விவசாயத்தில் லாபம் பார்க்க முடியாமல் தவித்து வந்த தந்தைக்கு உதவுவதற்காக தான் செய்து வந்த பத்திரிக்கையாளர் வேலையை விட்டுவிட்டு, பசுமைக்குடில் மூலம் திறம்பட வேளாண் பணிகளை மேற்கொண்டு சமீபத்தில் விவசாயிகளுக்கான மில்லினியர் விருதினையும் வென்றுள்ளார் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த கோபினா கிருஷ்ண பிரசாத்.
உலகின் முதன்மையான தொழிலாக கருதப்படுவது வேளாண் தொழில். இன்று விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில், வேளாண் துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை கௌரவிக்கும் நோக்கத்தோடு கிரிஷி ஜாக்ரான் ஊடக நிறுவனம் சார்பில் MFOI விருது வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் டெல்லியிலுள்ள சாணக்யபுரியில் உள்ள தி அசோக் ஹோட்டலில் MFOI விருது வழங்கும் நிகழ்விற்கான கோப்பை மற்றும் இலட்சினை வெளியிடும் நிகழ்வு ஒன்றிய கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. அதனைத்தொடர்ந்து MFOI விருது வழங்கும் நிகழ்வுக்கு ICAR- KVK தனது ஆதரவினை வழங்க, இந்தியா முழுவதுமிருந்து பலர் விருதுக்கு விண்ணப்பித்தனர்.
கடந்த டிசம்பர் 6,7,8 டெல்லியில் விருது வழங்கும் விழா நடைப்பெற்ற நிலையில், ஆந்திராவினை சேர்ந்த விவசாயி மில்லினியர் விருதினர் வென்றது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஊடகவியல் துறையில் ஒரு பத்திரிக்கையாளராக வேலைப்பார்த்து வந்த நிலையில், விவசாயத்திற்கு திரும்பி அதில் வெற்றி கண்டது தான்.
கோபினா கிருஷ்ண பிரசாத் (47) ஆந்திரா மாநிலம் எச்சர்லா மண்டலத்தில் உள்ள கொங்கரம் கிராமத்தில் விவசாயக் குடும்ப பின்னணியைச் சேர்ந்தவர். பிரசாத்தின் தந்தை ராம்பாபு மற்றும் மூத்த சகோதரர் நரேந்திர குமார் ஆகியோர் கடந்த 30 ஆண்டுகளாக பாரம்பரிய விவசாய முறையில் 20 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். இருப்பினும், அவர்களால் பெரிய அளவில் லாபம் பார்க்க முடியாமல் தவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தான், 2015 ஆம் ஆண்டில், பிரசாத் தனது பார்த்து வந்த பத்திரிகையாளர் வேலையை விட்டுவிட்டு, மாவட்டத்தில் முதல் முறையாக இயற்கை விவசாயம் மற்றும் பசுமைக்குடில் தொழில்நுட்பத்தின் மூலம் தர்பூசணி, தக்காளி, குடைமிளகாய் மற்றும் பூக்களை பயிரிடத் தொடங்கினார். அவர் தனது பண்ணைக்கு அருகில் ஆழ்துளை கிணறு தோண்டி நீர் பாசன வசதியை மேம்படுத்தினார்.
மற்ற விவசாயிகள் தற்போது சந்தித்து வரும் விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை பிரச்சினையினை பிரசாத்தும் சந்தித்துள்ளார். இதிலிருந்து மீள, அனைத்து வகையான விவசாய பணிகளையும் இயந்திரமயமாக்கல் கொண்டு மேற்கொள்ள ஆரம்பித்தார். இயற்கை விவசாயத்தின் மூலம் காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் நெல் சாகுபடியையும் அவர் தொடங்கினார்.
பிரசாத் தான் மேற்கொண்ட வேளாண் பணிகளுக்கு, அமடலாவலசை கிரிஷி அறிவியல் கேந்திரா விஞ்ஞானிகள் கே.பாக்யலட்சுமி, எஸ்.நீலவேணி, எஸ்.கிரண்குமார், வி.ஹரிகுமார் மற்றும் பி.மௌனிகா ஆகியோரின் ஆதரவும், ஆலோசனைகளும் பெரிதும் உதவியுள்ளன.
பிரசாத்தின் முயற்சிகளைக் கவனித்த, மூத்த விஞ்ஞானியும், க்ரிஷி விக்யான் கேந்திராவின் திட்ட ஒருங்கிணைப்பாளருமான பாக்யலட்சுமி, மில்லினியர் விவசாயிக்கான விருதுக்கு பிரசாத்தின் பெயரை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (ICAR) பரிந்துரைத்துள்ளார். அதைத் தொடர்ந்து டெல்லியில் நடைப்பெற்ற நிகழ்வில் மில்லியனர் விவசாயி விருதினை வென்றார். தற்போது பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Read more:
பிஎம் கிசான்- ரூ.6000 பெற விவசாயிகளுக்கு சூப்பர் சான்ஸ்!
கனமழையில் சிக்கிய நெல்லை மாவட்ட விவசாயிகளே அடுத்த சில நாள் இதை செய்யுங்க!
Share your comments