சிவகங்கை மாவட்டம் தமராக்கி தெற்கு பகுதியில் அமைந்துள்ளது வின்ஸ்டன் சர்ச்சில் என்பவரின் நிலம் மற்றும் கால்நடை பண்ணை. ஒரே கிணறு வைத்துக்கொண்டு 50 ஏக்கரில் சொட்டு நீர் பாசன முறையில் சாகுபடி செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார். விவசாயத்துடன், கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு என ஒருங்கிணைந்த பண்ணை முறை விவசாயத்தில் அசத்தி வருகிறார்.
B.Tech ( CIVIL) - பி.டெக் சிவில் இன்ஜினியரிங்க் படித்துள்ள வின்ஸ்டன், படித்து முடித்ததும் விவசாயத்தில் இறங்கியுள்ளார். விவசாய குடும்ப பிண்ணனியிலிருந்து வந்த வின்ஸ்டன் தான் செய்து வரும் பணிகள் குறித்து தெரிவிக்கையில், “ எங்களுடைய அப்பா காலத்தில் 10 ஏக்கரில் விவசாயம் செய்து கொண்டு இருந்தனர். இப்போது 50 ஏக்கரில் நான் விவசாயம் செய்து வருகிறேன். அனைத்து விவசாய பணிகளையும் அதிநவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொண்டு வருகிறேன். மருந்து தெளிப்பிற்கும் ட்ரோன் போன்றவற்றை தான் பயன்படுத்துகிறோம்” எனத் தெரிவித்தார்.
50 ஏக்கரில் மரவள்ளி- சவால்கள் என்ன?
தற்போது 50 ஏக்கரிலும் மரவள்ளிக்கிழங்கு தான் பயிரிட்டுள்ளார். வருடத்திற்கு ஒருமுறை மாற்றுப் பயிராக மிளகாய், தக்காளி, பொங்கல் பண்டிகை வரும் காலங்களில் சக்கரைப் பூசணி, மழைப்பொழிவு நன்றாக இருந்தால் கரும்பினையும் பயிரிட்டு வருகிறார்.
50 ஏக்கரிலும் மரவள்ளிக்கிழங்கினை பயிரிடுவதற்கு என்ன காரணம்? என்று கேட்டதற்கு, “ கொஞ்ச இடத்தில் மரவள்ளியினை பயிரிடும் போது சந்தை தொடர்பான மார்க்கெட்டிங் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. மொத்தமாக பயிரிடும் போது மார்க்கெட்டிங்க் கொஞ்சம் சுலபமாக உள்ளது. தற்போது இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மரவள்ளிக் கிழங்கினை ஏற்றுமதி செய்து வருகிறோம். பெரும்பாலும் கேரளா மாநிலத்தில் மரவள்ளிக் கிழங்கிற்கு நல்ல டிமாண்ட் உள்ளது. மேலும், அனைத்து மாநிலங்களிலும் மொத்த விற்பனை மையங்களுடன் நேரடி தொடர்பு இருப்பதால் இடைத்தரகர்கள் இன்றி சந்தைப்படுத்துகிறோம்” என்றார்.
உங்களது 5 வருட விவசாய அனுபவத்தில், இவ்வாறு மொத்தமாக 50 ஏக்கரிலும் மரவள்ளி பயிரிடும் போது ஏதேனும் பிரச்சினையை சந்தித்து உள்ளீர்களா? என நாம் எழுப்பிய கேள்விக்கு, “நிச்சயமாக.. 50 ஏக்கரிலும் மொத்தமாக மரவள்ளி பயிரிடும் போது சந்தையில் சரியான விலை இல்லாத போது, மொத்தமாக அடிவாங்கும். சில சமயம் முதலீடு செய்த பணத்தை கூட எடுப்பது சிரமம் ஆகிவிடும். மாற்றுப்பயிர் போட்டாலும், அதனை சந்தைப்படுத்துவதில் இங்கு நடைமுறை சிக்கல் உள்ளது” என்றார்.
