மூன்றாண்டுகளாக இயற்கை முறையில் பப்பாளி, கொய்யா சாகுபடி செய்கிறேன். சந்தைக்கு போனால் தனியாக இயற்கை பழங்களுக்கு மதிப்பில்லை. ஆனால் மக்களுக்கு நல்லது கொடுக்கிறோம் என்ற சந்தோஷம் மிச்சமாகிறது என்கிறார் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள வகுரணி கிராம விவசாயி கிருஷ்ணகுமார். இயற்கைக்கு மாறிய பின் கிடைத்த பலன்களை அவர் கூறத் தொடங்கினார்.
என்னிடம் ஒன்பதரை ஏக்கர் நிலமுள்ளது. 20 ஆண்டுகளாக நெல், பருத்தி, கரும்பு, கடலை, வாழை, மரவள்ளிக்கிழங்கு, காய்கறி என சாகுபடி செய்யாத பயிர்களே இல்லை. ஒவ்வொன்றை சாகுபடி செய்யும் போதும் புதுவித அனுபவம் கிடைத்தது. நெல், பருத்தி பயிரிட்டால் விலை கிடைக்காமல் நஷ்டம், பூச்சிகளால் சேதம் என ஏதாவது பிரச்னை தொடர்ந்து கொண்டிருந்தது. அதன் பின் நிரந்தரமாக தோட்டக்கலை பயிர்களுக்கு மாறிவிட்டேன்.
பப்பாளி சாகுபடி (Papaya Cultivation)
ஒன்றரை ஏக்கரில் 'ரெட் லேடி' ரக பப்பாளி பயிரிட்டுள்ளேன். மரத்திற்கு மரம் ஏழடி இடைவெளியில் நட்டேன். நட்ட எட்டாவது மாதத்திலிருந்து காய்க்கிறது. பழக்கன்று, உரம், குப்பை உரம், பயோ உரம் என செலவு மட்டும் ரூ.ஒரு லட்சம் ஆனது. தற்போது ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் வரை லாபம் நிற்கிறது. மூன்றாண்டுகள் வரை பப்பாளி மரம் பலன் தரும்.
கொய்யா (Guava Cultivation)
3 ஏக்கரில் தைவான் பிங்க் ரக கொய்யா நட்டுள்ளேன். ஆறுக்கு ஆறடி அடர் நடவு முறையில் நட்டேன். ஆண்டுக்கு இருமுறை கவாத்து செய்கிறேன். சீசன் என்றில்லாமல் ஆண்டு முழுவதும் பழங்கள் உற்பத்தியாகிறது. ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது. இதற்கும் மண்புழு உரம், வேப்பம்புண்ணாக்கு, சூடோமோனஸ், மட்கிய தொழுஉரம் தான் நிலத்திற்கு இடுகிறேன். கொய்யா 10ஆண்டுகள் பலன் தரும். உயிர் பூச்சிக்கொல்லி மருந்தை தயிரில் கலந்து பயிர்களுக்கு தெளித்து பூச்சிகளை விரட்டுகிறேன்.
ஒன்றரை ஏக்கரில் எலுமிச்சை நட்டு ஓராண்டாகிறது. இன்னும் ஒன்றரை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஒன்றரை ஏக்கரில் உழுது நிலப்போர்வை அமைத்து பப்பாளியும் தர்பூசணியும் பயிரிட உள்ளேன். நிலத்தை இரண்டடி அகல மேடாக்கி அதன் மேல் சொட்டுநீர் குழாய் வைத்து பாலிதீன் ஷீட்டால் மூடியுள்ளேன். பாலிதீன் சீட்டில் ஆங்காங்கே துளையிட்டு பப்பாளி நாற்று மற்றும் தர்பூசணி விதைகளை நட வேண்டும். தண்ணீர் சொட்டுநீராக கிடைக்கிறது. இதில் களை என்பதே வளராது என்பதால் ஆண்டுக்கு ரூ.5000 வரை குறையும். பப்பாளி வளர்ந்து பலன்தர எட்டு மாதங்களாகும். அதற்குள் மூன்று முறை தர்பூசணி பயிரிட்டு 2 மாதங்களில் அறுவடை செய்து விடலாம்.
இயற்கை விவசாயம் (Organic Farming)
ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல் மூன்று ஆண்டுகளாக இயற்கை பழங்களை உற்பத்தி செய்கிறேன். சந்தையில் இதற்கென கூடுதல் விலை கிடைக்கவில்லை. மார்க்கெட்டிங் துறையில் கவனம் செலுத்த முடியாததால் சாதாரண விலைக்கே விற்கிறேன். அதுவே லாபத்தில் கட்டுப்படியாகிறது என்றார்.
மேலும் படிக்க
சின்ன வெங்காயம் ஏற்றுமதி 487% உயர்வு!
அங்கக பயிர் மேலாண்மையில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நுட்பங்கள்!
Share your comments