1. கால்நடை

ஆடு வளர்ப்பின் நன்மைகள் , கொட்டகை அமைப்பும், பராமரிப்பும் மற்றும் மேய்ச்சல் முறைகள்

KJ Staff
KJ Staff

கால்நடை வளர்ப்பு இந்தியாவில் ஒரு முக்கிய வணிகமாகும். இந்தியாவில் பசு, எருமை மற்றும் ஆடுகளின் அளவு அதிகமாக உள்ளது. ஆடுகளில்  20 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன, ஆனால் இந்த இனங்களில் இறைச்சி மற்றும் பால் வகைகளை பிரிப்பது கடினம். சில இனங்கள் பால் மற்றும் இறைச்சி ஆகிய  இரண்டிற்குமே வளர்க்கப்படுகின்றன. மற்றும் இவை வரதட்சணை இனங்கள் எனப்படுகின்றன.

விவசாயிகள் விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பும், அதில் இருந்து கிடைக்கும் பொருட்களையும்  உபயோகித்து வருகின்றனர். கால்நடை வளர்ப்பு எவ்வகை முக்கியத்துவம் கொண்டுள்ளது என்றால், இவைகள் விவசாயத்தில் பெரிதும் உதவுகின்றன. இவைகளின் சாணம் மற்றும் கழிவுகள் கலப்படம் இல்லாத உரமாக உபயோகப்படுகின்றன. மேலும் இவைகளின் பால் மற்றும் இறைச்சி உணவாக கிடைப்பதோடு விவசாயிகளுக்கு நல்ல லாபம் அளிக்கின்றன. 

விவசாயத்தில் லாபம் காணாத பலரும் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வெள்ளாடு வளர்ப்பு

மிகக்குறைந்த செலவில் பசு, எருமை போன்ற கால்நடைகளில் வளர்க்க முடியாத சூழலில் கூட வெள்ளாடுகளை வளர்க்கலாம். இதற்கு முதலீடு மிகவும் குறைவு. மேலும் வெள்ளாடுகள் மழை அளவு குறைவாக உள்ள வறண்ட நிலங்களில் கூட வளர்த்தல் எளிது. எனவே தான் வெள்ளாடுகளை “ஏழைகளின் பசு” என்று அழைக்கின்றனர்.

வெள்ளாடுகள் (மாமிசம்) இறைச்சி மற்றும் பால் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன. நிலமற்ற மற்றும் குறுநில ஏழை விவசாயிகளுக்கு வாழ்வுக்கு சிறந்த வழிகாட்டியான ஆடுகள் அதிக ஊட்டச்சத்துள்ள பாலை வழங்குகின்றன. வெள்ளாடுகள் ஆங்காங்கு இருக்கும் புதர்ச்செடிகளில் மேயும். அசாதாரமாண தட்பவெப்ப சூழ்நிலைகளையும் தாண்டி கிடைக்கும் புல் பூண்டுகளைக் கொண்டே உயிர் வாழக்கூடியது. உலகில் மாட்டுப் பாலை விட சில இடங்களில் ஆட்டுப்பாலையே விரும்பி அருந்துகின்றனர். அது போல் ஆட்டு இறைச்சியும், ஒரு முக்கிய உணவாகும். உலக சுகாதார நிறுவனப் கருத்துப்படி பசும்பாலை அருந்துவதால் வயிறு, தோல், காது போன்றவற்றில் வரும் ஒவ்வாமை 70 சதவிகிதம் குணமாகின்றன. வரலாற்றுக்கூற்றுப்படி ஆடுகளே முதன் முதலில் வளர்க்கப்பட்ட

மிருகம் ஆகும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பிருந்தே மனிதர்கள் ஆட்டின் பால், இறைச்சி, முடி, தோல், போன்றவற்றைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்தியாவில் ஏறக்குறைய 21 முக்கிய ஆட்டு இனங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் முக்கிய இனங்களாக உள்ளவை.

வெள்ளாடு இனங்கள்

தமிழ்நாட்டில் மூன்று வகையான வெள்ளாட்டு இனங்கள் உள்ளன.

