நாகப்பட்டினம் மாவட்டம் பாலையூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் (NADCP) 5-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், இன்று (10.06.2024) தொடங்கி வைத்தார்.
தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் 5-வது சுற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி முகாம் 10.06.2024 முதல் 10.07.2024 வரை கிராமங்கள் வாரியாக இலவச தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
வருடத்திற்கு இரண்டு முறை தடுப்பூசி:
கோமாரி நோய் மிக கொடிய வைரஸ் கிருமிகள் மூலம் பிளவுபட்ட குளம்புகள் உடைய பசு, எருமை, வெள்ளாடு போன்ற இனங்களை எளிதல் தாக்கக்கூடிய ஒன்று. இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் வாயிலும் நாக்கிலும் கால்குளம்புகளுக்கு இடையிலும் புண்கள் ஏற்படும். இதனால் தீவனம் உட்கொள்ள இயலாமல் எளிதில் மெலிந்துவிடும். எனவே, இந்நோய் வராமல் தடுப்பதற்கு கால்நடைகளுக்கு வருடத்திற்கு இரண்டுமுறை தடுப்பூசி மேற்கொள்வது சிறந்த வழியாகும். எனவே நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் ஒரு இலட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மருந்து இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இம்முகாம் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் நடைபெற உள்ளது. இம்முகாமில் 300-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1 லட்சம் கால்நடைகளுக்கு 21 நாட்களில் தடுப்பூசி போடப்படும். எனவே கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளுக்கு முகாமில் தடுப்பூசி போட்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுக்கோள் விடுத்தார்.
பாலையூரில் நடைப்பெற்ற தடுப்பூசி முகாமில் கால்நடை உரிமையாளர்களுக்கு தாது கலவையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இம்முகாமில் துணை இயக்குநர் (கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி) மரு.ஆ.ரவிச்சந்திரன், பாலையூர் ஊராட்சிமன்ற தலைவர் கமலா தேவி கார்மேகம், கால்நடை மருத்துவர்(திருக்குவளை) மரு.ஆர்.ரமேஷ், கால்நடை மருத்துவர்(நாகப்பட்டினம்) மரு.அ.வேல்மாணிக்கவள்ளி, கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்டத்திலும் தடுப்பூசி முகாம்:
நாகப்பட்டினத்தை போன்று அரியலூர் மாவட்டத்திலும் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் இன்று(10.06.2024) முதல் அடுத்த 21 நாட்களுக்கு மாவட்டத்திலுள்ள 1,46,700 கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுத்தொடர்பான அறிவிப்பில், கால்நடைகள் வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்பொழுது 3 மாதம் வயதுள்ள கன்று முதல் சினை, கறவை உள்ளிட்ட தங்களின் அனைத்து மாடுகளுக்கும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொண்டு, கால்நடைகளை இக்கொடிய நோய் வராமல் பாதுகாக்குமாறு கால்நடை விவசாயிகளுக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
Read more:
PM kisan 17 வது தவணை: பிரதமரின் முதல் கையெழுத்து விவசாயிகளுக்காக!
20-க்கும் மேற்பட்ட வாழை இரகம்- குமரி மாவட்ட விவசாயினை கௌரவித்த ICAR-IIHR
Share your comments