கோவை மற்றும் நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் இடுப்பொடுட்கள் தடையின்றி கிடைக்க உரக்கடைகள் திறக்க அந்த அந்த மாவட்ட வேளாண் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
499 உரக்கடைகள் திறக்க அனுமதி
இது குறித்து கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி கூறியதாவது, தமிழகத்தில் நடைமுறையில் உள்ள முழு ஊரடங்கால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. கோடை மழையை பயன்படுத்தி பயிர் சாகுபடி செய்வதற்கு ஏதுவாக, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, விவசாயத்துக்கு தேவையான உரம், பூச்சி மற்றும் பூஞ்சை கொல்லி மருந்துகள் உள்ளிட்ட, வேளாண் இடுபொருட்கள் தடையின்றி கிடைக்க, அனைத்து கூட்டுறவு உரக்கடைகள் மற்றும் தனியார் உரக்கடைகளை திறக்க காலை 6:00 முதல் 10:00 மணி வரை அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசு அனுமதி பெற்ற, 499 தனியார் மற்றும் கூட்டுறவு உரக்கடைகளை திறக்கலாம். அரசின் முறையான தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, உரம் மற்றும் பூச்சி மருந்துகளை விற்பனை செய்யலாம் என்று அவர் தெரிவித்தார்.
277 உரக்கடைகள் திறக்க அனுமதி
இதேபோல், திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்ற 277 தனியாா் மற்றும் கூட்டுறவு உரக்கடைகளை திறக்க திருநெல்வேலி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.கஜேந்திரபாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் 1,957 ஹெக்டேரில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் காா் பருவ சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனா். தற்போது கரோனா பரவலை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது.
கோடை நெல் சாகுபடிக்கு தேவையான மேலுரங்கள், காா் பருவ நெல் சாகுபடிக்கு தேவையான அடியுரங்கள் இட வேண்டியதிருப்பதால் விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம், பூச்சி மற்றும் பூஞ்சாண கொல்லி மருந்துகள் தடையின்றி கிடைக்கும் வகையில் உரக்கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை திறந்திருக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்ற 277 தனியாா், கூட்டுறவு உரக்கடைகளும் திறக்கப்பட்டு, அரசின் கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி விற்பனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவசாயிகளும் கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி வேளாண் இடுபொருள்கள் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க....
வேளாண் தொழிலை பாதிக்காத வகையில் கடலூா் மாவட்டத்தில் 484 உர விற்பனை நிலையங்கள் திறப்பு!
உரத்திற்கான மானியம் உயர்வு- பழைய விலையில் விற்பனை!
காலை 6 மணி முதல் 9 மணி வரை - தனியார் உரக்கடைகளைத் திறக்க அனுமதி!
Share your comments