1) கன்னி ஆடுகள்

2) கொடி ஆடுகள் மற்றும்

3) சேலம் கருப்பு

கன்னி ஆடுகள்

இவை திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே காணப்படும். உயரமான ஆடுகள், கருமை நிறம் கொண்டது, முகத்திலும், காதுகளிலும், கழுத்திலும் இரு வெள்ளை கோடுகள் இருக்கும். அடி வயிற்றுப் பகுதி மற்றும் கால்களின் உட்புறத்தில் வெள்ளை நிறம் காணப்படும். இத்தகைய நிறம் அமையப்பெற்ற ஆடுகளை ‘பால்கன்னி’ என்றும், வெண்மை நிறத்திற்குப் பதிலாக செம்பழுப்பு நிறம் கொண்டவைகளை ‘செங்கன்னி’ என்றும் அழைப்பர்.

கொடி ஆடுகள்

இவை தூத்துக்குடி மாவட்டத்தில், எட்டயபுரம் மற்றும் விளாத்திக்குளம் வட்டங்களில் பெரும்பாலும் காணப்படுகிறது. மிக உயரமான இவ்வகை ஆடுகள் நீண்ட கழுத்தும், உடலும் கொண்டவை. வெள்ளையில் கருமை நிறம் சிதறியது போன்ற நிறம் கொண்ட ஆடுகளை ‘கரும்போரை’ என்றும், வெள்ளையில் செம்பழுப்பு நிறம் கொண்டவைகளை ‘செம்போரை’ என்றும் அழைப்பர்.

சேலம் கருப்பு

இந்த வகையான ஆடுகள் சேலம் மாவட்டத்தில் குறிப்பாக ஓமலூர், மேச்சேரிப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. மேலும் தர்மபுரி, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. இவை பெயருக்கேற்றபடி முற்றிலும் கருமை நிறம் கொண்டவை. உயரமானவை மற்றும் மெலிந்த உடலமைப்பு கொண்டவை.

நல்ல பால் தரக்கூடிய ஆடுகளின் உடல் தன்மைகள் மற்றும் பண்புகள்:

1) தலை

சற்று பெரியதாக, அகலமான மூக்கும், வாயும் கொண்டதாக இருக்கவேண்டும். ஆட்டின் முகத்தில் பெண்மைத் தோற்றம் நன்கு தெரியவேண்டும்.

2) கண்கள்

கண்கள் பெரிதாக அகன்று பளிச்சென்று இருக்கவேண்டும்.

3) கழுத்து மற்றும் தோள்பட்டை

கழுத்து மெலிந்து நீளமாகவும், சமமாகவும் இருக்கவேண்டும். தோள்பட்டை, பின்கழுத்துப் பகுதிகள், கழுத்துடன் நன்கு இணைந்திருக்கவேண்டும்.

4) மார்பு

நன்கு அகன்று மென்மையான தோற்றத்துடன் இருக்கவேண்டும்.

5) முன்னங்கால்

நல்ல தோற்றத்துடனும், வலுவுடனும் இருக்கவேண்டும்.

6) பாதம்

பாதத்தை ஊனி நேராக நிற்கவேண்டும். காலைச்சாய்த்தவாறோ அல்லது நொண்டியபடி நடப்பதாகவோ இருக்கக்கூடாது.

7) உடல்

உடல் சற்று வளைந்து குழியுடன் இருக்கவேண்டும். பின்பகுதி தோள்பட்டையிலிருந்த இடுப்பு வரை நேராகவும் வால் பகுதியில் சற்று இறங்கியும் காணப்படலாம். பின்பகுதியில் அதிகக் குழுி இருத்தல் கூடாது. கழுத்திலிருந்து வால் வரை நீளம் அதிகமாக இருத்தல் நலம்.

8) விலா எலும்புகள்

இவை நன்கு புடைத்து, ஆடுகள் தாவும் போது கால்களுக்கு வலு சேர்க்கும் வகையில் இருக்கவேண்டும். வயிறு விலா எலும்பினைத் தாண்டி பெருத்து இருக்கக்கூடாது.

9) பின் பாகங்கள்

தொடை, பின்னங்கால் இணையுமிடம், இடுப்பு போன்ற பாகங்களுக்கிடையே போதுமான இடைவெளி இருக்கவேண்டும். பின்னங்கால்கள் முன்னே பார்த்து இருக்கவேண்டும்.

10) பின்னங்கால்கள்

பின்புறக் கால்களின் வளைவுகள் நன்கு இணைந்து எந்த ஒரு தொங்கலுமின்றி வலுவுடன் இருக்கவேண்டும்.

