1. கால்நடை

மாடுகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் சிகிச்சை முறைகள்

KJ Staff
KJ Staff

மடி வீக்க நோய்

கறவை மாடுகளில் மடி வீக்க நோய் பெரும்பாலும் நுண்கிருமி தொற்று மூலமாகவே ஏற்படுகிறது. மாட்டின் மடியானது வீக்கமாகவும், கடினத்தன்மையுடனும், வெப்பம் அதிகரித்தும் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பாலானது திரிந்து வெள்ளையாகவோ மஞ்சள் அல்லது இரத்தம் கலந்தோ காணப்படும். மடியினை நன்கு கழுவி, சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் - சோற்றுக்கற்றாழை-200 கிராம், மஞ்சள் பொடி-50 கிராம், சுண்ணாம்பு-5 கிராம்

சிகிச்சை முறை : (வெளிப்பூச்சு)

மேற்கண்ட பொருட்கள் மூன்றையும் ஆட்டுக்கல் உரலில் இட்டு நன்றாக கெட்டியாக அரைத்து பின் ஒரு கை அளவு எடுத்து நீர் விட்டு கரைத்து நீர்த்த நிலையில் கால்நடையின் மடிப்பகுதி முழுவதும் நன்றாக தடவ வேண்டும். நாள் ஒன்றுக்கு 10 முறை என்ற அளவில் மடி வீக்கம் குறையும் வரை பூச வேண்டும்.

வயிறு உப்புசம்  (Bloat)

கால்நடைகளில் உப்புசம் அல்லது நுரையோடு கூடிய வயிறு உப்புசம் தீவன மாறுபாடுகளினால் ஏற்படக் கூடியது. இது மிக எளிதில் செரிக்கக் கூடிய தானிய வகை உணவு மற்றும் ஈரமான பசுந்தீவனங்கள் அதிகமாக உண்பதால் ஏற்படுகிறது.

ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருத்துவப் பொருட்கள் - வெற்றிலை-10 எண்ணிக்கை, பிரண்டை-10 கொழுந்து, வெங்காயம் -15 பல், இஞ்சி -100 கிராம், பூண்டு -15 பல், மிளகு-10 எண்ணிக்கை, சின்ன சீரகம்-25 கிராம், மஞ்சள்-10 கிராம்.

சிகிச்சை முறை : (வாய் வழியாக)

சின்ன சீரகம் மற்றும் மிளகினை இடித்து பின்பு மற்ற பொருட்களோடு கலந்து அரைத்து இக்கலவையை 200 கிராம் கருப்பட்டியுடன் (பனை வெல்லம்) கலந்த பின் சிறு சிறு உருண்டைகளாக பிரித்து கல் உப்பு (தேவைப்படும் உப்பு – 100 கிராம்) தொட்டு நாக்கின் மேல் தடவி ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள்ளே செலுத்த வேண்டும்.

கோமாரி வாய்ப்புண் (Foot and Mouth Disease)

கோமாரி அல்லது கால் – வாய் காணை ஒரு நச்சுயிரி நோயாகும். இது மாடு, ஆடு மற்றும் பன்றிகளைத் தாக்குகிறது. வாயிலும் நாக்கிலும் கொப்புளங்கள் ஏற்படும். எச்சிலானது கம்பி போன்று வழிந்து கொண்டிருக்கும். காலின் குளம்புப் பகுதியில் புண்கள் தோன்றி கால் முழுவதும் வீக்கம் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளின் மடியில் கன்றுகளை பால் ஊட்ட விடுதல் கூடாது. இந்நோய் வராது தடுக்க முறையாக கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடுதல் மிக அவசியம்.

ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் - தேங்காய் துருவல் -1 தேங்காய் ( பால் கட்டியது), சீரகம் -50 கிராம், வெந்தயம் -30 கிராம், மஞ்சள் பொடி -10 கிராம், கருப்பட்டி (பனை வெல்லம்) -20 கிராம்.

சிகிச்சை முறை மாடு ஒன்றுக்கு உள் மருந்து : (வாய் வழியாக)

சீரகம், வெந்தயம், மஞ்சள், கருப்பட்டி அரைத்து தேங்காய் துருவலுடன் கலந்து நோய்கண்ட மாடு ஒன்றுக்கு தினமும் இருவேளை குறைந்த பட்சம் 3 நாட்கள் கொடுக்க வேண்டும். ஐந்து நாட்கள் கொடுக்க கால்நடைகள் நன்றாக குணமடைகிறது. மாட்டின் தலையைத் தூக்கிப்பிடித்து இரு கடைவாய் பகுதியிலும் மெதுவாக உள்ளே செலுத்த வேண்டும்.

கோமார் கால் புண் (Foot lesions)

தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : குப்பைமேனி -100 கிராம், பூண்டு-10 பல், மஞ்சள்-100 கிராம், இலுப்பை எண்ணெய் (அ) நல்லெண்ணெய்-250 கிராம்

சிகிச்சை முறை : (வெளி பூச்சு மருந்து)

முதல் மூன்று பொருட்களை இடித்து இலுப்பை எண்ணெயுடன் கலந்து காய்ச்சி பாதிக்கப்பட்ட கால்நடையின் கால்களை உப்பு, மஞ்சள் கலந்த நீரில் கழுவி ஈரத்தை சுத்தமான காய்ந்த துணியால் ஒற்றி எடுத்து பின் மேற்கண்ட மருந்தை இட வேண்டும்.

விஷ(ட)க் கடி

விடத்தன்மையுள்ள உயிரினங்களான தேள், குளவி, வண்டு, பூரான், அரணை மற்றும் சிறு பாம்புக் கடியினால் தோலில் தடிப்பு, உடல் வீக்கம், வயிறு உப்புசம், வாயில் நீர் வடிதல், முச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஆடுகளில் தென்படும்.

தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : உப்பு -15 கிராம், தும்பை இலை -15 எண்ணிக்கை, சிறியா நங்கை (இலை), (நில வேம்பு)-15 எண்ணிக்கை, மிளகு-10 எண்ணிக்கை, சீரகம் -15 கிராம், வெங்காயம்-10 பல், வெற்றிலை -5 எண்ணிக்கை, வாழைப்பட்டை சாறு-50 மி.லி.

சிகிச்சை முறை

சின்ன சீரகம், மிளகினை இடித்து பின்பு இதனுடன் மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்து இக்கலவையை சிறு உருண்டைகளாக 100 கிராம் கருப்பட்டி (பனை வெல்லம்) கலந்து உப்பில் தொட்டு நாக்கின் மேல் தேய்த்து ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள் செலுத்த வேண்டும்

English Summary: Cattle disease management Published on: 10 October 2018, 07:07 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.