இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், கோரைப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயி ராமர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிரிஷி ஜாக்ரான் சார்பில் முன்னெடுக்கப்பட்ட மில்லினியர் விவசாயிக்கான விருதினை வென்றிருந்தார். ஆண்டுக்கு இயற்கை விவசாயத்தின் மூலம் 10 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டியதன் அடிப்படையில் ICAR பரிந்துரையில் MFOI விருதினை ராமருக்கு வழங்கி கௌரவப்படுத்தியது நமது கிரிஷி ஜாக்ரன்.
இந்நிலையில், ராமர் அவர்கள் மேற்கொண்டு வரும் விவசாய பணிகள் மற்றும் அதில் கடைப்பிடித்து வரும் வேளாண் நடைமுறைகள் குறித்தும் தெரிந்துக்கொள்ள கிரிஷி ஜாக்ரான் அவரைத் தொடர்புக் கொண்டு கலந்துரையாடியது. ஆரம்பம் முதலே உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார் ராமர்.
அப்பா கொடுத்த உத்வேகம்:
கிரிஷி ஜாக்ரன் தனக்கு விருது வழங்கி கௌரவப்படுத்தியதற்கு மீண்டும் தனது நன்றியினை நம்மிடம் தெரிவித்து, தனது சிறுவயது வாழ்வினை பற்றி நம்முடன் மனம் திறந்து பேசினார்.
“எங்க குடும்பத்துல என்னோடு சேர்ந்து கூட பிறந்தவங்க அப்படினு பார்த்தா 10 பேர். 5-வது வரைக்கும் தான் படிச்சிருக்கேன். சின்ன வயசுலயே மாடு பிடிச்சு உழ ஆரம்பிச்சுட்டேன். எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாரு, குப்பையை எல்லாம் மண்ணுல அடிச்சு வேளாண்மை பண்ணா நல்ல மகசூல் வரும்னு. எங்கக்கிட்ட மக்கும் குப்பை இல்லனாலும், பக்கத்துல இருக்கிறவங்க கிட்ட வாங்கி மண்ணுல அடிச்சு வேளாண்மை பண்ண சொல்லுவாரு. அதுவும் ஒருவகையில் இப்போ நான் இயற்கை விவசாயத்தில் முழுமையா இறங்க உதவி செஞ்சிருக்கு”
“மொத்தமா பார்த்தா 30 ஏக்கர்கிட்ட விவசாயம் பண்ணிட்டு வருகிறோம். மிளகாய் முதன்மையான பயிராக இருந்தாலும், வாழை, மட்டை நெல், ஊடு வேளாண்மையாக தக்காளி, கொத்தமல்லி, கத்தரி போன்ற பயிர்களையும் பயிரிட்டு வருகிறேன்” என்றார்.
புகழ் பெறச்செய்த மிளகாய் பயிர்:
ராமரின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது மிளகாய் பயிர் என்றால் மிகையல்ல. அமெரிக்கா, ஜெர்மனி, நியூசிலாந்து, இலங்கை, துபாய் போன்ற நாடுகளுக்கும் மிளகாயினை ராமர் ஏற்றுமதி செய்து வருகிறார்.
இதுக்குறித்து அவரிடம் நாம் கேட்டதற்கு, “ நம்ம நிலத்துக்கே வெளிநாடுகளின் பிரதிநிதிகள் நேரடியாக வந்து எப்படி மிளகாய் சாகுபடி செய்கிறோம் போன்றவற்றை எல்லாம் பார்த்தாங்க. கொஞ்சம் கூட இராசயனம் பயன்படுத்தாமல், முழுமையாக இயற்கை முறையில் மிளகாய் சாகுபடி மேற்கொள்வதை பார்த்து நம்மகிட்ட ஒப்பந்தம் போட்டு இருக்காங்க. நானும், கிட்டத்தட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சுமார் 160 விவசாயிகளோடு இணைந்து மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டு ஏற்றுமதி செஞ்சு வருகிறோம்”.