Read also: இருக்கிற கொஞ்ச இடத்திலும் காட்டு நெல்லி- முள் சீத்தா என பயிரிட்டு கலக்கும் பிஸியோதெரபி மருத்துவர்!
ஜவ்வரிசி ஆலை நிறுவ திட்டம்:
விவசாயம் தாண்டி மதிப்பு கூட்டு முறையில் ஈடுபட ஏதேனும் திட்டமுள்ளதா என கேட்டதற்கு, “நாங்க இப்போ சாப்பிடக்கூடிய மரவள்ளியினை தான் பயிரிட்டு வருகிறோம். 8 முதல் 9 மாதங்களில் அறுவடை செய்து விடுகிறோம். ஜவ்வரிசி தயாரிப்பதற்காக ஆலைகளுக்கு செல்லும் மரவள்ளிக் கிழங்கிற்கான அறுவடை காலம் 12 மாதம். மதிப்புக்கூட்டு தொடர்பாக கேரளாவிலுள்ள ICAR- CTCRI சென்று சில விஷயங்களை கேட்டறிந்துள்ளேன். அதன்படி எதிர்காலத்தில் ஒரு ஆலை அமைத்து நாமே ஜவ்வரிசி தயாரித்து ஏற்றுமதி செய்யலாம் என்கிற எண்ணம் உள்ளது” என தனது ஆசையினையும் தெரிவித்தார்.
ஒரே கிணறு- 50 ஏக்கரில் சொட்டு நீர் பாசனம்:
சிவகங்கை மழைப்பொழிவு அதிகமில்லாத ஒரு மாவட்டமாக விளங்கும் நிலையில், தன்னிடமுள்ள ஒரே ஒரு கிணற்றினை கொண்டு 50 ஏக்கரிலும் சொட்டு நீர் பாசனம் மூலம் தனது விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறேன் எனக்கூறி நம்மை வியப்பில் ஆழ்த்தினார் வின்ஸ்டன்.
இதற்கு அதிக முதலீடு தேவைப்படாதா? என கேட்டதற்கு, “ சொட்டு நீர் பாசனத்திற்கு அரசின் சார்பில் 75 சதவீத மானியம் கிடைக்கிறது. நம்மளோட முதலீடு என்பது 25 சதவீதம் தான். 7 வருடத்திற்கு ஒருமுறை நாம் மீண்டும் விண்ணப்பித்து இந்த மானியத் திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம். மரவள்ளியினைப் பொறுத்த வரை தண்ணீர் அதிகம் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு சொட்டு நீர் பாசனம் தான் சரியான தீர்வு. இதிலிருக்கும் பிரச்சினை அப்படினு பார்த்தா, 7 வருடத்திற்கு தரக்கூடிய சொட்டு நீர் பாசன அமைப்பு 5 ஆண்டுக்காலத்திற்கு தான் உழைக்கிறது. மீதமுள்ள 2 ஆண்டுகள் கொஞ்சம் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. அரசும் 7 ஆண்டுக்கு ஒரு முறை மானியம் என்பதனை, 5 ஆண்டாக மாற்றினால் நன்றாக இருக்கும்” என அரசுக்கு தனது கோரிக்கையினையும் தனது பேட்டியின் வாயிலாக பதிவு செய்தார் வின்ஸ்டன்.
விவசாயம் தவிர்த்து ஆடு, ப்ராய்லர் கோழி, பண்ணைக்குட்டை முறையில் மீன் வளர்ப்பிலும் ஈடுபட்டு வரும் வின்ஸ்டன் சிவகங்கை மாவட்டத்தின் முன்னோடி விவசாயிகளுள் ஒருவராக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more:
துவண்டு போகாத மனம்- தேனீ வளர்ப்பில் லட்சங்களில் வருமானம் ஈட்டும் கொளப்பலூர் மஞ்சுளா
Onion export ban: மறுதேதி குறிப்பிடாமல் வெங்காய ஏற்றுமதிக்கு தடை- காரணம் என்ன?
Share your comments