ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு இணையாக பன்றி வளர்ப்பில் சாதித்துள்ள 18 வயது சிறுமியான நம்ரதா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 10 ஆம் வகுப்பினை 87% தரத்துடன் தேர்ச்சி செய்த பிறகு பன்றி வளர்ப்பில் கவனத்தை செலுத்தினார் நம்ரதா.
குவஹாத்தியின் ராணி பகுதியில் உள்ள ICAR-தேசிய பன்றி ஆராய்ச்சி மையத்தில் பன்றி வளர்ப்பு குறித்த பயிற்சியின் மூலம் தனது அறிவை மேம்படுத்தினார். ICAR மூலம் பன்றி வளர்ப்பு நுட்பங்கள் மற்றும் பன்றிகளில் செயற்கை கருவூட்டல் பற்றி கற்றுக்கொண்டார். அதனடிப்படையில் செயல்பட்டு வளர்ந்து வரும் பண்ணை தொழிலதிபராக இவர் திகழ்கிறார். அவர் தனது தந்தையுடன் விவசாய பணிகளுக்கு உதவி செய்வதுடன் , தனது மேற்படிப்புடன் பன்றி வளர்ப்பிலும் அதீத ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.
பன்றி தீவனத்திற்காக அரிசி பாலிஷ் மற்றும் மீன் சந்தை கழிவுகள் போன்ற உள்நாட்டில் கிடைக்கும் ஆதாரங்களைப் பயன்படுத்தி உள்ளீட்டு செலவைக் குறைப்பதில் அவர் திறமையானவர். ஒரு புதுமையான முயற்சியாக அசோலா (Azolla) சாகுபடியுடன் பன்றி வளர்ப்பையும் ஒருங்கிணைத்து செயல்படுகிறார். உலர்ந்த அசோலாவை வாரந்தோறும் ஊட்டச்சத்து நிரப்பியாக பயன்படுத்துகிறார்.
அசோலா விலங்குகளுக்கு எப்போதும் பசுமையான சத்தான தீவனத்தை வழங்கும் திறன் கொண்டது. அமினோ அமிலங்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி12, பீடாகரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாஷ், இரும்பு, மக்னீசியம் போன்றவை இதில் ஏராளமாக உள்ளன. அசோலாவின் உலர் அளவின் அடிப்படையில், 40-60 சதவீதம் புரதம், 10-15 சதவீதம் தாதுக்கள் மற்றும் 7-10 சதவீதம் அமினோ அமிலங்கள், பயோஆக்டிவ் பொருட்கள் மற்றும் பயோபாலிமர்கள் போன்றவை காணப்படுகின்றன.
ICAR-தேசிய பன்றி ஆராய்ச்சி மையத்தின் SCSP (scheduled Caste Sub-Plan) திட்டத்தின் மூலம் உயிர் பாதுகாப்பு கிட் மற்றும் பண்ணை கருவிகள் உட்பட அத்தியாவசிய பண்ணை உள்ளீடுகளை நம்ரதா பெற்றுள்ளார். அவரது பண்ணையில் மேற்கொள்ளப்படும் கிருமி நீக்கம் மற்றும் சுத்தம் செய்யும் நடைமுறைகள் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் நோய் பரவுவதை தடுத்துள்ளது. இந்த நோயினால் பக்கத்திலிருக்கும் பண்ணைகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
பன்றி வளர்ப்பில் திறமையான முன்னெடுப்புகளை எடுத்ததன் விளைவாக முந்தைய ஆண்டில், அவர் 32 பன்றிக்குட்டிகளை விற்றுள்ளார். பன்றிக்குட்டி விற்பனையில் மட்டும் ரூ. 1,44,000 லாபம் பார்த்துள்ளார். கூடுதலாக, அவர் இரண்டு ஃபினிஷர்களை விற்று ரூ.60,000 என மொத்தம் ரூ. 2 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளார்.
சிறு வயதிலேயே பன்றி வளர்ப்பின் மூலம் தனது குடும்பத்திற்கு நிதி வருவாய் ஈட்டி வருவதோடு, தனது மேற்படிப்புக்கான கல்விச்செலவையும் பார்த்துக் கொள்கிறார். பன்றி வளர்ப்பில் அசத்தும் நம்ரதா பல தொழில் முனைவோர்களுக்கு உந்துச்சக்தியாகவும் மாறியுள்ளார் என்றால் மிகையல்ல.
இதையும் காண்க:
ஒரு சர்வே எண்ணுக்கு ஒரு பதிவு தான்- விவசாயிகளுக்கு எச்சரிக்கை
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த முதல்வர்
Share your comments