சமீபத்தில் இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது பெறுபவர்களின் விவரம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்டது. இயற்கை முறையில் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் 67 வயதான நாரியாள் அம்மாவும் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். யார் அவர்? எங்கு உள்ளார்? எவ்விதத்தில் தனது விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த பெண் விவசாயி காமாச்சி செல்லம்மாள். இயற்கை முறையில் தனது தென்னை தோட்டத்தில் சிறந்த முறையில் விவசாயப்பணிகளை மேற்கொண்டு வருவதோடு, அப்பகுதியிலுள்ள மற்ற விவசாயிகளுக்கு முன்னுதாரமாக விளங்கும் தன்மைக்காகவும் பத்மஸ்ரீ விருதுக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தெற்கு அந்தமானில் உள்ள ரங்கசாங்கைச் சேர்ந்த செல்லம்மாள், ”நரியாள் அம்மா” என்று அப்பகுதியில் அன்போடு அழைக்கப்படுகிறார்.
தென்னை விவசாயத்தில் பாரம்பரிய முறை:
மழைக்குப் பிந்தைய காலத்தில் மண்ணில் ஈரப்பதத்தைப் பாதுகாக்க, தென்னை இலைகள் மற்றும் மட்டைகளை தோட்டத்தில் தழைக்கூளமாகப் பயன்படுத்தி வருகிறார் நரியாள் அம்மா. இந்த தழைக்கூள முறையானது மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாப்பது மட்டுமின்றி, களைகளின் வளர்ச்சிக்கு இயற்கையான தடையாகவும் செயல்படுகிறது. மேலும் தென்னை தோட்டத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளார் நரியாள் அம்மா.
நிலையான வேளாண்மைக்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை:
பூச்சிகளின் இயற்கையான இனச்சேர்க்கை சுழற்சியை சீர்குலைக்கும் பெரோமோன்களை (காற்றில்) வெளியிட பூச்சிகளைக் கவர, தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களுக்குப் பதிலாக ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை உத்தியையும் அவர் பின்பற்றுகிறார். இது பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவுகிறதும் எனவும் தெரிவித்துள்ளார்.
கைக்கொடுக்கும் ஊடுபயிர் சாகுபடி:
தன்னிடமுள்ள 10 ஏக்கர் நிலத்தில், தென்னை சாகுபடியுடன் அவர் பல வகை பயிர் சாகுபடியும் மேற்கொள்கிறார். தென்னையுடன் சேர்த்து, கருணைக்கிழங்கு, வாழை, நிலக்கடலை, அன்னாசி, இனிப்பு உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், டியூப் ரோஸ், கிளாடியோலஸ், சாமந்தி மற்றும் பச்சை காய்கறிகள் போன்றவற்றையும் சாகுபடி செய்து வருகிறார்.
Read also: ஒருங்கிணைந்த பண்ணை முறையில் அமர்களப்படுத்தும் அரியலூர் அசோக்குமார்!
இந்த ஒருங்கிணைந்த பண்ணை முறையானது சந்தையில் தேங்காய் விலையிலுள்ள நிலையற்றத்தன்மையினால் ஏற்படும் சவால்களை சமாளிக்க வழிவகை செய்கிறது. அதோடு மட்டுமின்றி வருவாயையும் கணிசமாக அதிகரிக்க உதவுகிறது என்றார் நரியாள் அம்மா. பல ஆண்டுகளாக, செல்லம்மாள் மற்ற விவசாயிகளையும் இயற்கை விவசாயம் செய்ய தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார்.
பத்மஸ்ரீ விருது- நரியாள் அம்மாவின் ரியாக்ஷன்:
பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், அதிகாரிகளிடமிருந்து முதலில் தொலைபேசி அழைப்பு வந்ததும், யாரோ கிண்டல் செய்கிறார்கள் என்று தான் நினைத்ததாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார் நரியாள் அம்மா.
"நான் ஒரு தொலைதூர கிராமத்தில் வசிக்கிறேன், அதுவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில். ஏன் ஒருவர் எனக்கு இவ்வளவு மதிப்புமிக்க விருதை வழங்குவார்? நான் குழப்பமடைந்தேன், ஆனால் பின்னர், அந்தமான் அரசு நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் எனக்கு உண்மையிலேயே பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது என்று என்னிடம் கூறினார், ”என தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
செல்லம்மாளின் விவசாய பணிகளுக்கு உதவி செய்து வரும்அவரது மகன் ராமச்சந்திரன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து தெரிவிக்கையில், “அம்மாவிற்கு விருது என்கிற செய்தியால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். தற்போது தங்கள் விவசாய நிலங்களில் விவசாய சுற்றுலாவை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
மேலும், “வேளாண்-சுற்றுலாவுக்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன், மேலும் எங்களது பல்வேறு பயிர்கள், மசாலாத் தோட்டங்கள் மற்றும் மீன் வளர்ப்பு ஆகியவை உள்ளூர் மக்களையும் மாணவர்களையும் மட்டுமல்லாது ஏராளமான சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Read also:
மீன் வளர்ப்பில் ஈடுபட ஆர்வமா? அரசின் 5 மானியத்திட்டங்கள் உங்களுக்காக
Share your comments