கொரோனாவின் உச்சக்காலத்தில் தனது தந்தையின் மரணத்தால் நிர்கதியாகி போனார் தொழில்நுட்ப வல்லுநராக வேலைப்புரிந்து வந்த 32 வயதான புவனேஸ்வர் சக்ரவர்த்தி. ஒருக்கட்டத்தில் அனந்தபூரில் உள்ள தனது பூர்வீக கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களை விற்க விரும்பினார்.
ஆனால் வியத்தகு நிகழ்வுகள் அவரது வாழ்வில் நடந்தேறியது. 16 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யப்போகிறோம் என்றெல்லாம் அவர் நினைத்தது கூட கிடையாதாம். தொழில் மாறுதல் ஆரம்பத்தில் சவால்கள் நிறைந்ததாக இருந்தது. பெங்களூருவில் தொழில்நுட்ப வல்லுநராக ஐந்து இலக்க சம்பளத்தில் பணிபுரிந்த புவனேஸ்வர், இப்போது லட்சங்களில் சம்பாதிக்கிறார்.
அனந்தபூரில் உள்ள பெலுகுப்பா மண்டலத்தில் உள்ள டக்குபர்த்தி கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வர், பாரம்பரிய விவசாயத்தைத் தொடங்கினார். இது கடினமான பணியாக இருந்தது. பாரம்பரிய பயிர்கள் அவருக்கு எந்த லாபத்தையும் பெற உதவவில்லை. பெரும் நஷ்டத்தை சந்தித்த புவனேஸ்வர் விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற மாற்று வழிகளை ஆராய முடிவு செய்தார். அவரது நிலத்தின் கருப்பு மண்ணுக்கு ஏற்ற சிறந்த பயிரினை அடையாளம் காண தனது ஆன்லைன் வேட்டையைத் தொடங்கினார். அப்போதுதான் அவர் பக்வா வகை மாதுளையினை கண்டறிந்தார். அவர் மகாராஷ்டிராவில் இருந்து மரக்கன்றுகளை வரவழைத்து 2020-ல் ஆறு ஏக்கர் நிலத்தில் நட்டார். பின்னர், அவர் முழு பழத்தோட்டத்திலும் படிப்படியாக மாதுளை வளர்த்தார்.
11 மாத காலப்பகுதியில், புவனேஸ்வர் அறுவடையின் முதல் சுழற்சியில் 26 டன் மகசூலை பெற்றார். டன் ஒன்றுக்கு ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை மாதுளை விற்பனை செய்து ரூ.18 லட்சத்தை பெற்றுள்ளார். ரூ.4 லட்சம் உள்ளீட்டுச் செலவுகளை விட்டுவிட்டு, முதல் சுழற்சி விளைபொருளின் விற்பனை மூலம் ரூ.14 லட்சம் லாபம் ஈட்டினார்.
மொபைல் செயலி மூலம் 16 டன் பழம் விற்பனை:
சமீபத்திய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு உள்ளீடு செலவுகளைக் குறைப்பது அவரது நோக்கமாக இருந்தது. 2022 ஆம் ஆண்டில், புவனேஸ்வர் ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் செயலியை உருவாக்கி, பெங்களூரில் உள்ள பல்வேறு நுழைவு சமூகங்களில் வசிப்பவர்களுக்கு ஒரு கிலோ ரூ. 100 என்ற விலையில் தனது பொருட்களை விற்றார். அவர் மொபைல் செயலி மூலம் கிட்டத்தட்ட 16 டன் பழங்களை விற்றார், இதனால் இடைத்தரகர்களின் தலையீட்டை நீக்கி, தனது லாபத்தை ரூ.16 லட்சமாக உயர்த்தினார். ஆர்டிசி கார்கோ சர்வீஸ் மூலம் பெங்களூரில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பழங்களை டெலிவரி செய்தார். அவர் தனது பண்ணையில் சுமார் 10 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினார்.
மேலும் அவர் தனது வயலில் சோலார் பேனல்களை நிறுவி, பண்ணைக்கு சொட்டு நீர் பாசனத்திற்கு தேவையான சூரிய சக்தியை உற்பத்தி செய்தார். பழ ஈக்களால் பயிர் சேதமடையாமல் இருக்க சோலார் விளக்குகளை அமைத்துள்ளார். மழைப்பொழிவு, நிலத்தடி ஈரப்பதம் மற்றும் பூச்சிகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக செயற்கைக்கோள் இணைப்புடன் 13 சென்சார்களுடன் ரூ.50,000 செலவில் உள்நாட்டு FASAL கருவியையும் அவர் அமைத்தார்.
இடுபொருள் செலவைக் குறைக்க, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை மொத்தமாக வியாபாரிகளிடம் இருந்து வாங்கினார். மாதுளை சாகுபடி மூலம் லாபம் ஈட்ட விவசாயிகளுக்கு கற்றுக்கொடுக்கவும் பயிற்சி அளிக்கவும் யூடியூப் சேனலையும் தொடங்கினார். புவனேஸ்வரின் தாய் நிர்மலா கூறும்போது, “தனது மகன் அறிமுகப்படுத்திய புதிய தொழில்நுட்ப முறைகளை ஆராய்வதன் மூலம் அவர்கள் ஆண்டு முழுவதும் விளைச்சல் பெறவும், தொழிலாளர்களின் கடினமான வேலைகளைக் குறைக்கவும் உதவியது” என்கிறார்.
இதற்கிடையில், இடைத்தரகர்களை ஒழித்து, விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் விவசாய சங்கங்களுடன் உணவு பதப்படுத்தும் பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும் என்று மாநில அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் காண்க:
மகரந்தச் சேர்க்கையில் புதிய உத்தி- கவனத்தை ஈர்த்த சிங்கப்பூர் ரிட்டன் விவசாயி
Share your comments