11) மடி மற்றும் காம்புகள்

மடியானது உடலின் அடியில் கீழே தொங்கியவாறு ஆட்டின் உடல் எடைக்கு ஏற்ற விகிதத்தில் அமைந்திருக்க வேண்டும். பக்கங்களில் இருந்து பார்க்கும் பொது பின்னங்கால்களுக்குச் சற்று முன்புறம் அமைந்திருக்கவேண்டும். பால் கறந்த பின்பு தளர்ந்து விடுவதாக, மென்மையானதாக இருக்கவேண்டும். காம்பு, நாளங்கள் எந்த சுருக்கமுமின்றி இருக்கவேண்டும். சராசரி நீளமுள்ள காம்பும் வயிற்றிலிருந்து நன்கு படர்ந்த நரம்புகளுடன் மடி நன்கு இருக்கவேண்டும்.

12) தோல் மற்றும் உரோமங்கள்

தோல் மென்மையானதாக வளையக்கூடியதாக தளர்ந்த நிலையில் இருக்கவேண்டும். ஆடுகள் பழங்காலத்திலிருந்தே மலைகள், சமவெளிப் பகுதிகள் பள்ளதாக்குகள், குளிர் மற்றும் பனிப்பிரதேசங்கள் வெப்ப மித, வெப்ப நாடுகள் என அனைத்து வகையான இடங்களிலும் மனிதர்களுக்கு சிறந்த இறைச்சி, பால் மற்றும் உரோமங்களை வழங்கி வருகின்றன. பொதுவாக உலகின் எல்லா இடங்களிலும் வெள்ளாடுகள் பால் தேவைக்காகவும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் வெப்ப மித வெப்பப் பகுதகளில் இறைச்சி, பால் உற்பத்திக்காகவும் வளர்க்கப்படுகின்றன. வெள்ளாடுகள் ‘பொவிடே’ என்னும் குடும்பத்தைச் சார்ந்தவை. இவை ‘கேப்ரா’ என்னும் ஜீன்ஸ் வகையைச் சார்ந்தவை. வெள்ளாடுகள் பெரிசியன் நாடுகளில் கிழக்குப் பகுதியைச் சார்ந்தவை.  இவை அறிவியல் பெயர் படி கேப்ரா ஹிர்கஸ், கேப்ரா ஏகாக்ரஸ் என்று அழைக்கப்படுகின்றன.

வெள்ளாடு வளர்ப்பின் நன்மைகள்

> வெள்ளாடு வளர்ப்பில் முதலீடு மிகவும் குறைவு.

> இவை அளவில் சிறியதாக உள்ளதால் கொட்டகைப் பராமரிப்புச் செலவு குறைவு.

> ஆடுகள் மிக்குறைந்த காலத்தில் 10-12 மாதங்களில் பருவ வயதை அடைந்து விடும். இவை 16-17 மாதங்களில் குட்டி ஈன்று விடும்.

> பொதுவாக ஆடுகள் ஒரு தருணத்தில் 2 குட்டிகள் மட்டுமே போடும். 3 அல்லது நான்கு குட்டிகள் போடுவது மிகவும் அரிது.

> வறண்ட நிலங்களில் மற்ற கால்நடையை விட வெள்ளாடு வளர்ப்பே சிறந்ததாகும்.

> ஆடுகள், பலவகைப்பட்ட பயிர்களையும் உண்பவை. இவை முட்புதர்கள், பூடுகள், வேளாண் பயிர்க்கழிவுகள் மேலும் வேளாண் உப விளைப்பொருட்கள் போன்ற அனைத்தையும் உண்பதால் தீவனப் பராமரிப்புக் குறைவு.

> ஆட்டு இறைச்சியில் பன்றி இறைச்சியை விட கொழுப்பு குறைவாகவே உள்ளது. மேலும் இதன் குளிர்ச்சி மற்றும் மென்று உண்பதில் எளிதாகையால் வெயில் காலங்களுக்கு மிகவும் ஏற்றது.

> பசும்பாலை விட வெள்ளாட்டுப்பால் எளிதில் செரிக்கக்கூடியது. இதில் ஏதும் ஒவ்வாமை ஏற்படுவதில்லை. மேலும் வெள்ளாட்டுப்பாலில் சிறிய கொழுப்பு திரள்களே உள்ளன. பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பொருட்கள் அதிகளவு உள்ளதால், நோய் எதிர்ப்பாற்றல் குறைவு.

