மழைக்காலங்களில் ஆடுகளைத் தாக்கும் நீல நாக்கு நோய், பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி, மரணத்திற்கும் வாசல் அமைத்துத் தரும். எனவே கால்நடை விவசாயிகள் முறையாக ஆடுகளைப் பராமரிப்பது மிக மிக அவசியமாகிறது.
நீல நாக்கு நோய் (Blue tongue disease
நீல நாக்கு நோய் செம்மறியாடுகளைப் பாதிக்கக்கூடிய ஒரு நுண்ணுயிரி நோய். ஆனால் இந்த நோய் ஒரு தொற்று நோய் அல்ல என்பது கால்நடை விவசாயிகள் அனைவருமேத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம்.
ஆடுகளையேத் தாக்கும் (Attack the sheep)
இந்நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளில் காய்ச்சல், வாய் மற்றும் நாக்கில் புண்களும் ஏற்படும். இந்நோய் குறிப்பாக செம்மறியாடுகள், வெள்ளாடுகளைப் பாதிக்கிறது. மாடுகள் இந்நோயினால் மிக அரிதாகவே பாதிக்கப்படுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி (immunity)
இந்நோய் இந்தியாவில் பொதுவாகக் காணப்படுகிறது. இருப்பினும் ஒரு வயதிற்குள்ளாக இருக்கும் இளம் செம்மறியாடுகள் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
தாய்ப்பால் குடிக்கும் குட்டிகளுக்குப் பால் மூலம் இந்நோய்க்கான எதிர்ப்பு சக்திக் கிடைக்கிறது. இதனால் தாய்ப்பால் கிடைக்காதக் குட்டிகளே அதிகம் தாக்குதலுக்கு ஆளாகின்றன.
மழைக்கால நோய் (Rainy season disease)
மழைக் காலங்களில் குறிப்பாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்நோயின் தாக்கம் பொதுவாக அதிகமாகக் காணப்படுகின்றது
நோய்க்கான காரணங்கள் (Causes of the disease)
ரியோ விரிடே எனும் குடும்பத்தைச் சார்ந்த பூச்சிகளின் மூலம் பரவக்கூடிய ஆர்பி வைரஸ், நீல நாக்கு நோயினை ஏற்படுத்துகிறது.
கொசுக்களால் பரவுகிறது (Spread by mosquitoes)
-
குயூலிகாய்டஸ் இனத்தைச் சேர்ந்த கொசுக்கள் மழைக்காலத்தில் ஆடுகளைக் கடிக்கும் போது நீல நாக்கு நோய் இக்கொசுக்களால் பரவுகிறது.
-
வெயில் காலத்தின் பிற்பகுதியிலும், இளவேனிற் காலத்தின் முற்பகுதியிலும், இந்நோயினைப் பரப்பும் கொசுக்களின் உற்பத்தி அதிகமாக இருப்பதால் நோய் அதிகமாகப் பரவி ஆடுகளைத் தாக்குகிறது.
விந்து மூலமும் பரவும் (Spread through semen)
விந்துவின் மூலமாகவும், நஞ்சுக் கொடி மூலமாகவும் இந்நோய் பரவும்.
நோயின் அறிகுறிகள் (Symptoms of the disease)
-
பாதிக்கப்பட்ட ஆடுகள் சோர்ந்து, தீவனம் எடுக்காமல் காணப்படுதல்
-
மூக்கு மற்றும் வாய்ப்பகுதியில் உள்ள சவ்வு சிவந்து காணப்படுதல்
-
மூக்கு மற்றும் கண்ணிலிருந்து திரவம் வடிதல்
-
உதடுகள், ஈறுகள், வாய்ச்சவ்வு, நாக்கு ஆகியவை சிவந்து, புண்கள் தோன்றுதல்
-
நாக்கு நீல நிறமாக மாறுதல்
-
கழுத்தினை ஒரு பக்கமாகச் சாய்த்துக் கொள்ளுதல்
-
குளம்பின் மேல்பகுதி சிவந்து வீங்கிக் காணப்படுதல்
-
ஆடுகள் நொண்டி நடத்தல்
-
கண்ணின் உட்சவ்வு சிவந்து கண்களின் இமை ஒட்டிக்கொண்டு இருத்தல்.
