புதிய கட்டுப்பாடுகளின்படி ஒரு மாடுபிடி வீரர் ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டும் பங்கேற்க முடியும் என தெரியவருகிறது. அதே நேரத்தில் கொரோனா பரிசோதனை கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்றது (World Famous)
பொங்கல் திருநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றதாகும்.
ஜனவரி14–ந் தேதி பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், 15–ந் தேதி பாலமேட்டிலும், 16–ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.
ஆண்டுதோறும் மிக சிறப்பாக நடந்து வரும் இந்த போட்டிகளுக்கு இந்த ஆண்டு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.இந்த கட்டுப்பாட்டின்படி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திட மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இது தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பேசியதாவது:–
கொரோனா பரபலைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு அறிவித்துள்ள விதிகளை கடைபிடித்தும், உச்சநீதிமன்ற வழிமுறைகளின்படியும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும்.
கொரோனா பரிசோதனை (Covid-19 Testing)
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும்.இந்த பரிசோதனை ஜல்லிக்கட்டு நடைபெறும் 48 மணி நேரத்திற்கு முன்னதாக மேற்கொள்ளப்படும்.
எனவே அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தொற்று இல்லாதவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
போட்டி நேரம் (Jalikattu Timings)
ஜல்லிக்கட்டு போட்டிகள் காலை 8 மணி முதல் பகல் 3 மணி வரை மட்டுமே நடைபெறும். ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டியிலும் 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் 50 பேர் வீதம், 6 சுற்றுகளாக களம் இறக்கப்படுவார்கள்.
50 சதவீத பார்வையாளர்கள் (50 % Spectators)
அரசின் உத்தரவுப்படி 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்பு தான் பார்வையாளர்கள் பகுதிக்கு அனுப்பப்படுவார்கள். அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஒரு போட்டிக்கு அனுமதி? (Permission for a match?)
இந்த ஆண்டு ஒரு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு மற்றொரு போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கக்கூடாது என அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
உதாரணமாக அவனியாபுரத்தில் பங்கேற்பவர்கள் அடுத்து நடைபெறும் பாலமேடு, அலங்காநல்லூரில் பங்கேற்க முடியாது என்று தெரிகிறது. அதாவது ஒரு வீரருக்கு ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும். அதே போல் ஒரு போட்டியில் பங்கேற்கும் மாடுகளுக்கும் மற்றொரு போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படாது என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் படிக்க...
தமிழகத்திற்கு 25 ஆயிரம் கால்நடைக் கொட்டகைகளைக் கட்டித்தருகிறது மத்திய அரசு!
41லட்சம் பால் சங்கங்களுக்கு விரைவில் கடன் வழங்கப்படும்- முழு விபரம் உள்ளே!
ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி- சில கட்டுப்பாடுகளுடன்!
Share your comments