ஓணம் சீசனுக்குப் பிறகு கேரளா முழுவதும் காய்கறி மற்றும் பழ விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்வதாக செய்திகள் வரும் நிலையில், திருச்சூரில் உள்ள மட்டத்தூர் பஞ்சாயத்து விவசாயிகள் வேளாண் விளைப்பொருட்கள் விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திருவோணத்திற்கு 10 நாட்களுக்கு முன்பு தொடங்கிய ஓணம் சீசனில், காய்கறி மற்றும் பழங்கள் மேம்பாட்டு கவுன்சில் கேரளாவின் (VFPCK- Vegetable and Fruit Promotion Council Keralam) 2 உழவர் சந்தை தளங்களும் நேந்திரன் வாழை உட்பட காய்கறிகள் மற்றும் பழங்களின் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. 10 நாட்களில் மொத்த வசூல் 1 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
மலையாள மாதமான சிங்கம் மாதத்தின் முதல் ஆண்டைக் குறிக்கும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி மட்டும், மட்டத்தூரில் உள்ள VFPCK விற்பனை நிலையங்களில், நேந்திரன் வாழைப்பழம் கிட்டத்தட்ட 25 டன்கள் மொத்தம் ரூ.15.50 லட்சத்திற்கு விற்பனையானது. மட்டத்தூர் பஞ்சாயத்தில் மட்டும் சுமார் 350 ஏக்கரில் காய்கறிகளையும், சுமார் 250 ஏக்கரில் வாழைப்பயிரையும், ரம்புட்டான் போன்ற பிற பயிர்களும் பயிரிடப்பட்டு வருகிறது. அப்பகுதியில் 10,000-க்கும் அதிகமானோர் விவசாயத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“மட்டத்தூர் ஊராட்சியில்தான் மாநில அரசின் வேளாண் தகவல் மேலாண்மை அமைப்பில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள ஊராட்சியில், மட்டத்தூர் ஊராட்சியில் உள்ளவர்களில் பாதி விவசாயிகள் கூட இல்லை. விவசாயம் முக்கிய வருவாய் ஆதாரமாக இருக்கும் என்பதை, மட்டத்தூர் விவசாயிகள் நிரூபித்துள்ளனர்'' என மட்டத்தூர் கிரிஷி பவன் வேளாண் அலுவலர் உன்னிகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “மட்டத்தூரில் காய்கறி விவசாயம் மூலம் பட்டதாரி இளைஞர் ஒருவர் ஆண்டுக்கு 38 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார். இது விவசாயத்தின் மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வத்திற்கும், இங்குள்ள மண்ணின் வளத்திற்கும் ஒரு சான்று" என்று உன்னிகிருஷ்ணன் கூறினார்.
2009-ல், அப்போதைய புதுக்காடு எம்எல்ஏ சி.ரவீந்திரநாத் முன்முயற்சியில், மட்டத்தூரில், 'கதலி' ரக வாழைகளை சாகுபடி செய்து, குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு வழங்க, 'காதலிவனம்' திட்டம் தொடங்கப்பட்டது. கொரோனா காலத்தின் போது கோயில் மூடப்பட்டிருந்ததால் வழக்கமான விநியோகம் பாதிக்கப்பட்டது. தற்போது நிலைமை சீரடைந்துள்ள நிலையில் முழு அளவிலான 'கதலி' விவசாயத்தை மீண்டும் தொடங்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர் என்றார்.
இங்கு விளைவிக்கப்படும் நேந்திரன் வாழைத்தார்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் குறைந்த விலையில் கிடைப்பதால், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சமீப காலமாக மட்டத்தூருக்கே நேரடியாக வந்து வாங்கிச் செல்கின்றனர். இங்குள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், ஊராட்சியில் அறுவடை செய்யப்படும் வாழையிலிருந்து சிப்ஸ் மற்றும் எனர்ஜி பானங்களைத் தயாரிக்கிறது.
மேலும் காண்க:
இறால் வளர்ப்பு விவசாயிகளுக்கு AIC சார்பில் ஒரு நற்செய்தி
நிபா வைரஸ் எதிரொலி- பள்ளி,கல்லூரிகளுக்கு செப்.24 வரை விடுமுறை
Share your comments