1. கால்நடை

வாத்து வளர்ப்பு

KJ Staff
KJ Staff
Duck Farming - வாத்து வளர்ப்பு

வாத்து வளர்ப்பில் கிராமப்புற விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். மொத்த கோழியினங்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் மட்டுமே வாத்துகள் உள்ளன. மொத்த முட்டை உற்பத்தியில் 6 முதல் 7 சதவீதம் வரை வாத்துகள் பங்களிக்கின்றன. தற்பொழுது பரவலாக நாட்டுவகை வாத்துகள் வளர்க்கப் படுகின்றன. இவை ஆண்டுக்கு 100 முதல் 150 முட்டைகள் வரை மட்டுமே உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. அறுவடை நிலங்களில் மேய்த்து வளர்ப்பதால், போதுமான தீவனம் கிடைக்காததும் சிறப்பியல்புகள் குறைந்த முட்டை உற்பத்திக்கு காரணம். இது தவிர சில சமயங்களில் வாத்துகளைத் தாக்கக்கூடிய நோய்களுக்கு தடுப்பூசி போடவில்லை என்றாலும் முட்டை உற்பத்தி குறைவதோடு, வாத்துகள் இறப்பும் நேரிடும். ஆகவே, இத்தகைய சூழலில் முறையான வாத்து வளர்ப்பை அறிந்து, அதை கடைபிடிப்பது அவசியம்.

வாத்து வளர்ப்பின் நன்மைகள்

  • கோழிமுட்டை எடையுடன் ஒப்பிடும்போது வாத்து முட்டை 1520 கிராம் கூடுதல் எடை உடையது.
  • மூன்று ஆண்டுகள் வரை முட்டையிடக் கூடியது.
  • குறைந்த அளவு தீவனம் இருந்தால் கூட வாத்து வளர்க்க இயலும்.
  • வாத்துகளை தாக்கும் நோய்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
  • வாத்து வளர்க்க தேவையான தொடர் செலவுகள் மற்றும் பராமரிப்பு செலவுகள் கோழியினங்களை ஒப்பிடும் போது மிகவும் குறைவு.

 

வாத்து இனங்கள்

  • காக்கி கேம்பல்
  • இண்டியன் ரன்னர்

இந்த வகையான வாத்துகள் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளிலும், அண்டை மாநிலமான கேரளா மற்றும் ஆந்திராவிலும் பரவலாக முட்டைக்காக வளர்க்கப் படுகின்றன. இவை ஆண்டுக்கு 250 முதல் 300 முட்டைகள் வரை இடும்.


 இது தவிர செர்ரிவெல்லி என்னும் வீரிய கலப்பின வாத்துகள் உள்ளன. இவற்றை வளர்க்க மேய்ச்சல் நிலம் மட்டும் போதாது. இவ்வகையான வாத்துகளுக்கு அடர் தீவனமும், போதிய பாதுகாப்பான பண்ணை வீடுகளும் அவசியம். இவ்வகை வாத்துகள் 20 முதல் 22 வாரத்தில் முட்டையிட துவங்கும். இனப்பெருக்கத்திற்காக வளர்க்கும் போது 8 பெண் வாத்திற்கு 1 ஆண்வாத்து சேர்க்கப்பட வேண்டும். 

இறைச்சிக்காக வளர்க்கப்படுபவை:

  • மஸ்கவி
  • வெள்ளை பெக்கின்
  • ரூவன்

 

தீவன பராமரிப்பு

  1. இறைச்சி வாத்துகள்

இவ்வகை வாத்துகள் 7 வாரத்தில் குறைந்த பட்சம் 2.2 முதல் 2.5 கிலோ வரை வளரக் கூடியது. 

  1. முட்டை வாத்துகள்

முதல் 20 வாரத்திற்கு வாத்துகளுக்கு 12.5 கிலோ தீவனம் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு 120 முதல் 170 கிராம் தீவனம் என்ற கணக்கில் ஒராண்டிற்கு தோராயமாக 60 கிலோ வரை தீவனம் தேவைப்படும்.

  1. மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் வாத்துகள்
  • அறுவடை செய்த நிலங்களில் உள்ள உதிரி தானியங்கள் புழு, பூச்சிகள், நத்தைகளை உண்டு வாழ்கின்றன.
  • இவ்வகையான தீவனம் அதிக முட்டையிடுவதற்கு போதுமானது அல்ல. ஆகவே மேய்ச்சலில் விடுவதற்கு முன்பாகவும் மேய்ச்சலில் இருந்து வந்த பின்பும் கூடுதலாக நெல் போன்ற தானியங்களையோ அல்லது வாத்துகளுக்கென்றே தயாரிக்கப்பட்ட தீவனங்களையோ நாம் கொடுக்கலாம்.
  • ஒரு சில விவசாயிகள் குச்சி தீவனங்களை பயன்படுத்துகின்றனர். இந்த வகையான தீவனங்கள் ஒரு நாளைக்கு 50 கிராம் முதல் அதிகமாக 100 கிராம் வரை கொடுக்கலாம்.
  • அப்படி கொடுக்கப்படும் பொழுது தொடர்ச்சியாக முட்டையிடுவதற்கு போதிய ஊட்டச் சத்துகள் தீவனத்திலிருந்து கிடைக்கப் பெறுகின்றன.

