விவசாயிகள் மற்றும் வேளாண் சார்ந்த தொழில் முனைவோரின் நலனில் முக்கியப்பங்கு வகிக்கும் வேளாண் அறிவியல் மையம் (KVK) இந்தாண்டு அதன் பொன்விழாவை சமீபத்தில் பாண்டிச்சேரியில் கொண்டாடியது. இதனிடையே திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகாவினை சேர்ந்த விவசாயியான ஒண்டி முத்து திருச்சி மற்றும் கரூர் மாவட்டத்திலுள்ள வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகளின் ஆலோசனைகளால் பெரிதும் பயனடைந்துள்ளதாக நம்மிடம் தெரிவித்தார்.
இதுத்தொடர்பாக அவருக்கு எந்த வகையில் வேளாண் அறிவியல் மையம் உதவி செய்துள்ளது, அவர் தற்போது மேற்கொண்டு வரும் பணிகள் என்ன? என்கிற முழு விவரம் பின்வருமாறு-
சிறுகமணி கேவிகே:
விவசாயியான ஒண்டி முத்து ஒரு வேளாண் பட்டதாரி மற்றும் வேளாண் தொழில் முனைவோரும் ஆவார். இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சி மாவட்டம் சிறுகமணி பகுதியிலுள்ள வேளாண் அறிவியல் மையத்தின் மூலமாக நடைபெறக்கூடிய பல தொழில்நுட்ப பயிற்சிகளில் கலந்து கொண்டு, அதில் பெற்ற நுண்ணறிவினை தனது விவசாயப் பணிகளில் ஈடுபடுத்தி பலன் அடைந்துள்ளார்.
கேவிகே சார்பில் மேற்கொள்ளப்படும் கண்டுணர்வு சுற்றுலா மூலமாக வெவ்வேறு மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள விவசாயிகள் மேற்கொள்ளும் சாகுபடி முறைகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பங்களை நேரடியாக கண்டு அதன் மூலம் பல தகவல்களை பெற்றுள்ளார். கிடைத்த அனுபவங்களை தனது சொந்த நிலத்தில் ஈடுபடுத்தியதோடு அருகிலுள்ள மற்ற விவசாயிகளுக்கும் விழிப்புணர்வினை வழங்கியுள்ளார்.
ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டம்:
கடந்த 2023 ஆம் ஆண்டு வேளாண் அறிவியல் மையத்தின் மூலமாக நபார்டு வங்கி பங்களிப்பில் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின் கீழ் பயனாளியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், ஒண்டி முத்து. இத்திட்டத்தின் கீழ் ஆடுகள், கோழிகள், பண்ணை குட்டையில் மீன் வளர்ப்பு குறித்த பயிற்சிகளுடன் பண்ணையம் அமைக்க தேவையான இடுப்பொருட்கள் மற்றும், கால்நடைகளை பெற்றுள்ளார்.
சிறுகமணி கேவிகே மூலமாக SCSP திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள், வேளாண் இடுப்பொருட்கள் கடப்பாறை, மண்வெட்டி போன்ற இயந்திரங்களையும் பெற்றுள்ளார். ஒன்றிய அரசின் திட்டங்கள் ஏதுவாக இருப்பினும் அதுக்குறித்து தெளிவான விளக்கங்களை வழங்கியதோடு, வேளாண் தொடர்பான பயிற்சிகளையும் உரிய முறையில் வழங்கியது நான் வேளாண் தொழிலில் சிறந்து விளங்க காரணமாக விளங்கியது என ஒண்டிமுத்து நம்மிடம் தெரிவித்துள்ளார்.
Read also: KVK 50: ஹெல்த் மிக்ஸ் தயாரிப்பில் அசத்தும் பெண்- வெற்றிக்கு வழிக்காட்டிய அரியலூர் கேவிகே
கரூர் கேவிகே:
மேலும் ஒண்டிமுத்து வசிக்கும் கிராமத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் தான் கரூர் மாவட்ட கேவிகே அமைந்துள்ளது. அந்த வேளாண் அறிவியல் மையத்திலும் மேற்கொள்ளப்படும் பல பயிற்சிகளில் கலந்துக்கொண்டு பயனடைந்துள்ளார்.