> வெள்ளாடு செம்மறி ஆட்டுடன் ஒப்பிடும் போது 2.5 மடங்கு பொருளாதார அளவில் மிதவெப்பம் பகுதிகளுக்கு ஏற்றவை.

> ஆட்டிலிருந்து கிடைக்கும் தோல், முடி ஆகியவையும் பதனிடு தொழிற்சாலைகளில் பயன்படுகின்றன.

 கிராமப்புறப் பகுதிகளில் கூலி வேலை செய்வோர் மற்றும் ஏழை மக்களுக்கு இவ்வளர்ப்பு மிகவும் உகந்தது. கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பால் பொருட்கள் சம்பந்தமான குடிசைத் தொழில்களின் வளர்ச்சிக்கு இந்த ஆடு வளர்ப்பு பெரும் உதவி புரிகின்றது.

ஆட்டு கொட்டகை பராமரிப்பு

ஆடுகளுக்கு போதுமான  கொட்டகை அமைப்பே போதுமானது. வெள்ளாடுகளைப் பொறுத்தவரை கடும் மழை, வெயில், பனி மற்றும் உனி, பேன் போன்ற ஒட்டுண்ணி ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் அளவு எளிய கொட்டகை அமைப்பே போதுமானது. கிராமங்களில் பெரும்பாலும் மரத்தடி (அ) குடிசை நிழலில் தான் ஆடுகளை வளர்க்கின்றனர். நகரங்களில் வசிப்போர் அல்லது அதிக அளவில் ஆடுகளை வளர்ப்போர் நல்ல காற்றோட்டமுள்ள, வடிகால் வசதியுடன், தேவையான இட வசதியுள்ள கொட்டகை அமைத்தல் நல்லது.

1) நீண்ட முகப்பு கொண்ட முறை

ஆடுகளைத் தனித்தனியே பராமரிப்பதானால் 1.8 மீ x 1.8 மீ இட அளவுடன் நல்ல காற்றோட்டமுள்ள 2.5 செ.மீ தடிமனுள்ள ஓட்டைகளுடன் கூடிய பலகையின் பக்கங்களிலும் இரும்பு வாளி போன்ற அமைப்பை தீவனத்திற்காகவும், நீருக்காவும் பயன்படுத்தலாம். இந்த வாளியை தரையிலிருந்து 50-60 செ.மீ அளவு உயரத்தில் வைக்கலாம்.

கூரைகள் மூங்கில், தென்னங்கீற்று, பனை இலை, கோரைப்புல், வைக்கோல் போன்றவைகளில் ஏதேனும் ஒன்று கொண்டு அமைக்கலாம். ஆடுகளின் புழுக்கை, சிறுநீரை வெளியேற்றுவதற்கு சரியான அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

வெப்பப் பகுதிகளிலும், மழை அதிகமுள்ள பகுதிகளிலும் தரையிலிருந்து சிறிது உயரத்தில் கொட்டகையை அமைத்தல் நலம். அப்போது நல்ல காற்றும் கிடைக்கும், மழைக்காலங்களில் மழை நீர் கொட்டகையிலும் தேங்காமலும், சாரல் அடிக்கமால் இருக்கவும் இம்முறை மிகவும் ஏற்றது. தரையானது மரக்கட்டைகளால் சிறு இடைவெளியுடன் அமைந்து இருந்தால் ஒட்டுண்ணிகள் போன்ற நோய் பரப்பும் கிருமிகள், எளிதில் ஆடுகளைத் தாக்காமல் பாதுகாக்கலாம்.

2) கிடா ஆடுகளின் கொட்டகை

கிடா ஆடுகளுக்கென தனி கொட்டகை அமைத்து பாதுகாக்க வேண்டும். ரு கிடாவிற்கு 2.5 மீ / 2.0 மீ அளவுள்ள நீர் மற்றும் தீவனத் தொட்டியுடன் அமைந்த கொட்டில் போதுமானது, இரண்டு கிடாக்களை ஒரே கொட்டிலில் அடைத்தல் கூடாது. அதுவும் குறிப்பாக இனச்சேர்க்கைக் காலத்தில் அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்வதைத் தவிர்க்க, தனித்தனியே அடைப்பதே சிறந்தது.

