வளர்ந்து வரும் முயல் வளர்ப்பு
முயல்கள் பொதுவாக செல்லப் பிராணிகளாக பலராலும் வளர்க்கப்படுகிறது. முயல்கள் ஆய்வக பரிசோதனைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த காரணத்தால் அவற்றை அங்கீகாரமின்றி இனவிருத்தி செய்வது இடைக்காலத்தில் தடைசெய்யப்பட்டிருந்தது. பின்னர் இவை உணவுக்காக அதாவது இறைச்சிக்காக வளர்க்கப்படும் பிராணிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதன் காரணமாக முயல் வளர்ப்பு சமீப காலமாக பிரபலம் அடைந்து வருகிறது.
அறிவியல் ரீதியிலான முயல் வளர்ப்பு
கொல்லைப் புறங்களிலும், தோட்டங்களிலும், பொழுது போக்கிற்காக செல்லப்பிராணியாகவும் வளர்த்து வரப்பட்ட முயல்கள் பின்னர் ஆழ்கூள முறையில் வளர்க்கப்பட்டு வந்தன. அறிவியல் ரீதியில் அல்லாமல் பொழுதுபோக்கிற்காகவும் வீட்டுக் கழிவுகளை/ சமையல் கழிவுகளை உணவாக கொண்டு எந்த முதலீடும் இல்லாமல் இவை வளர்க்கப்பட்டு வந்தன. ஆனால், முயல் இறைச்சிக்கு சந்தையில் நல்ல மதிப்பு இருப்பதாலும், முயல் வளர்ப்பு தொழிலுக்கு இந்தியாவில் நல்ல எதிர்காலம் இருப்பதாலும் சமீபகாலமாக அறிவியல்ரீதியான முயல் வளர்ப்பில் பெரும்பாலானோர் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள். பல்வேறு பல்கலைக்கழகங்களில் செயல்படுகிற வேளாண் அறிவியல் நிலையங்கள் அறிவியல் ரீதியான முயல் வளர்ப்பு குறித்த பயிற்சிகளை தொடர்ச்சியாக விவசாயிகளுக்காக வழங்கியும் வருகின்றன.
சாதகங்கள்
இறைச்சிக்காக, தோலுக்காக, உரோமத்திற்காக என பல்வேறு பயன்பாடுகளுக்காக வெவ்வேறு இனங்களை சேர்ந்த முயல்கள் வணிகரீதியில் வளர்க்கப்பட்டு வருகின்றன. உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக விளங்கும் விஷயம் பெருகிவரும் மக்கள் தொகையின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வது. அதிலும் குறிப்பாக புரதத் தேவையை பூர்த்தி செய்வது பெரும் சவாலாக விளங்குகிறது. கிராமப்புறம், நகர்ப்புறம் என எல்லா சூழ்நிலைகளிலும் பெண்கள், ஆண்கள், சிறியவர், வயதானவர் என எல்லாத் தரப்பினராலும் வளர்ப்பதற்கு ஏற்ற முயல்களின் இறைச்சி இந்த சவாலான சூழலை எதிர்கொள்ள கைகொடுப்பதால் தொழில் முனைவோருக்கு முயல் வளர்ப்பு நல்ல வாய்ப்பாகவும் நல்ல தேர்வாகவும் உள்ளது.
இனங்கள்
இந்தியாவை பொருத்தவரை வெள்ளை ஜெயண்ட், சாம்பல் ஜெயண்ட், அங்கோரா, நியூசிலாந்து வெள்ளை ஆகிய இனங்கள் பெருமளவு வளர்க்கப்படுகின்றன. இவற்றுள் அங்கோரா இன முயல்கள் உரோமத்திற்காக வளர்க்கப்படுகின்றன. இவை மலைப்பிரதேசம் மற்றும் குளிர்ப்பிரதேசங்களில் மட்டும் வளர்ப்பதற்கு உகந்தவை. ஏனைய இனங்களான வெள்ளை ஜெயண்ட், சாம்பல் ஜெயண்ட், நியூசீலாந்து வெள்ளை இனங்கள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. இவற்றை மலைப் பிரதேசங்களிலும் சமதளப் பரப்புகளிலும் வளர்க்கலாம்.
கிடைக்குமிடம்
கொடைக்கானல் தாலுக்கா மன்னவன் ஊரில் இயங்கி வரும் மத்திய செம்மறியாடு மற்றும் உரோம ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள மத்திய அரசு பண்ணையில் இனவிருத்திக்கான முயல்களைப் பெற்றுக்கொள்ளலாம். இங்கு இறைச்சி இன முயல்களான சோவியத் சின்சில்லா, வெள்ளை ஜெயின்ட் மற்றும் உரோம இன முயலான அங்கோரா இன முயல்கள் விற்கப்படுகின்றன. முயல் வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகளும் தொழில்நுட்ப உதவிகளும் இங்கு வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் ஊட்டியில் செயல்படும் சாண்டிநல்லா செம்மறியாட்டின இனவிருத்தி ஆராய்ச்சி நிலையம் மற்றும் காட்டுப்பாக்கத்தில் உள்ள முதுநிலை கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலைய பண்ணையிலும் இனவிருத்திக்கான முயல்களை வாங்கலாம். இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதியுதவியின் கீழ் செயல்படும் அனைத்து வேளாண் அறிவியல் நிலையங்களிலும் முயல் வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகளை கேட்டு பெற்றுக் கொள்ளலாம். முயல் வளர்ப்பு தொடர்பான பயிற்சிகளும் அவ்வப்போது வழங்கப்படுகின்றன.
சி. அலிமுதீன்
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
சென்னை-07
Share your comments