மாடுகளை விலைக்கு வாங்கும் போது, மாடுகளின் வயதை அறிவது முக்கியம். பால் பண்ணைத் தொழில் (Dairy industry) லாபகரமாக அமைய வயது முதிர்ந்த மாடுகளை வாங்கக்கூடாது. இரண்டாவது ஈற்றில் உள்ள, இளம் வயதான கறவை மாடுகளை (Dairy cows) தேர்வு செய்ய வேண்டும். சில மாடுகள் வயது அதிகமாக இருக்கும், ஆனால் ஒரு முறை தான் கன்று ஈன்றிருக்கும். இவ்வாறு வயது அதிகமான மாடுகளை வாங்குவது நஷ்டத்தை தரும்.
மூன்று வகைப் பற்கள்:
பற்கள் முளைத்தல், பற்களில் ஏற்படும் மாற்றம் மற்றும் கொம்புகளில் உள்ள வளையங்களைக் கொண்டு மாடுகளின் வயதை (Cows age) தோராயமாக கணிக்கலாம். பற்களில், தற்காலிக பால் பற்கள் மற்றும் நிரந்தரமான பற்கள் என்று உண்டு. அவைகளில் முன் வெட்டுப் பற்கள், முன் கடை வாய்ப்பற்கள் மற்றும் கடைவாய்ப்பற்கள் என்று மூன்று வகை (Three types) உண்டு. மாடுகளுக்கு கோரைப்பற்கள் கிடையாது. மேல் தாடையில் முன் வெட்டுப் பற்களுக்குப் பதிலாக வெறும் ஈறு மட்டுமே காணப்படும். தற்காலிகப் பால்பற்களாக கீழ்த்தாடையில் 14 பற்களும் மேல் தாடையில் 6 பற்களும் இருக்கும். நிரந்தரமாக கீழ்த்தாடையில் 20, மேல் தாடையில் 12 பற்கள் இருக்கின்றன. ஒருவயதில் கீழ்த்தாடையில் உள்ள தற்காலிக முன் வெட்டுப்பற்களில் அதிக தேய்மானம் காணப்படும்.
வயதைக் கணக்கிடுதல்:
தற்காலிக பால்பற்கள் இரண்டு வயதில் விழுந்து நிரந்தர பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். கீழ்த்தாடையிலுள்ள ஒவ்வொரு ஜோடி நிரந்தர முன் வெட்டுப்பற்கள் புதிதாகத் தோன்றுவது ஒரு குறிப்பிட்ட வயதில் தான் நடைபெறும். ஆகவே, ஒரு மாட்டின் வயதை சில மாதங்கள் வித்தியாசத்தில் கூற முடியும். நிரந்தர பற்கள் (Permanent teeth) அளவில் பெரியதாய், நிலையானதாய் செவ்வக வடிவத்தில் வைக்கோல் நிறத்தில் (Straw color) காணப்படும். தற்காலிக பால்பற்கள் விழும்பொழுது ஜோடி ஜோடியாய் ஆறு மாத இடைவெளியில் விழுந்து நிரந்தர பற்கள் முளைக்கும். மாடுகளில் நிரந்தர முன்வெட்டுப்பற்கள் 2, 4, 6, 8, என்று இருந்தால் அவற்றின் வயது முறையே 2, 2 ½ , 3, மற்றும் 3 ½ வயதிற்கு (Age) மேல் என நிர்ணயிக்கலாம். மொத்த நிரந்தரப் பற்களும் முளைத்து விட்ட மாடுகளில் பற்களின் தேய்வைக் கொண்டு வயது ஓரளவு தீர்மானிக்கப்படுகிறது.
ஆறு வயதில் நடுவில் உள்ள முதல் ஜோடி நிரந்தர முன்பற்கள் தேய்ந்து மற்ற முன் வெட்டுப்பற்களை விடக் குறைவான உயரத்துடன் காணப்படும். மேலும் இடைவெளியுடன் காணப்படும். இது போன்று ஒவ்வொரு ஜோடியாகத் தேய்ந்து கொண்டு போக 10 வயது ஆகும் பொழுது எல்லா முன் பற்களுமே அதிகமாகத் தேய்ந்த நிலையில் காணப்படும். மாடுகளில் 12 வயதை முதிர்ச்சி அடைந்ததாக சொல்லலாம். வயதாகி விட்டால் ஒரு சில பற்கள் அல்லது அனைத்துப் பற்களும் உதிர்ந்து விடும். மூன்று வயதில் கொம்பின் அடிப்பாகத்தில் வட்டமாகக் கொம்பைச் சுற்றி ஒரு வளையம் (Circle) தோன்றும். பிறகு வருடத்திற்கு ஒரு வளையம் வீதம் தோன்றும். கொம்புகளைச் சீவி விட்டால் வயதைக் கணக்கிடுவது கடினம்.
உமாராணி, பேராசிரியர்,
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையம் திருப்பரங்குன்றம், மதுரை
0452 - 248 3903
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
சூரியசக்தியால் இயங்கும் மின்வேலி, பம்ப்செட்டுக்கு மானியம்! விவசாயிகளுக்கு அழைப்பு!
நீர்நிலைகளை சிறப்பாக பயன்படுத்தும் தமிழக விவசாயிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
Share your comments