மும்பையில் முதன்முறையாக திருநங்கைகள் மற்றும் LGBT சமூகத்தினரால் நடத்தப்படும் திருநங்கை சலூன் கடை(Transformation Salon) திறக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வேலை மறுக்கப்பட்ட 7 திருநங்கைகள் மற்றும் LGBT சமூகத்தினர் இந்த சலூனில் பணி புரிகின்றனர்.
திருநங்கைகள் சமூகத்தின் ஒரு அங்கமாக இருப்பினும் அவர்களுக்கான மரியாதையும், அங்கீகாரமும் இன்னும் உரிய வகையில் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை. சமுதாயத்தில் பல்வேறு அவமானங்களை சந்தித்து வரும் திருநங்கைகள் சம உரிமைகளை பெற்றிட தினமும் போராட வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இந்நிலையில் ஊடக அறிக்கைகளின்படி, திருநங்கைகள் சமூகத்தை அதிகாரம் மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுவதற்காக மும்பையில் ஒரு திருநங்கை சலூன் திறக்கப்பட்டது. இதில் மொத்தம் 7 திருநங்கைகளால் நடத்தப்படுகிறது. சலூன் உரிமையாளர் ஜைனாப் டிரான்ஸ் சமூகத்தில் உறுப்பினராகவும் உள்ளார். திருநங்கைகளுக்கு அதிகாரம் அளிக்க இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்று ஜைனப் கூறினார்.
ஷாம்லி பூஜாரி என்ற திருநங்கை, அழகுக்கலை நிபுணராகப் பயிற்சி பெற்றவர். திறமை இருந்தும் பல்வேறு இடங்களில் வேலையைப் பெறுவதில் சிரமப்பட்டார். ஒவ்வொரு முறையும் பூஜாரி ஒரு சலூனை அணுகும்போது, உரிமையாளர் அவர்களின் திறமையைப் பாராட்டினார், ஆனால் அவர்களின் பாலினம் காரணமாக வேலை வழங்க மறுத்துவிட்டனர். திருநங்கை என்பதால் வாடிக்கையாளர்கள் வரமாட்டார்கள் என்கிற எண்ணம் அவர்களிடத்தில் மேலோங்கி இருந்தது.
இந்நிலையில் தான் சனிக்கிழமையன்று, திருநங்கைகள் மற்றும் LGBT சமூகங்களால் நடத்தப்படும் மும்பையின் முதல் 'Transformation Salon'-யில் மகிழ்வுடன் பணியில் இணைந்துள்ளார். இது குறித்து பூஜாரி குறிப்பிடுகையில் "முன்பு சலூன் உரிமையாளர்கள் என்னை வேலைக்கு அமர்த்த தயங்கினார்கள். இப்போது இந்த சலூன் எனக்கு நம்பிக்கையையும், கண்ணியத்துடன் சம்பாதிக்க வேண்டும் என்ற எனது கனவினை நனவாகும் நம்பிக்கையையும் அளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.
பிரபாதேவியில் உள்ள ஒரு உயர்மட்ட பகுதியில் அமைந்துள்ள இந்த சலூன் Deutsche Bank மற்றும் Rotary Club of Bombay-யின் ஆரம்ப ஆதரவுடன் Pride Business Network Foundation மூலம் நடத்தப்படுகிறது. "பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவை எங்களுக்கு பெருநிறுவனத் தேவைகள். எங்கள் நிறுவன சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக, விளிம்புநிலை சமூகத்தை பிரதான சமூகத்தில் ஒருங்கிணைக்க இந்த முயற்சி உதவும். சமமான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான ஒரு சிறிய ஆனால் முக்கியமான படியாக இதை நாங்கள் பார்க்கிறோம்," என்று Deutsche வங்கி குழுமத்தின் (இந்தியா) தலைமை நிர்வாக அதிகாரி கௌசிக் ஷபரியா, சலூன் அமைக்க உதவியது குறித்து பேசினார்.
நான்கு அழகுக்கலை நிபுணர்கள் மற்றும் ஒரு மேலாளர் கொண்ட சலூனைத் தவிர, இந்த சலூனின் முதல் தளத்தில் ஒரு பயிற்சி மையத்தையும் அமைத்துள்ளனர். சலூன் உரிமையாளர் ஜைனப் கூறுகையில், 'எல்ஜிபிடிகு சமூகத்தினருக்கு வேலை கிடைக்கும் வகையில் அவர்களுக்கும் புதிதாக ஏதாவது கற்பிக்க விரும்புகிறோம்.
திருநங்கைகள் மற்றும் பொது வாடிக்கையாளர்கள் இங்கு வந்தால், நமது சமுதாயம் அதிகாரம் பெறும். மேலும் மும்பையின் முதல் டிரான்ஸ் கஃபேவை அந்தேரியில் ஜைனப் திறந்து வைத்தார். மேலும் இதுபோன்ற சலூன்களை நகரில் திறக்கும் திட்டம் உள்ளது என்றார்.
மேலும் காண்க:
ஆதார் எடுத்து 10 வருஷம் ஆயிடுச்சா? மறக்காம ஆன்லைனில் இதை பண்ணிடுங்க..
36 செயற்கைக் கோள்களுடன் LVM-III ராக்கெட் - இஸ்ரோ நிகழ்த்திய மற்றொரு சாதனை!
Share your comments