நம் அன்றாட வாழ்க்கையில் நாய்களின் பங்கினையும் அவற்றின் அன்பு மற்றும் விஸ்வாசத்தை பாராட்டவும், உலகெங்கிலும் உள்ள வீடற்ற, ஆதரவற்ற மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்படும் நாய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாய்களை பற்றிய சிறு தகவல்களை தெரிந்து கொள்வோம்.
வெறிநோய் என்றால் என்ன?
வெறிநோய் என்பது வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் நரம்பு மண்டலத்தை பாதிக்கக் கூடிய ஒரு உயிர்க்கொல்லி நோய் ஆகும். ஏற்கனவே நோய்த்தாக்கம் உள்ள மிருகங்கள் கடிப்பதன் மூலமாகவும், அவற்றின் எச்சில் வழியாகவும் ஏனைய மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் இந்நோய் பரவுகிறது.
பல விதமான நோய் அறிகுறிகள் காணப்பட்டாலும் நோய் பாதிக்கப்பட்ட மிருகங்களின் வாயிலிருந்து அதிகப்படியாக எச்சில் வடிவது, தண்ணீர் குடிக்காமல் இருப்பது, ஏதேனும் உணவு பொருட்களை விழுங்குவதில் சிரமத்தை உணர்வது, வலிப்பு ஏற்படுவது, வெளிச்சத்தைக் கண்டு பயப்படுவது மற்றும் வெறிபிடித்த நிலையில் இருப்பது போன்ற அறிகுறிகள் வெளிப்படையாகக் காணப்படுகின்றன.
பெரும்பாலும் நோய் பாதித்த நாய்களின் மூலமாகவே மனிதர்களுக்கும் இதர செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகளுக்கும் வெறி நோய் பரவுகிறது. நாய் கடிக்கும் போது அதன் எச்சில் வழியாக வெறிநோய் வைரஸ் மனிதர்கள் அல்லது கால்நடைகளின் உடலினுள் புகுந்து நரம்பு மண்டலத்தை பாதித்து நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நோயின் அறிகுறிகள் வெளிப்படும் காலம் கடிபட்ட இடத்திற்கும் மூளைக்கும் இடையே உள்ள தூரத்தைப் பொறுத்து அமையும்.
தடுப்பு நடவடிக்கைகள்
வெறிநாய் பாதிப்பில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்கு நோய் ஏற்படும் ஆபத்து உள்ள இடங்களில் பணியாற்றுபவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களுக்கான தடுப்பு மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். செல்லப்பிராணிகளை தெருக்களில் சுதந்திரமாக சுற்றித் திரிவதற்கு அனுமதிப்பதால் தெரு நாய்களிடம் இருந்து நோய் பரவ வாய்ப்புள்ளது. மேலும், செல்லப் பிராணிகளுக்கும் நோய் தடுப்பூசியினை முறையாக கொடுக்க வேண்டும். முறையாக தடுப்பூசி கொடுத்து செல்லப்பிராணிகளை வளர்ப்பதன் மூலம் செல்லப் பிராணிகளுக்கும் அதன் மூலமாக மனிதர்களுக்கும் நோய் ஏற்படுவதை தவிர்க்கலாம். தடுப்பூசி கொடுத்து வளர்க்கப்படும் நாய்களிலும் நாய் கடித்தால் உடனடியாக சிகிச்சையளிக்க வேண்டும். திடீரென நடத்தைகளில் மாற்றம் தெரிந்தாலோ நோய் அறிகுறிகள் தென்பட்டாலோ கண்காணிப்பில் வைக்க வேண்டும்.
தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு கருத்தடை செய்வதன் மூலம் தேவையற்ற இனப்பெருக்கத்தை தவிர்த்து நாய்களின் எண்ணிக்கையை குறைக்கலாம். இதன் காரணமாக தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டு அவை தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதும் இதன் காரணமாக நோய் பாதிப்பு ஏற்படுவதும் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நோய்பரவும் அபாயமும் தவிர்க்கப்படுகிறது. எல்லா நாய்களுக்கும் தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரைக் கொண்டு வெறிநோய்க்கு எதிரான தடுப்பூசி கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் அதிகமாக செல்லப் பிராணிகளுடன் செலவிடுவதை கூடுமான வரையில் தவிர்க்க வேண்டும். நாய்களுக்கு முறையான பயிற்சி அளிப்பதோடு நல்ல உடல் நலத்துடன் வளர்க்க வேண்டும். நாய்க்கு முறையாக தடுப்பூசி கொடுப்பதோடு சவால் நிறைந்த பகுதிகளில் பணியாற்றுவோர் தாங்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வெறி நோய் பாதிப்புக் குறித்து முழுமையாக தெரிந்து வைத்திருப்பதோடு நாய் கடித்தவுடன் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை குறித்த புரிதலையும் கொண்டிருக்க வேண்டும். வெறிநோய் பாதிப்பு உடைய நாய் கடித்தவுடன் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் நிச்சயமாக உயிரிழப்பு ஏற்படும். எனவே, வெறிநோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு மிக அவசியமாகும். விழிப்போடு இருப்போம்; வெறிநோயை எதிர்ப்போம்.
சி.அலிமுதீன்
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
சென்னை - 07
9677362633
Share your comments