வேளாண் உலகில் வியத்தகு பசுமைப் புரட்சி செய்து தாவரவியல் துறையில் ஓர் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளார் கோவையை சேர்த்த ஈடன் நர்சரி கார்டன்ஸ் உரிமையாளரான எஸ். ராஜரத்தினம்.
பொதுவாக ஒரு தாவர வளர்ச்சிக்கு அடிப்படை தாவரத்தின் விதை. பண்டைய காலங்களில் பறவைகள் விதைகள் மூலமே தாவரங்களை வளர்த்தன. பின் மனிதனின் முயற்சியால் மண் பதியம், விண் பதியம், ஓட்டு கட்டுதல் மற்றும் திசு வளர்ப்பு என்பதன் மூலம் தாவரங்கள் வளர்ந்து வருகின்றன.
செடி ஒன்று வளர வளமான மண், நீர் மற்றும் சூரிய ஓளி ஆகியன அடிப்படையாகும். ஆனால் இன்று ராஜரத்தினம் அவர்களின் முயற்சியால் விதையில்லாமல் செடியை உருவாக்கி உலகையே தன் பக்கம் திருப்பி உள்ளார். இலையை பறித்து நட்டால் அது வேர் விட்டு செடியாகும் என்பதை கண்டுபிடித்து அதை நிரூபித்தும் காட்டியுள்ளார்.
எவ்வித கலப்பும் இல்லாமல் புதிதாக இலை பரப்புதல் மூலம் அதிக மகசூல் தரக் கூடிய தாவர, மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய இயலும் என்கிறார். இதுப்பற்றி அவர் கூறுகையில், நான் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பண்ணைத் தொழில்நுட்பத்தில் இளங்கலை முடித்துவிட்டு, முதுகலை பயின்று வருகிறேன். குறைந்த செலவில் முற்றிலும் புதிதாக தாவரங்களை உருவாக்க வேண்டும் என முயற்சி மேற் கொண்டு வந்தேன்.
ஓர் தாவரத்தில் உள்ள இலைகளைப் பறித்து அவற்றை நட்டு செடிகளாக உருவாக்க முடியுமா என முயற்சித்தேன். முதலில் பறித்த இலைகளை இயற்கையான முறையில் இளநீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின்னர் 30 டிகிரி வெப்பநிலை மற்றும் 70 சதவீத ஈரப்பதம் உள்ள ஓர் குடில் போன்ற சூழ்நிலையில் வைத்து பராமரித்து வந்தால் 4 முதல் 5 வாரங்களில் இலையில் இருந்து வேர் வளரத் தொடங்கி, 8 முதல் 10 வாரத்தில் அது ஓர் செடியாக வளரத் தொடங்கி விடும் என்கிறார்.
லட்சக்கணக்கான மரங்களை உருவாக்க, லட்சக்கணக்கான விதைகள் தேவைப்படும். ஆனால் அது சற்று கடினமானது. இம்முறையில் விருட்சங்களை உருவாக்குவது எளிது. ஓர் மரத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான இலைகள் இருப்பதால், அவற்றையே விதையைப் போல பயன்படுத்தலாமே என்ற யுக்தியின் அடிப்படையில் முயற்சித்தேன். தற்போது இதன் மூலம் உற்பத்திச் செலவு 30 சதவீதம் குறைந்ததுடன், அதிக மகசூலும் கிடைக்கிறது என்றார்.
ராஜரத்தினத்தைப் பாராட்டி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழத்தில் உள்ள டைரக்ரேட் ஆப் அக்ரி பிசினஸ் டெவலப்மெண்ட் இயக்ககம், மத்திய அரசின் சிறு, குறு, மத்திய தொழில்களுக்கான அமைச்சகம் 6.25 லட்சம் ரூபாயை இவருக்கு நிதியாக வழங்கியுள்ளது. இவர் தன்னுடைய புதிய கண்டுபிடிப்புக்காக பேட்டன்ட் உரிமை கோரி விண்ணப்பித்திருக்கிறார். புதிய முயற்சியாக இலை வழி நாற்று உற்பத்தியின் மூலம் கலப்படம் இல்லாத மரபணு தூய்மையான நாற்றுகள் கிடைக்கின்றன என்றார். இந்த முறையில் கொய்யா, நாவல் மரங்களை உருவாக்கியுள்ளனர். தற்போது இலை வழி நாற்று உற்பத்தி முறையில் வேப்ப மரக் கன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இம்முறையில் அழிவின் விளிம்பில் இருக்கும் பல்வேறு தாவர வகைகளை மீட்டெடுக்க இயலும் என்கிறார். இவரது ஈடன் நர்சரி கார்டனில் வேளாண் கல்லாரி மாணவ, மாணவியருக்கு புதுமையான நாற்று உற்பத்தி முறைகள் குறித்து பயிற்சி பட்டறை சிறப்பு வகுப்புகள் எடுத்து வருகிறார். மரக்கன்று வளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் நடத்தி வரும் இவருக்கு பல்வேறு விருதுகள், பல்வேறு அமைப்புகளால் வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது இந்தியாவிலேயே முதல் சான்றிதழ் பெற்ற ஆர்கானிக் நர்சரியாக ஈடன் நர்சரி கார்டன்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவருடைய பண்ணையில் நாற்றுகளை பெற விரும்புவோர் அல்லது பயிற்சிபெற விரும்புவோர் கீழ் கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ராஜரத்தினம்
23-15, கருப்பாயம்மாள் பண்ணை,
வெள்ளிபாளையம் சாலை,
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம்
9486094670
edennurserygardens@gmail.com
www.edunnurserygardens.com
நன்றி: வலைத்தகவல்
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments