பொறியியல் துறையில் பி.எச்டி படிப்பு முடித்தாலும் விவசாயத்தின் மீது தீராத காதல் கொண்டு, மதுரை திருமங்கலத்தில் 300 விவசாயிகளை ஒருங்கிணைத்து வாகை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனமாக நபார்டு அங்கீகாரம் பெற்று பதிவு செய்துள்ளார் வாகைக்குளத்தைச் சேர்ந்த ராம்குமார்.
படிப்பும் தொழிலும்
திருமங்கலத்தில் 100 விவசாயிகளை கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் முதலில் ஒருங்கிணைத்தோம். தற்போது 300 விவசாயிகள் இணைந்துள்ளனர். மானாவாரி வேளாண் மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் ரூ.10 லட்சத்திற்கு கருவிகளை வாங்க வேளாண் பொறியியல் துறை உதவியது. உதவி பொறியாளர் காசிநாதன் வழிகாட்டினார். மாட்டுத்தீவனம் தயாரிக்கும் இயந்திரம், மாவு, ஈரமாவு அரைக்கும் இயந்திரம், சிறுதானியங்கள், பாசிப்பயறு, நவதானியங்களை சுத்தம் செய்யும் இயந்திரம் வாங்கினோம்.
திருமங்கலத்தில் மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, துவரை சாகுபடியாகிறது. முதற்கட்டமாக விவசாயிகளுடன் பேசி 2000 ஏக்கர் மக்காச்சோளத்தை வாங்கி கொண்டிருக்கிறோம்.
அறுவடை செய்த வயலுக்கே சென்று நாங்களே எடையிட்டு சாக்கில் எடுத்து வருகிறோம். இதற்கு விவசாயிக்கு சாக்கு, போக்குவரத்து செலவு, கமிஷன் என ஒரு காசு கூட செலவில்லை. எடையும் துல்லியமாக அளவிடுகிறோம். இதனால் விவசாயிகளுக்கும் எங்களுக்கும் நிறைவான லாபம் கிடைக்கிறது. இந்த மக்காச்சோளத்துடன் மற்ற பொருட்களை கலந்து கலப்படமில்லாத மாட்டுத்தீவனம் தயாரித்து கிலோ ரூ.25க்கு விற்கிறோம்.
மசாலா பொடி, அரிசி, கோதுமை மாவை அரைத்து கலப்படமின்றி விற்பதால் சுற்றியுள்ள மக்கள் விரும்பி வாங்குகின்றனர். வங்கியோடு இணைந்து விவசாயிகளுக்கு கறவைமாட்டு கடன், பயிர்க்கடன் வாங்கித் தருகிறோம். என்னென்ன விதைகள் தேவை என விவசாயிகளிடம் கேட்டறிந்து மொத்த விலைக்கு வாங்கி லாப நோக்கமின்றி விற்கிறோம். அரசின் மானிய திட்டங்களை ஒவ்வொரு விவசாயியிடமும் தெரிவிக்கிறோம்.
கோடை உழவு
சமீபத்தில் கோடை உழவு மானியத் திட்டத்தில் வாகைக்குளம் கிராமத்தில் மட்டும் 100 விவசாயிகள் பயன்பெற்றனர். விவசாயத் தொழில்நுட்பங்களையும் கற்றுத் தருகிறோம். விவசாயிகள் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதற்கு நாங்கள் உதாரணம் என்றார்.
தொடர்புக்கு - 99524 73111
மேலும் படிக்க
சம்பா பருவ பயிர்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்!
Share your comments