சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில், பன்றி வளர்ப்பில் யுவராஜ் என்கிற இளைஞர் சிறப்பாக ஈடுபட்டு வருவதாக குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தினை சேர்ந்த விஞ்ஞானிகள் கிரிஷி ஜாக்ரனிடம் தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து யுவராஜ் பன்றி வளர்ப்பில், என்ன மாதிரியான முறைகளை கடைப்பிடிக்கிறார் என்பதை தெரிந்துக் கொள்வதற்காக நேரடியாக அவரது பண்ணைக்கு சென்றோம்.
3 வருடங்களாக பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் யுவராஜுக்கு பக்க பலமாக இருப்பது அவரது மாமா தான் என தன் பேச்சைத் தொடங்கினார். தாத்தா, அப்பா, என தொடர்ச்சியாக கருப்பு பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், யுவராஜ் 3 way cross breeder வகை பன்றிகளை வளர்த்து அதன் மூலம் லாபம் பார்த்து வருகிறார்.
மொத்தம் எவ்வளவு பன்றிகள்?
தற்போது 11 கறிப்பன்றி, 12 தாய் பன்றி, 3 ஆண் பன்றி, 38 குட்டிகள் என தனது பண்ணையில் வளர்த்து வருகிறார். முன்னதாக, சிங்கம்புணரி டவுன் பகுதியில் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால், மொத்தமாக நிலைக்குலைந்து போகுமளவிற்கு எதிர்ப்பாராத ஒரு பிரச்சினையால் வேதனையடைந்துள்ளார். இதுக்குறித்து நம்மிடம் மனம் திறந்து பேசினார் யுவராஜ்.
“முன்னாடி 20 ஆயிரம் ரூபாய்க்கு பன்றி வாங்கி வளர்த்து வந்தோம். அதோட மதிப்பு கிட்டத்தட்ட 3 லட்சம் வரை போனது. குட்டி மட்டுமே எங்களிடம் 100-க்கு மேல் இருந்தது. அப்போது தான், Swine flu வைரஸ் தாக்குதல் தமிழகத்தில் அதிகரித்து வந்தது. இதனால், ஒட்டுமொத்தமாக பன்றி வளர்ப்பை நிறுத்த உத்தரவு வந்தது. வியாபாரம் சரிந்ததோடு, அனைத்து பன்றிகளையும் அழிக்க வேண்டிய நிர்பந்தம் நேர்ந்தது. மிகப்பெரிய வருமான இழப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது தான் மீண்டும் பன்றி வளர்ப்பில் ஈடுபட தொடங்கியுள்ளோம்” என்றார்.
பண்ணை பராமரிப்பு ரொம்ப அவசியம்:
மற்ற கால்நடை வளர்ப்பை விட கடுமையான உடல் உழைப்பு பன்றி வளர்ப்பில் தேவைப்படும். எவ்வளவு தீவனம் போட்டாலும், சலிக்காமல் பன்றி உண்ணும்.
தொற்று நோய்கள் எளிதில் பன்றியினை தாக்கும் நிலையில், பண்ணையினை தொடர்ச்சியாக கழுவி, சுத்தமாக பராமரிப்பது அவசியம். இந்நிலையில் பன்றி வளர்ப்பிற்கான செலவுகள் குறித்து நாம் யுவராஜிடம் கேட்டதற்கு, “ தற்போதைய பண்ணையிக்கான முதலீட்டுச் செலவு பெரும்பாலும் மாமா தான் ஏற்றுக்கொண்டார். பின் இருவரும் தொகை பங்கீட்டு குட்டிகளை வாங்கினோம், தீவனச் செலவினை பொறுத்தவரை பெரியதாக இல்லை. அதற்கு காரணம், நாங்கள் அருகிலுள்ள ஒரு கம்பெனியின் உணவுக்கழிவுகளை சேகரித்து அதை தான் தீவனமாக வழங்கி வருகிறோம். என்னவொன்று, இந்த உணவினை சேகரிப்பதற்காக ஒரு அலைச்சல் இருக்கிறது. குறைந்தது ஒரு நாளைக்கு மட்டும் கிட்டத்தட்ட 200 ரூபாய் போக்குவரத்து செலவு ஆகிறது” என்றார்.
