மஹிந்திரா டிராக்டர்ஸ் 60 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதிலிருந்து, தற்போது வரை இந்திய விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள பரிணாம வளர்ச்சியில் உறுதியான பங்களிப்பை அளித்து வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் டிராக்டர் எண்ணிக்கையானது '40 லட்சம் மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை’ கடந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய டிராக்டர் உற்பத்தியாளராக (by volume) விளங்கும் மஹிந்திரா இதனை கொண்டாடும் வேளையில் இன்னும் பல சாதனைகளை எதிர்காலத்தில் படைக்க தயாராகி வருகிறது. பல தசாப்தங்களாக இந்த நிகரற்ற சாதனையை மஹிந்திரா டிராக்டர் அடைந்ததன் பின்னணியில் முக்கிய காரணமாக விளங்குவது, விவசாயப் பொருளாதாரத்தை கையாளும் விவசாயிகளின் ஆதரவினையும், நம்பிக்கையையும் ஒரே சமயத்தில் பெற்றது தான்.
பெருமைமிகு தருணமிது: ஹேமந்த் சிக்கா
மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட், பண்ணை உபகரணத் துறையின் தலைவர் ஹேமந்த் சிக்கா இதுக்குறித்து கூறுகையில், “விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்கிற எங்கள் நோக்கத்தின் அடிப்படையில், மஹிந்திரா டிராக்டரின் விற்பனை 40 லட்சம் யூனிட்களை கடந்துள்ளதை கண்டு பெருமிதம் கொள்கிறோம். 6 தசாப்தங்களாக டிராக்டர் உற்பத்தி, 4 தசாப்களாக டிராக்டர் விற்பனையில் முன்னணி நிறுவனமாக விளங்குவதையும் இந்த தருணத்தோடு இணைத்து கொண்டாட விரும்புகிறோம். எங்களது வெற்றிப் பயணத்தில் பயணிக்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கும், ஒவ்வொரு நாளும் எங்களை ஊக்குவிக்கும் விவசாயிகள், தொழில்முறை பங்குத்தாரர்கள் மற்றும் எங்களது துறை சார்ந்த குழுக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
1963 ஆம் ஆண்டு மஹிந்திரா & மஹிந்திரா தனது முதல் டிராக்டரான மஹிந்திரா பி-275 மூலம் விவசாயத் துறையில் நுழைந்தது. மஹிந்திரா டிராக்டர்ஸ் தற்போது வரை 390-க்கும் மேற்பட்ட டிராக்டர் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் இந்தியா முழுவதும் 1200+ டீலர் பார்ட்னர்களின் ஆதரவோடு வலுவான நெட்வொர்க்கை நிறுவியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு வகையான விவசாய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மஹிந்திரா தொடர்ந்து இயங்கி வருகிறது.
2004, 2013, 2019 மற்றும் நடப்பாண்டு (2024) முறையே 10, 20, 30 மற்றும் 40 லட்சம் வாடிக்கையாளர்களின் ஆதரவினை பெற்று மஹிந்திரா டிராக்டரின் வளர்ச்சி வேகமெடுத்துள்ளது. மஹிந்திரா டிராக்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விக்ரம் வாக் கூறுகையில், “இது நம் அனைவருக்கும் முக்கியமான தருணம். 40 லட்சம் டிராக்டர் டெலிவரிகள் என்பது எங்கள் பிராண்டின் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கை, இந்திய விவசாயம் குறித்த எங்களது ஆழமான புரிதல் மற்றும் எங்களின் உலகளாவிய நற்பெயர் ஆகியவற்றுக்கு வலுவான சான்றாகும்” என்றார்.
மஹிந்திராவின் எதிர்காலத் திட்டம்:
”இவ்வளவு தூரம் பயணித்துள்ளது உற்சாகமாகவும், அருமையாகவும் இருக்கும் வேளையில், மஹிந்திரா டிராக்டர்கள், இந்திய நிலப்பகுதியின் எல்லைகளுக்கு அப்பாலும் விவசாய நிலப்பரப்புகளில் தடம் பதித்துள்ளன. உலகெங்கிலும் உள்ள 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்களுடன் கூட்டாண்மை, ஒத்துழைத்தல் மற்றும் புதிய முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் தனக்கென ஒரு உலகளாவிய இடத்தை பெற்றுள்ள மஹிந்திரா டிராக்டர்ஸ் இப்போது அதன் விரிவான தயாரிப்புகளின் பட்டியலை சர்வதேச சந்தைகளுக்கு அறிமுகப்படுத்த தயாராக உள்ளது."
Read also: தாவர வளர்ச்சிக்கு உதவும் 5 ஹார்மோன்கள்- முழுவிவரம் காண்க!
"தற்போது மஹிந்திரா டிராக்டர்களுக்கு இந்தியாவிற்கு வெளியே மிகப்பெரிய சந்தையாக அமெரிக்கா இருந்தாலும், ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் சந்தை விரிவாக்கங்கள் முறையே இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டிற்குள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்” என்றார் விக்ரம் வாக்.
மேலும் கூறுகையில், "கடந்த 5 வருடங்களாக நாங்கள் மிக வேகமாக மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை பெற்றிருந்தாலும், உலகளாவிய நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் நிகரற்ற நம்பகத்தன்மையோடு, எங்கள் வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளினை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தி தொடர்ந்து பணியாற்றுவோம். மேலும் நமது விவசாயிகள் எழுச்சி பெற உதவிகரமாக இருப்போம்” என விக்ரம் வாக் தெரிவித்துள்ளார்.
Read more:
வெப்ப அலை: கால்நடை கொட்டகையினை எப்படி ரெடி செய்வது?
TNAU: நெல் வயலில் உரமிடும்- களையெடுக்கும் இயந்திர வடிவமைப்புக்கான தேசிய காப்புரிமை!
Share your comments