 

குடற்புழுநீக்கம்
அதிக முட்டை இடுவதற்கு குடற்புழுநீக்கம் மிக முதன்மையானது. வாத்துகளை தட்டைப் புழு, உருண்டைப் புழு, நாடாப்புழு தாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் முட்டை உற்பத்திதிறன் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆகவே, 2 முதல் 3 மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்கம் அவசியம்.

 

வாத்துகளை தாக்கும் நோய்கள்

  • வாத்து காலரா
  • வாத்து பிளேக்

இத்தகைய நோய்கள் அதிக நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த நோய்களிலிருந்து வாத்துகளை பாதுகாப்பதற்கு தடுப்பூசி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். வாத்து காலராவிற்கு 3 முதல் 4 வாரத்திற்கும், வாத்து பிளேக்கிற்கு 8 முதல் 12 வாரத்திற்குள்ளும் தடுப்பூசி போடப்பட வேண்டும்.
ஆகவே, முட்டை உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு உயர்தர இனங்களான காக்கி கேம்பல் மற்றும் இண்டியன் ரன்னர் வாத்துகளை வளர்த்து அவற்றிற்கு மேய்ச்சல் நிலங்களில் உள்ள தானியங்களை தவிர கூடுதலாக தானியங்களையோ அல்லது தீவனங்களையோ கொடுத்து பராமரித்தோமானால் அதிக முட்டை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

கூஸ்வாத்து அடிப்படை தகவல்கள்

  • கூஸ்வாத்து என்பது வாத்து வகையை சார்ந்தது. கூஸ்வாத்து ஒருசில இடங்களில் மடைவாத்து என்றும் பங்களா வாத்து என்றும் அழைக்கப் படுகின்றன.
  • கூஸ்வாத்துக்கள் நோய் எதிர்ப்புத்தன்மை அதிகம் கொண்டவை.
  • இவற்றை பராமரிப்பதற்கு குறைந்த அளவு இடவசதி இருந்தாலே போதுமானது ஆகும்.
  • கோழியை போல பண்ணை வீடோ, அதிக பராமரிப்பு செலவோ தேவையில்லை.
  • இந்த கூஸ்வகை வாத்துக்கள் இறைச்சிக்காவும், அழகுக்காகவும் வளர்க்கப்பட்டு வருகின்றன.
  • இது தவிர அவற்றின் இறகானது தலையணை மற்றும் இறகுப்பந்து தயாரிக்க உதவுகின்றன.
  • மேலும் இவை காவல் காப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
  • கூஸ்வாத்தும், வாத்துக்களை போன்றே நீர்நிலைகளிலும், அறுவடை செய்த விளை நிலங்களில் உள்ள தானியங்களையும் உண்டு வாழக்கூடியது. 4 முதல் 20 கூஸ்வாத்துக்களை வீட்டின் புறக்கடையில் வளர்க்கலாம்.
  • அவ்வாறு வளர்க்கும் பொழுது சமையல் கழிவுகளை தீவனமாக பயன் படுத்தலாம்.

கூஸ் வகைகள்

  • சைனீஸ்
  • எம்டன்
  • ஆப்ரிக்கன்
  • ரஸ்யன்
  • டொலூஸ்

சிறப்பியல்புகள்

  • இந்த வகையான கூஸ் இனங்கள் அதிக வருமானத்தை தரக்கூடியது.
  • முற்றிலும் வளர்ச்சியடைந்த கூஸ்வாத்து 5 முதல் 6 கிலோ கிராம் வரை வளரக்கூடியது.
  • இவை ஆண்டிற்கு 50 முதல் 100 முட்டைகள் வரை இடக்கூடியது. ஒரு முட்டையின் எடை 100 முதல் 120 கிராம் வரை இருக்கும்.
  • பிராய்லர் வகை கூஸ்வாத்து 8 முதல் 9 வாரங்களில் 5 முதல் 6 கிலோ கிராம் வரையிலும் வளரக் கூடியது.
  • இவ்வகை கூஸ்இனங்கள் 1 கிலோ கிராம் எடை பெறுவதற்கு 4 கிலோ கிராம் தீவனம் தேவைப்படுகிறது.
  • இளம் கூஸ்வாத்து குஞ்சுகளுக்கு 2 முதல் 3 வாரம் வரை கோழி தீவனத்தை அளிக்கலாம்.
  • இனப்பெருக்கத்திற்காக வளர்க்கப்படும்பொழுது 5 பெண் வாத்திற்கு 1 ஆண் வாத்து வீதம் வளர்க்கப்பட வேண்டும்.
  • கூஸ்முட்டையின் அடைகாலம் 29 முதல் 34 நாட்கள் ஆகும்.
  • டிசம்பர் மாதம் முதல் முட்டையிட தயாராகிறது. அப்பருவத்தில் மேய்ச்சல் தீவனம் மட்டுமல்லாமல் கூடுதலாக தானியமோ (அ) தீவனமோ கொடுத்தோமானால் அதிக முட்டை பெறுவதற்கு வாய்ப்புள்ளது.
  • புறக்கடையில் மட்டுமின்றி கூஸ்வாத்து வளர்ப்பதை பெரிய தொழிலாக நடைமுறைப் படுத்தினால் இறைச்சி மற்றும் இறகிலிருந்து அதிக வருவாய் பெற வாய்ப்பு உள்ளது.
English Summary: Duck breeding in Tamil Nadu Published on: 18 September 2018, 10:02 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.