இயற்கையோடு இணைந்த வாழ்வு, ஈடு இணை இல்லாதது. நமக்கு அனைத்து வளங்களையும் தவறாமல் தரும் வல்லமைமிக்கது. அந்த வகையில் இயற்கைக்கு எந்தவித பங்கமும் ஏற்படுத்தாமல், பாரம்பரிய முறையில், விவசாயம் செய்ய விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வழிகாட்டுதல்களைத் தர தயாராக இருக்கிறார், விஜய் ஆர்கானிக்ஸின் உரிமையாளர் லோகேஷ்வரன்.
விஜய் ஆர்கானிக்ஸ் (Vijay Organics)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த இவர் கிருஷி ஜாக்ரன் தமிழ்நாடு ஃபேஸ்புக் பக்கத்தில், Farmer the Brand நிகழ்ச்சியின் மாதாந்திர நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் வெற்றியின் ரகசியம் குறித்து மனம் திறந்து பகிர்ந்துகொண்டார்.
அவர் பேசியதில் இருந்து,
நஞ்சில்லா உணவு, நமக்கும், நம்மைச் சார்ந்தவர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்கிறது இயற்கை விவசாயம். இந்த விஷயத்தில் குறிப்பாக மருந்து இல்லாமல், மண்ணைப் பொலபொலப்பானதாக மாற்றிவிட்டால் போதும், களைகளை துவம்சம் செய்து, விவசாயத்தில் வெற்றி பெறலாம்.
எங்கள் தோட்டத்தைப் பொருத்தவரை, ஒருபுறம் தென்னை, மா, கொய்யா, மாதுளை, தேக்கு, போன்ற மரங்களையும், மறுபுறம் நெல், ஜீரகசம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்புக்கவுனி, கருங்குருவை, சின்னார் என்படும் நீரழிவு நோயாளிகளுக்கான சிறப்பு சன்ன ரக அரிசி, ஆத்தூர் கிச்சிலி சம்பா இப்படி பலவற்றை சாகுபடி செய்து வருகிறோம். இத்துடன், வேர்க்கடலை, எள், மூலிகை செடிகளான வேம்பு, கருந்துளசி, கற்றாழை என அனைத்து வகை செடி மற்றும் மரம் வகைகளும் உண்டு.
அங்ககச் சான்று (Organic Certificate)
கல்பந்தல் தோட்டம், பண்ணைக்குட்டை, சொட்டுநீர்பாசனம், அசோலா வளர்ப்பு ஆகியவற்றுடன், அங்கக வேளாண்மை சான்று பெற்று, ஒருங்கிணைந்த இயற்கை விவசாயத்தை கடந்த 3 வருடங்களாக முன்னெடுத்து வருகிறோம்.
இராசயன விவசாயத்தில் இருந்து,இயற்கை விவசாயத்திற்கு மாறியபோது, களைகளைக் களைவது, பெரும் சவாலாக இருந்தது. இதனை சமாளிக்க, தக்கைப்பூண்டு, தொழுஉரம், மண்புழு உரம் வேஸ்ட் கம்போஸ்ட், மீன் அமிலம், பசுந்தாழ் உரம் உள்ளிட்டவற்றை நாங்ககே தயாரித்து பயன்படுத்தி வருகிறோம்.
ஒரு டன் மாம்பழம் (One ton Mango)
அத்துடன் நெல், விதைகள், அரிசி என மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றித் தமிழகம் முழுவதும் நாங்களே நேரடியாக விற்பனை செய்கிறோம். எங்கள் தோட்டத்தில் உள்ள ஒற்றை ஒட்டுண்ணி வகை மாமரம், ஆண்டுக்கு ஒரு டன் பழங்களை வாரி வழங்கி வருகிறது.
மருந்தில்லாமல், மண்ணைப் பாதுகாக்கும்போது, மண்ணும் நமக்கு எண்ணிலடங்காப் பலன்களை அளித்தித் தந்து நம்மை அரவணைத்துக்கொள்கிறது. ஆக விவசாயிகளே இயற்கை விவசாயத்தின் பக்கம் சென்றால் வெற்றி பெற முடியுமா? என்ற சந்தேகத்தில் மதில்மேல் பூணையாக நின்றுகொண்டிருக்கவேண்டாம்.
அங்கக வேளாண்மைக்கு செல்லலாம் என முடிவெடுத்தால், என்னைத் தொடர்புகொள்ளுங்கள், 3 மாதங்களின் உங்கள் மண்ணைப் பக்குவப்படுத்தி, இயற்கை விவசாயத்தை சிறப்பாகச் செய்துமுடிக்க நான் துணை நிற்கிறேன். இவ்வாறு லோகேஷ்வரன் கூறினார்.
மேலும் படிக்க...
நஷ்டம் இல்லாத விவசாயத்திற்கு வழிவகுக்கும் துணைத் தொழில்கள் - ஒருங்கிணைந்த இயற்கை பண்ணையத்தின் வெற்றி ரகசியம்!
ஷேர் மார்க்கெட் டெக்னிக்- விவசாயத்திலும் டபுள் லாபம் ஈட்டலாம்!
Share your comments