3) சினை ஆடுகள் மற்றும் குட்டிகுளுக்கான அறை   

குட்டிகள் தனியான அறையில் கட்டப்படாமல் சுதந்திரமாக அதே சமயம் தாய் ஆடுகளை அனுமதியின்றி அணுகாதவாறு வைக்கப்பட்டிருக்கவேண்டும். குட்டிகளின் கொட்டில் உயரம் 1.3 மீ கதவும், சுவர்களும் இருக்கவேண்டும். அல்லது கூடை, உருளை போன்ற அமைப்புகளைப்  பயன்படுத்தலாம். 1.8 மீட்டர் அளவுள்ள இடத்தில் 10 குட்டிகள் வரை அடைக்கலாம். இந்த கொட்டில் கன்று ஈனும் சமயத்தில் பெட்டை ஆடுகளைச் சுதந்திரமாக விடவும் உதவும். இம்முறையில் கொட்டகை அமைப்புச் செலவு மற்றும் ஆட்கூலிகள் குறையும்.

மேய்ச்சல் முறை

1) கயிற்றில் கட்டி மேய்த்தல்

குறிப்பிட்ட இடத்தில் சில ஆடுகளை மேய விடுவதற்கு, இம்மேய்ச்சல் முறையே சிறந்தது. கொட்டகையின் வெளியில் வைத்து குறைந்த எண்ணிக்கையுள்ள ஆடுகளை மரத்திலோ அல்லது வேறு சில கட்டைகளிலோ கயிறு கொண்டு கட்டி மேய்க்கும் முறையில் அந்த இடங்களின் புற்கள் நன்கு மேயப்படுகின்றன.

இம்முறையில் காலை மற்றும் மாலை வேளைகளில் மேய்த்தல் சிறந்தது. கயிற்றின் நீளம் 35-50 செ.மீ நீளம் இருக்கவேண்டும். மற்ற மதிய நேரங்களில் கொட்டகையில் அடைத்து வைக்கலாம். இம்முறையில் நோய்களைப் பரப்பும் ஒட்டுண்ணிகள் போன்றவை பரவுவது குறைவு.

2) மேய்ச்சல் முறை

8-10 மணி நேரம் மேய்ச்சலுக்கு அனுப்பி இரவு நேரங்களில் மட்டும் பட்டிகளில் அடைப்பது.

3) கொட்டில் முறை

நாள் முழுவதும் கொட்டகையினுள் அடைத்து தீவனம் கொடுத்து வளர்ப்பதாகும். இம்முறையில் ஆழ்கூளங்களை போட்டு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை எடுத்து விட்டு புதிய ஆழ்கூளத்தை நிரப்பினால் சிறுநீர் மற்றும் சாணத்தின் அமோனியா வாயு ஆடுகளை அதிகம் பாதிக்காது.

4) மேய்ச்சல் கலந்த கொட்டில் முறை

4-5 மணி நேரம் வரை மேய்ச்சலுக்கு அனுப்பிப் பிறகு கொட்டகையில் வைத்துத் தேவையான பசுந்தீவனங்களையும், அடர் தீவனங்களையும் அளிக்கவேண்டும்.

5) பயிர் வயலில் விட்டு மேய்த்தல்

மலைத்தோட்டப் பயிர்கள் அல்லது அறுவடை முடிந்த வயல்களில் ஆடுகள் மேயச்சலுக்கு விடப்படுகின்றன. இதனால் ஆட்டின் கழிவுகள் வயல்களில் விழுவதால் மண்ணிற்கு நல்ல சத்துக் கிடைக்கிறது.

தீவனத் தொட்டியின் அமைப்பு

வெள்ளாடுகள் கீழே விழுந்த தீவனங்களையோ, புற்களையோ சாப்பிடாது. எனவே 5 செ.மீ தடிமனுள்ள மரப்பலகையாலான ஒரு பெட்டியை தீவனம் கட்டும் கயிற்றின் கீழே வைக்கவேண்டும். ஆடுகள் தீவனம் சாப்பிடும் போது கீழே விழும் துண்டுகளை இப்பெட்டியில் சேகரித்தால், மண்படாத அவற்றை மீண்டும் ஆடுகள் உண்டுவிடுவதால், தீவனம் வீணாகாமல் தடுக்கப்படுகிறது.

 

K.SAKTHIPRIYA

KRISHI JAGRAN

English Summary: goat farming benefits, housing management and preparation and breeds Published on: 14 June 2019, 04:13 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.