன் தாஸ் என்பவரிடமிருந்து விவசாயி சௌஹான் சில தகவல்களை பெற்றுள்ளார். அதன்பின் விவசாயி சௌஹான், HM 4 விதையை ஒரு கிலோ 50 ரூபாய் என்கிற அளவில் பெற்றுள்ளார். இதனால், அவருக்கு சாகுபடி செலவு குறைந்தது. இங்கிருந்து தான் ஹரியானா விவசாயின் லாபம் தொடங்குகிறது.
இந்த கலப்பினத்தின் கவர்ச்சிகரமான நிறம், அளவு மற்றும் சுவை காரணமாக, டெல்லியின் ஆசாத்பூர் மண்டியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன்மூலம் இந்த வகை பேபி கார்னின் தேவை அதிகரித்தது.
பயிரின் ஆயுட்காலம் முடிந்த 60 நாட்களுக்குள், ஏக்கருக்கு ரூ.10,000-க்கும் குறைவாக முதலீடு செய்த சௌஹான் , ஏக்கருக்கு ரூ.30,000-க்கு மேல் சம்பாதித்துள்ளார். இப்போது அண்டை விவசாயிகளும் சௌஹானின் HM 4 பேபி கார்ன் விவசாயத்தை மேற்கொண்டு நல்ல லாபத்தைப் பெற்று உள்ளனர். இந்த கலப்பினமானது ஹரியானா விதை மேம்பாட்டுக் கழகத்தால் (HSDC) உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்குக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தையில் டிமாண்ட் ஆகும் பேபி கார்ன்:
பேபி கார்னில் கார்போஹைட்ரேட், கால்சியம், புரோட்டீன்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன, அவற்றை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம். உணவுச் சந்தையில் பேபி கார்னுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது.
பேபி கார்ன் உற்பத்தியில் இருந்து விவசாயிகள் நான்கு மடங்கு லாபம் ஈட்டலாம். இந்த பயிர் சாகுபடிக்கு அனைத்து பருவங்களும் ஏற்றது. அதன் அறுவடைக்குப் பிறகு, மீதமுள்ள தாவரங்களை விலங்குகளுக்கு தீவனமாக அளிக்கவும் பயன்படுத்தலாம். காய்கறிகள், பயறு வகைகள், பூக்கள் போன்றவற்றுடன் ஊடுபயிராகவும் பயிரிட்டு கூடுதல் வருவாய் ஈட்டலாம்.
மேலும் காண்க:
இனி கடன் கிடைப்பது ஈஸியா? விவசாயிகளுக்காக 3 புதிய முன்னெடுப்பு
Share your comments