தற்போதைய ஊரடங்கு சமயத்தில் பெரும்பாலான விவசாயிகள் சந்திக்கும் மிகப் பெரிய சவால் போதிய சந்தை வாய்ப்பு இல்லை, உரிய விலை இல்லை என்பதாகும். எனினும் வெகு சில விவசாயிகள் மட்டுமே சவால்களை எல்லாம் சந்தர்பங்களாக மாற்றி வெற்றி கண்டுள்ளனர்.
மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்கி வருகிறார் நம் பொன்னரசி. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாரம், பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர் தன்னுடைய நிலத்தில் விவசாயம் மட்டுமல்லாமல் கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டு மற்ற விவசாயிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக மாறியுள்ளார். தற்போது இவர் முருங்கை விவசாயத்தின் முலம் அதிக லாபம் அடைந்து வருகிறார். இன்று அவர் எல்லைகளை கடந்து வர்த்தகம் செய்து வருகிறார். தொழில் முனைய விருப்புவர்க்கு பயிற்சி அளிக்கிறார் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த நமது பொன்னரசி.
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் திண்டுக்கல் மாவட்டம் தான். குடும்ப வறுமை காரணமாக பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். பின்பு கோவை மாவட்டத்தில் உள்ள ஓர் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தேன். ஆங்கிலம் அறியாததினால் பல இடங்களில் நிராகரிக்கப் பட்டேன். தடை பட்ட கல்வியை மீண்டும் தொடர நினைத்து பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதினேன். கணினியும், ஆங்கிலமும் படிக்க வேண்டும் என்று மிகவும் விரும்பினேன், ஆனால் திருமணம் போன்ற காரணங்களினால் என்னால் தொடர முடியவில்லை. கணவரின் வேலை நிமித்தமாக கேரளாவில் சில ஆண்டுகள் சென்றன. தவிர்க்க முடியாத காரணங்களினால் சொந்த ஊருக்கே திரும்பி விட்டோம்.
அடிப்படையில் நான் விவசாயத்தின் மீதும், கால்நடை வளர்ப்பு மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவள் என்பதால், ஆரம்பத்தில் உறவினர்களின் பண உதவியுடன் செம்மறி ஆடு, நாட்டுக்கோழி வளர்க்க ஆரம்பித்தேன். இவைகளின் தீவன செலவை குறைப்பதற்காக நானே தீவன செடிகளை வளர்க்க ஆரம்பிதேன். கணிசமான லாபம் கிடைத்தை தொடர்ந்து வாங்கிய கடன்களை திருப்பி செலுத்தி விட்டேன்.
வேளாண் பல்கலைகழகங்கள், விவசாய வல்லுநர்கள், வேளாண் அறிவியல் மையங்கள், மண்ணியல் வல்லுநர்கள் போன்றறை தொடர்புக் கொண்டு எங்களின் நிலத்திற்கு ஏற்ற பயிரை பரிந்துரைக்கும் படி கேட்டுக் கொண்டேன். வறட்சி நிறைந்த பூமி என்பதால் அதற்கேற்றவற்றை எனக்கு பரிந்துரைத்தார்கள்.
அதன்படி ஏழு ஏக்கர் விவசாய நிலத்தில் நாட்டு முருங்கையும், வெங்காயம் மற்றும் நிலக்கடலை மக்காச்சோளம் போன்ற பயிர்களும் இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறேன்.
எங்கள் ஊரில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கை சாகுபடி செய்து வருகிறார்கள். வாரம் மூன்று நாட்கள் சந்தை நடைபெறும். இந்த சந்தையில் தான் எல்லா மக்களும் தங்கள் முருங்கைகாய், கீரை போன்றவற்றை விற்பனை செய்வார்கள். வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் எங்களிடம் குறைவான விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து அதிக லாபம் அடைகிறார்கள். எங்கள் மக்களிடையே போதிய விழிப்புணர்வும், ஒற்றுமையும் இல்லாத காரணத்தினால் தான் விவசாயிகளாகிய நாங்கள் இன்னும் பின்தங்கி உள்ளோம். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில்லை என்றார்.