Read more: Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா?
“இதுல பார்த்தீங்க ணா, நம்ம விளைவிக்கிற மிளகாயை கண்மூடித்தனமா எல்லாம் ஏற்றுமதிக்கு வாங்கிட மாட்டாங்க. 10 டன்னுக்கு ஒரு சாம்பிள் எடுப்பாங்க. அதை அவங்களை ஒரு பெட்டியில் சீல் வைத்து ஆய்வுக்கு எடுத்துட்டு போவாங்க. 2,3 டெஸ்ட்க்கு மேல செஞ்சு- இது முழுமையா இயற்கை விவசாயத்துல உற்பத்தி செஞ்சது தான் அப்படினு தெரிஞ்சப்பிறகு தான் ஏற்றுமதிக்கு எடுப்பாங்க. கொஞ்சம் பூச்சி மருந்து பயன்படுத்தி இருந்தாலும், அது ஆய்வு செய்யும் போது தெரிஞ்சுடும்”
மொத்தமா ஒப்பந்தத்தையும் ரத்து பண்ணிட்டு நம்மக்கிட்ட வாங்குறதை கைவிட்டு விடுவாங்க. இவ்வளவு கட்டுப்பாடுக்கு மத்தியில் கடந்த 7-8 வருடமாக நாங்க ஏற்றுமதி பண்ணிட்டு வாறோம். இதுல இருந்தே நீங்கள் புரிஞ்சுக்கலாம், எவ்வளவு தீவிரமா இயற்கை விவசாயத்தில் நாங்க ஈடுபடுறோம்னு” என்றார்.
உண்மையான விவசாயி பட்டப்பெயர்:
ராமநாதபுரம் மாவட்டத்தின் முன்னோடி விவசாயியாக திகழும் ராமர், அம்மாவட்ட விவசாய சங்க பிரதிநிதியாகவும் திகழ்கிறார். தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டு வரும் வேளாண் பட்ஜெட்டிலும், இராமநாதபுர மாவட்டத்திற்கு எத்தகைய திட்டங்கள் தேவை என்கிற விஷயங்களையும் விவசாயி ராமரிடம் கலந்தலோசிக்கிறது அரசு. ஒருபுறம் விவசாயிகள்- மறுபுறம் அரசு அலுவலர்கள் என இருந்தாலும் நடுநிலையோடு தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார் விவசாயி ராமர். இதற்காகவே அவரே நன்கு தெரிந்த விவசாயிகளும், அரசு அலுவலர்களும் “உண்மையான விவசாயி” என அன்போடு அவ்வப்போது அழைப்பதாகவும் நம்மிடம் தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், “எங்க ராம்நாடு பக்கம் உப்பங்காற்றுனு ஒன்னு வீசும். அதுக்கு இருக்கிற பவரே வேற. 10 நிமிஷம் வீசுனாலே போதும், இந்த இலைசுருட்டு இதெல்லாம் காணாமல் போயிடும். அதை விட்டுட்டு மருந்து அதுஇதுனு அடிச்சா கிடைக்கிற விளைச்சல் ஆரோக்கியமானதாக இருக்குமா என்றால் அது கேள்விக்குறி தான்” என்றார்.
கிரிஷி ஜாக்ரனின் மில்லினியர் விவசாயிக்கான விருதினை வென்ற ராமரின் வேளாண் நடைமுறை செயல்பாடுகள், நிச்சயம் மற்ற விவசாயிகளுக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியதாக விளங்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மேலும் விவசாயி ராமர் அவர்கள் நமது கிரிஷி ஜாக்ரனுக்கு அளித்த பேட்டியின் முழுத்தகவல் விரைவில் மே மாத க்ரிஷி ஜாக்ரன் இதழில் வெளிவரும் என தெரிவித்துக்கொள்கிறோம்.
Read more:
Share your comments