பன்றிகளின் இனப்பெருக்கத்திற்கு, பன்றிகளின் எடை கூடுதலுக்கு என்ன மாதிரியான வழிமுறைகள் உள்ளது? அதை நீங்கள் எவ்வாறு கடைபிடித்து செயல்படுத்துறீங்க? என நாம் எழுப்பிய கேள்விக்கு விரிவாகவே பதில்களை வழங்கினார் யுவராஜ்.
“பொதுவா நீங்க இனப்பெருக்கம் செய்ய ஒரு பன்றி தயாராகிடுச்சுனா சில அறிகுறியை வச்சு தெரிஞ்சுகலாம். உதாரணத்திற்கு, சரியா சாப்பிடாது, அருகிலுள்ள பன்றி மேல தொற்றிக் கொண்டு இருக்கும். அதுக்கு அப்புறம் உங்களுக்கு எந்த வகையில், பன்றி வேண்டும்னு நினைக்குறீங்களோ? அதற்கேற்ப இனச்சேர்க்கைக்கு விடலாம். ஒரு பன்றி எப்போது உடலுறவு மேற்கொள்ளுதோ அந்த தேதியிலிருந்து சரியாக 114 நாட்கள் தான் சினைக்காலம். ஒரே பிரசவத்தில் நம்ம பண்ணையில் மட்டும் 13 குட்டிகள் ஈன்ற தாய் பன்றியும் இருக்கு. இவ்வளவு குட்டி தான் ஈன்றும் அப்படினு எந்த கணக்கும் இல்ல. 8 குட்டி, 9 குட்டி போட்ட பன்றிகளும் நம்மகிட்ட இருக்கு”.
Read also: Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன?
“சரியா 60 நாட்கள் கழித்து தாய் பன்றிடமிருந்து குட்டியை பிரிக்கலாம். பொதுவாகவே, 3 way cross breed-க்கு பால் சுரக்கும் தன்மை குறைவு. குட்டியை பிரிக்கும் போது, கிட்டத்தட்ட அனைத்து வலுவையும் தாய் பன்றி இழந்திருக்கும். திரும்ப அதுக்கு உணவு அதிகமாக வழங்கி பராமரிக்கணும். ஒரு வருடத்திற்கு அதிகப்பட்சம் இரண்டு முறை இனப்பெருக்கத்திற்கு ஒரு தாய் பன்றியை பயன்படுத்தலாம். அதுத்தான் ஆரோக்கியமான முறையும் கூட” எனத் தெரிவித்தார்.
தற்போது செய்து கொண்டிருக்கும் பன்றி வளர்ப்பு தொழிலை வருங்காலத்தில் பெரிய அளவில் மேற்கொள்ள வேண்டும், குட்டிகளின் எண்ணிகையை மூன்று, நான்கு மடங்கு அதிகரிக்க வேண்டும் என தனது ஆசைகளையும் நம்மிடம் யுவராஜ் பகிர்ந்துக் கொண்டார். பொதுவாக கால்நடை வளர்ப்பு என்றால் கோழி,ஆடு, மாடு என செல்பவர்கள் மத்தியில் பன்றி வளர்ப்பிலும் உழைப்புகேற்ற லாபத்தை பார்க்கலாம் என நிரூபித்து உள்ளார் யுவராஜ். (யுவராஜ்- தொடர்பு எண்: 88389 12769)
Read also:
KVK 50: ஹெல்த் மிக்ஸ் தயாரிப்பில் அசத்தும் பெண்- வெற்றிக்கு வழிக்காட்டிய அரியலூர் கேவிகே
ஒரே கிணறு- 50 ஏக்கருக்கு சொட்டு நீர் பாசனம்: அசத்தும் சிவகங்கை இளைஞர்!
Share your comments