இந்த சூழ்நிலையில் வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தில் பணியாற்றி வரும் திரு. அருண்குமார் அவர்கள் எனது தோட்டத்துக்கு வந்திருந்தார். அவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது, 'ஏன் சார், நம் மாவட்ட மக்களுக்கு நமது வேளாண்மை துறை மற்றும் வேளாண்மை அறிவியல் மையம் உதவி செய்யுமா என்று கேட்டேன். அவர்கள் உங்களுக்கு உதவி செய்யத்தான் அரசாங்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் துறையுடன் சேர்ந்து வேளாண் அறிவியல் மையம் அமைத்து விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பங்கள் கற்றுத் தருகிறார்கள் என்று சொன்னார்.
என் முருங்கைக்கு நல்ல விலை கிடைப்பதில்லை என்று மிகவும் ஆதங்க பட்டன். விவசாயியாகிய நாங்கள் அன்றைய நஷ்ட மட்டுமே யோசித்து, அன்று பணம் வந்தால் போதும் என்று நினைத்து விற்பனை செய்து விடுகிறோம் என்றான். "பெரும்பாலான விவசாயிகள் தானியங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி செய்வது மட்டும் நம் வேலை என்று நினைத்துக் கொள்கிறார்கள், அதை எப்படி சந்தைப்படுத்துவது என்று யோசிப்பது இல்லை, அதனால் தான் இன்னும் அவர்களின் வாழ்வாதாரம் ஏற்றமடையவில்லை, நீங்கள் மட்டும் அதை அறிந்துக் கொண்டால் சரியான லாபத்தை அடைய முடியும், நுகர்வோரும் பயனடைவார்கள்" என்றார். கூடவே அவர் மொபைல் இணைத்தளம் மூலம் முருங்கையில் பல மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்வது எப்படி என்பதைப் பற்றி பல தகவல்களைச் சொல்லி என்னை சரியான திசைக்கு வழிகாட்டினார்.
எனது கணவருடன் ஆலோசித்து விட்டு அதற்கான முயற்சியில் இறங்கினேன். இப்படி விற்பனை செய்யும் போது அதற்குரிய சான்றிதழ்கள் மற்றும் ஆலோசனைகள் திண்டுக்கல் வேளாண் அறிவியல் மையத்தின் உணவியல் துறை வல்லுனர் திருமதி. ஸ்ரீகுமாரி அவர்கள் சில தகவல்கள் கற்றுக்கொடுத்தார்கள். அதன்படி FSSAI சான்றிதழ் மற்றும் தஞ்சாவூர் உணவு பதப்படுத்தும் ஆய்வகத்தில் ஆய்வு செய்த ஆய்வு அறிக்கை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் திரு. ஜான் கென்னடி அவர்கள் மூலம் மேலும் முருங்கை பற்றிய பல புதிய தகவல்களை கற்றுக்கொண்டேன்.
முருங்கையில் மதிப்புக்கூட்டல் மூலம் முருங்கை எண்ணெய், முருங்கை கீரை, முருங்கை இலை பொடி, முருங்கை விதை பொடி, முருங்கை கேக் பொடி, சூப், முருங்கை கேப்ஸ்சுல், முருங்கை ஹெல்த் மிக்ஸ், முருங்கை தேன், முருங்கை சோப்பு என பத்திற்கு மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகிறேன் என்றார்.
திண்டுக்கல் மற்றும் சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்து கொண்டு முருங்கை பற்றிய தகவல்களை எடுத்துக் கூறி மக்களுக்கு விழிப்புணர்வு செய்து அதன் மூலம் விற்பனை வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன். பயிற்சி தேவைப்படுபவர்களுக்கு வகுப்புகள் எடுத்து வருகிறேன்.
நிறைவாக ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னல் ஒரு ஆண் இருப்பார்... அதே போன்று பொன்னரசியின் வெற்றிக்கு பின்னால் துணையாக இருப்பது அவரது கணவர் பெருமாள். மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்.
அரசு அதிகாரிகள் என்றால் அலட்சிய படுத்துவார்கள் என்ற கூற்றை முற்றிலும் பொய்ப்பிக்கும் வகையில் அவருக்கு உதவிய அனைத்து அரசு அதிகாரிகள், ஆட்சியர்கள், வேளாண் அறிவியல் மைய அலுவலர்கள், பேராசிரியர்கள் என அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். இறுதியாக, இனி வரும் காலங்களில் இளம் தலைமுறையினரை விவசாயத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்தார்.
எத்தகைய அசாதாரண சூழலிலும், தன்னம்பிக்கையும், தளராத மனமும் போதும் என்பதற்கு இவரே சிறந்த சான்று.
Share your comments