ஆஸ்திரேலியாவின் செம்மறி ஆட்டினை வளர்க்கும் கால்நடை விவசாயிகளின் தொழில் கடும் நெருக்கடியில் உள்ளது. 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆட்டிறைச்சியின் விலைகள் மிக கடுமையாக சரிவை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த எதிர்ப்பாராத விலை வீழ்ச்சியினால் விவசாயிகள் ஆடுகளை இலவசமாக கொடுக்க வேண்டிய நிலைக்கு அல்லது கருணைக்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என Bloomberg மற்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் சார்பில் செய்திகள் வெளிவந்துள்ளன.
இதற்காக காரணமாக சொல்லப்படுவது இரண்டு விஷயங்கள். முதலில் ஆடுகளின் எண்ணிக்கை பெருக்கம், இரண்டாவது எல் நினோ காலநிலை மாற்றம். ஆட்டிறைச்சி விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 70% சரிந்து கிலோ ஒன்றுக்கு $1.23 ஆக உள்ளது என்று இறைச்சி மற்றும் கால்நடை ஆஸ்திரேலியா (MLA- Meat and Livestock Australia ) வழங்கிய தரவு காட்டுகிறது.
எல் நினோ காலநிலையால் வறண்ட சூழ்நிலை நிலவுகிறது. பெருகி உள்ள ஆடுகளுக்கு போதிய மேய்ச்சல் இல்லாததால் அவற்றின் ஆரோக்கியம் குன்றியது. இதனால் இறைச்சிக்காக அனுப்பப்படும் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரே நேரத்தில் இறைச்சிக்காக குவியும் ஆடுகளால் அவற்றின் விலை அடிமட்டத்திற்கு சென்றுள்ளது. ”ஒரு சில விவசாயிகளுக்கு ஏறக்குறைய எதுவும் கிடைக்காது" என்று செம்மறி உற்பத்தியாளர் ஆஸ்திரேலியாவின் தலைவர் ஆண்ட்ரூ ஸ்பென்சர் கூறினார்.
செம்மறி ஆடுகள் தரம் குறைந்த நிலையில், சில விவசாயிகள் கால்நடைகளை கால்நடை வளர்ப்போருக்கு இலவசமாக கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், என்றார். "கடந்த இரண்டு ஆண்டுகளாக இது மிகவும் கொந்தளிப்பான நேரம்."
மேற்கு ஆஸ்திரேலியா கோதுமை பெல்ட்டின் வடக்கில், சில விவசாயிகள் செம்மறி ஆடுகளை கருணைக்கொலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன என்று WAFarmers இன் துணைத் தலைவர் ஸ்டீவ் மெக்குயர் கூறினார். "மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டுக்குட்டி மற்றும் ஆட்டிறைச்சி விலையில் புதிய உச்சம் அடைந்த நிலையில் செம்மறி ஆடு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். தற்போது அப்படியே நிலைமை தலைகீழாக மாறியுள்ளது” மேலும் சந்தை அடுத்த ஆண்டு வரை மீண்டு வராது என்று எபிசோட் 3 விவசாய ஆலோசனை நிறுவனத்தின் இணை நிறுவனர் மாட் டால்க்லீஷ் கூறினார்.
கடந்த மூன்று வருடங்களாக நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா போன்ற ஆஸ்திரேலியாவின் செம்மறி ஆடு வளர்க்கும் பகுதிகளில் சராசரிக்கும் அதிகமான மழைப்பொழிவு பெய்தது. மழைப்பொழிவு புல் வளர்ப்பதற்கு ஏற்றது. புல் நன்றாக வளர்ந்த நிலையில் கால்நடைகளுக்கு உணவளிப்பதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் ஏற்ற சூழ்நிலை நிலவியது. தற்போது நிலைமை மோசமாகியுள்ளது.
ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மைய கூற்றுப்படி, நவம்பரிலும் எல் நினோ தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. சில விவசாயிகள் செலவைக் குறைக்க தங்கள் ஆடுகளை இனச்சேர்க்கை செய்ய வேண்டாம் என்று கருதுகின்றனர் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.
இதையும் காண்க:
உட்கார்ந்த இடத்தில் நில அளவைக்கு விண்ணப்பிக்கலாம்- சூப்பர் அறிவிப்பு
Share your comments