-
விரும்பத்தகாத வாடையுடன் ஏற்படும் கழிச்சல்.
-
மூச்சு விட சிரமம், குறட்டை விடுதல், நுரையீரல் அழற்சி
-
மூச்சு விட சிரமப்பட்டு இறப்பு ஏற்படுதல்
நோய் பரவாமல் தடுக்க (Prevent the spread of disease)
-
நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளை மற்ற ஆடுகளிலிருந்து தனியாகப் பிரித்துப் பராமரித்தல்
-
பாதிக்கப்பட்ட ஆடுகள் நேரடி சூரிய ஒளியில் படாமல் வைத்துப் பராமரித்தல்
-
போதுமான ஓய்வு அளித்தல்
-
அரிசி, ராகி மற்றும் கம்புக் கூழ் தயாரித்துப் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்குக் கொடுத்தல்
-
விலங்குக் கொழுப்பு அல்லது கிளிசரினை புண்களின் மீது தடவ வேண்டும்.
-
அருகிலுள்ள தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரின் உடனடி ஆலோசனை பெற்று சிகிச்சை அளித்தல் நல்லது.
-
பாதிக்கப்பட்ட ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாதிருத்தல்
-
ஒரு கிராம் பொட்டாசியம் பர்மாங்கனேட்டை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளின் வாயினை ஒரு நாளைக்கு 2-3 முறை கழுவுதல்
-
நோய்க்கிளர்ச்சி ஏற்பட்டிருக்கும் போது அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி அந்தப் பகுதியில் வட்ட தடுப்பூசி முறையினை அமல்படுத்துதல்
கட்டுப்படுத்தும் முறைகள் (Control methods)
-
குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஆடுகளுக்கு தவறாமல் தடுப்பூசிப் போடுதல்
-
குயூலிகாய்டஸ் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்
-
புற ஒட்டுண்ணிகளுக்கான ஊணிகளை அதிக அளவு இந்நோய் பரப்பும் பூச்சிகள் உள்ள இடத்தில் ஆடுகளுக்குப் போட வேண்டும்.
-
நோய்த் தாக்குதல் அதிகமுள்ள பகுதிகளிலிருந்து ஆடுகள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்
நோய்க்கிளர்ச்சி அடிக்கடி ஏற்படும் பகுதிகளிலிருந்து ஆடுகள் பண்ணைக்குள் நுழைவதைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.
-
ஆடுகளின் மீது பூச்சிகள் அமர்வதைத் தடுக்கும் இரசாயனக் கலவை மருந்துகளான பியூட்டாக்ஸ் (ஒரு மிலி/ஒரு லிட்டர் தண்ணீர்) மருந்தினை ஆடுகள் மீது தடவுதல்.
பூச்சிகள் மற்றும் கொசுக்கள் உள்ளே நுழைய முடியாத கொட்டகைகளில் ஆடுகளை வளர்த்தல்.
-
காய்ந்த இலைகள் அல்லது மரங்களைப் பயன்படுத்தி மாலை 6-8 மணி அளவில் புகை மூட்டுவதால் குயூலிகாய்டஸ் கொசுக்களை செம்மறியாட்டுக் கொட்டகைகளிலிருந்து விரட்டி விடலாம்.
5 நாள் வரை (Up to 5 days
மாடுகள் இந்நோய் ஏற்படுத்தும் வைரஸின் நோய் தாங்கிகளாகச் செயல்படுகின்றன. இதன் காரணமாக மாடுகளின் இரத்தத்தில் இந்த வைரஸ் 5 வாரம் வரையிலும் உயிரோடு இருக்கும். எனவே மாடுகளின் நடமாட்டத்தைக் குறைக்க வேண்டும்
மேலும்படிக்க...
கால்நடைகளுக்கு கோடை கால தீவனப் பற்றாக்குறையைப் போக்க மர இலைகள்! கால்நடை மருத்துவர் யோசனை
கொரோனா ஊரடங்கு எதிரொலி! பன்னீர் திராட்சை பழங்கள் செடியிலேயே அழுகி வீணாகிறது!
Share your comments