பல ஆண்டுகளாக மழை போதிய அளவு இல்லாததால் நாட்டின் விவசாய உற்பத்தித் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆற்று வழி பாசனம் நம்பகத்தன்மையை இழந்துள்ளது. கண்மாய் வழி பாசமா ஏறக்குறைய கைவிடப்பட்டுவிட்டது. இது தான் பல கிராமங்களின் நிலை. சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேப்பங்குளம் கிராமமும் இதற்கு விதி விலக்கல்ல.
ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்புவரை இரண்டு போகம் விளைந்த, வளம் நிறைந்த கிராமமாக இருந்தது வேப்பங்குளம். இப்போது விவசாயம் நிரந்தரமாக கைவிடப்பட்டு விடுமோ என்கிற நிலையில் உள்ளது. ஆனால், இந்த நிலையை அந்தக் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மாற்றியிருக்கிறார்கள். கண்மாய்களைத் தூர்வாரி சுமார் 250 ஏக்கரில் நெல் பயிரிட்டு வெற்றிகரமாக அறுவடை செய்திருக்கிறார்கள் கிராம மக்கள்.
மழை குறைவு என்று குறைபட்டுக்கொள்கிறோம். ஆனால், மழை நீரை சரியாகச் சேகரித்து வைத்துக்கொள்வதில்லை. மழை நீரை சேகரித்து பயன்படுத்த ஏற்கனவே அங்கு கண்மாய்கள் இருந்தன. ஆனால், பராமரிப்பு இல்லாத காரணத்தால் அந்தக் கண்மாய்கள் நீர் வரத்து இல்லாதிருந்தது.
இந்நிலையில் நான்கு பெரிய கண்மாய்களைச் சீரமைப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. முதலில் திட்ட அறிக்கையை தயார் செய்தனர். அதற்கு தேவைப்படும் 5 லட்ச ரூபாயை ஊர் மக்களிடமும் நண்பர்களிடமும் பெற்று நான்கு மாத காலத்திற்குள் கண்மாய்கள் சிறப்பாக சீரமைக்கப்பட்டன.
கண்மாய்கள் சீரமைக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்டு, அதை நேரில் பார்வையிட வேப்பங்குளம் கிராமத்துக்கு வந்த இந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங், கிராம மக்களை வெகுவாகப் பாராட்டிச் சென்றார்.
சிவகங்கை மாவட்டத்தில் மழையளவு மிக்க குறைவு. இருந்தபோதிலும், பெய்த குறைத்த அளவு மழையால் கண்மாய்கள் முக்கால் பாகமும் நிரம்பின. கிராமமே தாங்கள் செய்த பனியின் பலனை உணர்ந்தனர்.
நம்பிக்கையின்மையால் விதைப்பு மூலம் நெல் பயிரிடும் முறைக்கு மாறியிருந்த விவசாயிகள் பலர், நாற்று பாவி விவசாயம் செய்யத் தொடங்கினர். பல வருடங்களுக்கு பிறகு மடைகள் திறந்து விவசாயம் செய்யப்பட்டது. கண்மாய்களில் நிறைந்த நீரில் நிலத்தடி நீர் உயர்ந்து ஆழ்த்துளை கிணறுகள் முழுத்திறனுடன் செயல்பட்டன.
விவசாய வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட்ட தொடர் விவசாயக் கூட்டங்கள் துல்லிய வேளாண்மைக்கான அவசியத்தை மக்களுக்கு உணர்த்தின. பலர் திருத்திய நெல் சாகுபடி முறையை பின் பற்ற வழி செய்தது. பூச்சி தாக்குதல், ஊட்டச்சத்து குறைவு போன்ற பிரிச்சினைகளுக்கு அரசு, விவசாய வல்லுநர்கள் மூலமாகத் தீர்வு காணப்பட்டது. சிறந்த பயிர் மேலாண்மை பின்பற்றப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் விவசாயம் பொய்த்துப்போயிருக்கும் நிலையில், வேப்பங்குளம் கிராமம் வெற்றிகரமாக விவசாயத்தை செய்திருக்கிறது.
ஐந்து லட்ச ரூபாயில் மேற்கொள்ளப் பட்ட முயற்சியால் இன்று வேப்பங்குளம் கிராமம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நெல் உற்பத்தி ( கிலோ 17 ரூபாய் என்கிற கணக்கில்) செய்த கிராமமாக மாறியிருக்கிறது. இந்த வெற்றி, பயிரிடப்படாத மேலும் 250 ஏக்கர் வரும் காலங்களில் பயிரிடப்பட வழிவகுக்கும். பிற பயிர்களான எலும்பிச்சை, நார்த்தை, புளி போன்ற விளைபொருள்களை சிறப்பாகச் சந்தைப்படுத்துதல் மூலம் மூன்று கோடி ரூபாய் உற்பத்தித் திறன் கொண்ட கிராமமாக விரைவில் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களின் முயற்சியை பார்த்த மாவட்ட நிர்வாகம் கண்மாய்களின் மடைகளை மாற்றித் தருதல், நெற்களம் அமைத்துத் தருதல், ஆயிரம் மரக் கன்றுகளை நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் உருவாக்குதல் ஆகியவற்றுக்கு உறுதி அளித்துள்ளது.
வேப்பங்குளம் கிராம மக்கள் இந்திய விவசாயிகளுக்கு முன்வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால் , கிராமப்புற மறுசீரமைப்பு சாத்தியமே. எளிதும்கூட கிராமப்புறங்கள் மிக வேகமாகத் தங்கள் ஆற்றலை இழந்து வருகின்றன. வெகுவிரைவில் நாம் செயல்படவில்லை என்றால் அவை நிரந்தரமாகச் செயல் இழந்துவிடும் ஆபத்து உள்ளது. கிராம நீர்நிலைகளை சிறப்பாக செப்பனிட்டு பராமரிப்பது கிராம மறு சீரமைப்புக்கு அடிப்படை. நமது காலத்துக்கு, எதிர்காலச் சந்ததியினருக்கு தேவைப்படும் நீர், விவசாய மேலாண்மையை போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்படுத்த வேண்டியது அவசியமானது.
K.SAKTHIPRIYA
KRISHI JAGRAN
Share your comments