விவசாயிகளுக்கு மானிய விலையில் 4 ஆயிரம் பசுக்கள் வழங்கப்பட உள்ளதாக மாநில அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், விவசாயிகளுக்கான பல்வேறு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இதனை நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்து உரையாற்றியதாவது:-
என் வீடு என் நிலம்
மானிய விலையில் விதைகள் மூலம் விவசாய நடவடிக்கைகளை அதிகப்படுத்தவும், நகர்ப்புற மற்றும் கிராமப் புறங்களில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டின் மாடியில் காய்கறி சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும்பொருட்டு என் வீடு என் நிலம் என்ற திட்டத்தின்கீழ் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான தோட்டக்கலை இடுபொருட்கள், விதைகள், நாற்றுகள், தோட்டக்கலை கருவிகள், நிழல்வலை ஆகியவை உள்ளடங்கிய தொகுப்பு 15 முதல் 30 உறுப்பினர்கள் கொண்ட குழுவுக்கு பாசிக் நிறுவனம் மூலம் இந்த ஆண்டில் சுமார் 5 ஆயிரம் தொகுப்புகள் வழங்கப்படும்.
விதைகள்
தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் பரப்பளவை அதிகரிக்கவும், விவசாயிகள் காய்கறிகள் செய்வதை ஊக்குவிக்கவும் பன்முக வேளாண்மை வாயிலாக ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் காய்கறி விதைகளை 50 சதவீத மானியத்தில் பயனாளிகளுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஆமை குஞ்சு பொரிப்பகம்
ஆமைகளைப் பாதுகாக்க புதுவை கடற்கரையோரத்தில் 5 கடல் ஆமை குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்படும். புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் 2 வன அறிவியல் மையங்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியுதவியுடன் தொலைபேசி சேவையுடன் கூடிய நடமாடும் கால்நடை சிகிச்சை மையம் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஆடு வளர்ப்பு
90 சதவீத மானியத்துடன் ஆடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படும். பொதுப்பிரிவு விவசாய பயனாளிகளுக்கு 25 சதவீத மானியம் மற்றும் அட்டவணை பிரிவு விவசாய பயனாளிகளுக்கு 33 சதவீத மானியத்தில் 4 ஆயிரம் கறவை பசுக்கள் வழங்கப்படும்.
கால்நடை மருத்துவக் கல்லூரி
கால்நடை பராமரிப்பை வலுப்படுத்த 500 பால் உற்பத்தியாளர்களுக்கு கால்நடைத்துறையின மூலம் பயிற்சி அளிக்கப்படும். இளங்கலை பட்டப்படிப்பு (விலங்கியல் அறிவியல்) மாணவர்கள் பயனடையும் வகையில் புதுவை பல்கலைக்கழகத்தின் ஒப்புதலுடன் 20 இடங்களுடன் கூடிய புதிய முதுகலை பட்டப்படிப்பு (உயிரி அறிவியல்) ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கப்படும்.இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments