கறவை பசுக்களின் மலட்டுத் தன்மைக்கு ஸ்கேன் கருவி மூலம் நோயின் தன்மையை கண்டறிந்து சிறப்பு சிகிச்சையளிப்பது உட்பட பல்வேறு கால்நடை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நாளை திருச்சி மாவட்டம் சிறுகளப்பூர் பகுதியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைப்பெற உள்ளது.
இதுத்தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு-
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை, பால்வளம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழக மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 28.08.2023 அன்று (நாளை) காலை 8.30 மணி முதல் திருச்சிராப்பள்ளி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், சிறுகளப்பூர் கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல் பணி மேற்கொள்ளுதல், சினை பரிசோதனை செய்தல், மலடு நீக்க சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், தடுப்பூசிப் பணிகள் மற்றும் சிறு அறுவை சிகிச்சை போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி, வளர்ப்பு நாய்களுக்கு மற்றும் பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசியும் கோழிகளுக்கு, கோழி கழிச்சல் தடுப்பூசி போடப்படும்.
கிடேரி கன்று பேரணி நடத்தப்பட்டு சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும். அவசர சிகிச்சைக்கு கால்நடை ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்படும். கால்நடைகளின் சாணம், ரத்த மாதிரிகள், சளி, பால், தோல் சுரண்டல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நோய் தாக்குதல் மற்றும் அதன் தடுப்பு முறைகள் குறித்து கால்நடை வளர்ப்போருக்கு விளக்கப்படவுள்ளது. தீவன புல் விதைகள், கரணைகள் மற்றும் தாது உப்பு கலவை பைகள் வழங்கப்படும்.
அசோலா மற்றும் ஊறுகாய் புல் தயாரித்தல் தொடர்பான செயல்முறை குறித்து விளக்கமளிக்கப்படும். மேலும், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக கண்காட்சிகள் மற்றும் விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்தும், பால் உற்பத்தி திறன் அதிகரிக்கவும். தீவனம் உற்பத்தி அதிகரிப்பது குறித்தும் கருத்தரங்கு நடத்தப்படும்.
கறவை பசுக்களின் மலட்டுத் தன்மைக்கு ஸ்கேன் கருவி மூலம் நோயின் தன்மையை கண்டறிந்து சிறப்பு சிகிச்சையளிக்கப்படும்.
மேற்கண்ட பணிகள் அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்படும். எனவே சுற்றுபுற கிராம மக்கள் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து பயன்பெறும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காண்க:
விவசாயிகள் உயிரை பறிக்கும் பாம்பு- என்ன செய்யலாம்?
சண்டேவாது லீவாது- 13 மாவட்டங்களில் இன்று பேய் மழைக்கு வாய்ப்பு
Share your comments