ட்ரோன் இயக்க பயிற்சி:
கடந்த 2018 ஆம் ஆண்டு மேனேஜ் மூலம் Agri Clinic and Agri-Business Centre scheme (AC & ABC) என்ற வேளாண் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 45 நாட்கள் தங்கி பயிற்சி பெற்றுள்ளார். கற்றவற்றை தனது வேளாண் தொடர்பான பணிகளிலில் ஈடுபடுத்தி அதன் மூலம் லாபமும் அடைந்துள்ளார்.
மேலும் ஒண்டிமுத்து, கேவிகே வழிகாட்டுதலின்படி சென்னை ஐஎம்டிஐ ஆளில்லா விமானம் பயன்பாடு குறித்த பயிற்சியினை முடித்துள்ளார். ட்ரோன் இயக்குவதற்கான சான்றிதழை பெற்றுள்ள நிலையில், தனது வேளாண் பணிகளில் ட்ரோன்களை பயன்படுத்த முனைப்பாக இருப்பதாகவும் நம்மிடம் தெரிவித்துள்ளார். இவை அனைத்திற்கும் காரணம் தொடர்ச்சியாக கேவிகே சார்பில் எனக்கு வழங்கிய ஆதரவு தான் என்றார். மேலும், இந்த நேரத்தில் பொன்விழா கொண்டாடும் வேளாண் அறிவியல் மையத்திற்கு தனது வாழ்த்துகளையும் கிரிஷி ஜாக்ரன் மூலம் பகிர்ந்துள்ளார் ஒண்டிமுத்து.
வாழை கன்று உற்பத்திக்கான பயிற்சி:
NRCB- மூலம் Macro Propagation (கேளா விருத்தி) வாழை கன்று உற்பத்தி பயிற்சியை முடித்து விட்டு சொந்தமாக வாழை கன்று உற்பத்தி மையம் நிறுவி காலநிலைக்கேற்ப உற்பத்தி செய்து வருகிறார். அருகிலுள்ள, மற்ற பகுதிகளை சார்ந்த விவசாயிகளுக்கும் இதுக்குறித்து பயிற்சி அளிக்கிறார்.
கோவை வேளாண் கல்லூரி மூலம் நம்மாழ்வார் மையத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி பெற்று சிறந்த முறையில் இயற்கை வேளாண்மை செய்து வரும் ஒண்டிமுத்து, சுபாஷ் பாலேக்கரின் இயற்கை விவசாய நோடி 10 நாள் பயிற்சியையும் முடித்துள்ளார்.
இதுப்போக ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் மகளிருக்கு வாழை சார்ந்த பயிற்றுனராக பயிற்சியளித்து வரும் ஒண்டிமுத்து, எனக்கு தொடர்ச்சியாக ஆக்கமும் ஊக்கமும் அளித்துவரும் தொலைதூர கல்வி இயக்குநர் - தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் கோவை அவர்களுக்கும், கரூர் மற்றும் திருச்சி மாவட்ட கேவிகே விஞ்ஞானிகளுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என நம்மிடம் தெரிவித்தார்.
இந்தியாவின் முதல் வேளாண் அறிவியல் மையம், மார்ச் 21 ஆம் தேதி 1974 ஆம் ஆண்டு புதுச்சேரியில் தொடங்கப்பட்டது. அதன்பின், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தனது தடத்தை பதியத்தொடங்கி இன்றளவு நாடு முழுவதும் சுமார் 731 KVK (Krishi Vigyan Kendra) செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more:
மாவுப்பூச்சி: விவசாயிகளின் மெயின் வில்லனே இதுதான்- கட்டுப்படுத்த என்ன வழி?
AGRISTACK மற்றும் GRAINS திட்ட பணிகளை கண்காணிக்க ஆட்சேர்ப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Share your comments