கால்நடைதுறையில் , தனியார் முதலீட்டை ஈர்த்து பால்பண்ணை உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மத்திய அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாய மக்களுக்கு உதவ மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், கால்நடைத்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (Animal Husbandry Infrastructure Development Fund) ( AHIDF) ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நலிவடைந்த கால்நடைத்துறையை மேம்படுத்த கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்ட 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு நிதியின் ஒரு பகுதியாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
3 சதவீதம் வட்டி மானியம்
இதன்படி விவசாயப் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் மைக்ரோ தொழில் முனைவோர் மற்றும் தனியார் நிறுவனங்கள் (MSMEs) பால் பண்ணை, இறைச்சி பதப்படுத்தும் தொழில், கால்டை தீவன உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றை அமைப்பதற்கு 3 சதவீதம் வரை வட்டியில் மானியம் வழங்கப்படும். இதன் மூலம் பால் உற்பத்தி அதிகரித்து, பால்பொருட்கள் ஏற்றுமதி ஊக்குவிக்கப்படுவதுடன், நாடு முழுவதும் சுமார் 35 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயனாளிகள் யார்?
இந்த கால்நடைத்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியைப் (Animal Husbandry Infrastructure Development Fund) பெற, விவசாய தொழில் நிறுவனங்கள், சிறு,குறு தொழில் முனைவோர், கால்நடை வளர்ப்பில் ஆர்வம் உள்ள இளைஞர்கள், தனிநபர்கள் உள்ளிட்டோர் தகுதி பெற்ற பயனாளிகள் ஆவர்.
வங்கி கடன்
பயனாளிகள் தாங்கள் விரும்பும் கால்நடைத்துறை சார்ந்த தொழிலைத் தொடங்க 10 சதவீதம் முதலீடு செய்தால் போதும். எஞ்சிய 90 சதவிதம் தொகையை வரையறுக்கப்பட்ட வங்கிகளில் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு பெறும் கடனுக்கு வதிக்கப்படும் வட்டியில் 3 சதவீதம் வரை மத்திய அரசு சார்பில் மானியம் வழங்கப்படும்.
இதன் மூலம் பால்பண்ணை, கோழிப்பண்ணை மற்றும் இறைச்சி பதப்படுத்தும் தொழிலில் ஈடுபடும் தனியாருக்கு 3 சதவீதம் வரை வட்டியில் மானியம் (Interest Subvention) வழங்கப்படுவது இதுவே முதன்முறையாகும். அதிலும் குறிப்பாக சமூக மற்றும் பொருளாதாரக் காரணிகளால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட 115 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு 4 சதவீதம் வரை வட்டியில் மானியம் வழங்கப்படுகிறது.
தவணையில் சலுகை
பயனாளிகள் வாங்கும் கடனை, 6 ஆண்டுகளில் தவணை மூலம் திருப்பிச் செலுத்த வேண்டும். எனினும் தொழில் தொடங்கிய முதல், மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் தவணை செலுத்தத் தேவையில்லை.
பயனாளிகளின் நலன் கருதி இந்த இரண்டு ஆண்டுகள் தவணை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
அரசின் இந்நடவடிக்கை மூலம், கொரோனா ஊரடங்கால் நலிவடைந்த தனியார் நிறுவனங்கள், கால்நடைத் துறையில் புதிய உத்வேகத்துடன் களமிறங்க உதவிக்கரம் நீட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.10 ஆயிரம் கோடி
இதேபோல் பால்பண்ணை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியாக (DIDF) (Dairy Infrastructure Development Fund) 10 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஏற்கனவே ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Elavarase Sivakumar
Krishi jagran
மேலும் படிக்க..
வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய காலக்கெடு நீடிப்பு!
அரசு ஊழியர்கள் - ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை!!
மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து ரத்து - தமிழக முதல்வர் அறிவிப்பு
Share your comments