
இன்றைய சூழலில் ஒரு வருமானத்தை மட்டும் வைத்து நமது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய இயலாது. அதே போன்று தான் விவசாகிகளும், வேளாண் தொழிலை மட்டும் செய்யாமல் அதற்கு தொடர்புடைய பண்ணையத் தொழிலை செய்வதன் மூலம் அவர்களின் வருமானத்தை பெருக்கிக் கொள்ளலாம்.
பண்டைய காலங்களில் ஒரு விவசாயி என்பவர் நிச்சயமாக இரண்டு மாடுகள், இரண்டு ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட பலவற்றையும் வைத்திருப்பதைப் பார்க்க முடியும். நிலத்தில் குறைந்தது இரண்டு வகையான காய்கறிகள், பழங்கள், நெல் வயலைச் சுற்றிலும் உயிர் வேலிகள், வரப்பின் ஓரங்களில் தென்னை மற்றும் பனை மரங்களை அதிகமாக நட்டு வைத்திருப்பர். விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பும் இணைந்த முறைக்கு பெயர் தான் `ஒருங்கிணைந்த பண்ணையம்.’
ஒருங்கிணைந்த பண்ணையத்தின் சிறப்பு என்னவென்றால் ஒரு பண்ணைத் தொழிலின் கழிவுப்பொருள் மற்றொரு பண்ணைத்தொழிலுக்கு இடுபொருளாக மாறுக்கிறது. இதனால் இடுபொருள்களின் செலவு குறைவதோடு, விவசாயிகளின் உர செலவு பெருமளவில் குறையும். இந்த ஒருங்கிணைந்த பண்ணையத்தில் பண்ணைகளில் கிடைக்கும் உரங்களைப் பயன்படுத்தினாலே போதும்.

ஒருங்கிணைந்த பண்ணையம்
விவசாயத்துடன் கீழ்வரும் உப தொழிலையும் நம்மால் செய்ய முடியும்.
- கறவை மாடு வளர்ப்பு
- மீன் வளர்ப்பு
- கோழி வளர்ப்பு
- ஆடு வளர்ப்பு
- காடை வளர்ப்பு
- காளான் வளர்ப்பு
- தேனீ வளர்ப்பு
- அசோலா
என எதை தேர்தெடுத்து செய்தாலும் வருடம் முழுவதும் வருவாய் கிடைக்க வழிவகை செய்யும்.
ஓருங்கிணைந்த பண்ணைய முறையில் பண்ணைத் திட்டம் தேர்தெடுக்கும் முன் நன்செய், புன்செய் நிலங்களுக்கு ஏற்றப பயிர் திட்டத்தை வகுக்க வேண்டும். விவசாயிகளின் நிலப்பரப்பு, நீர்ப்பாசன வசதி, வடிகால் வசதி மற்றும் பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து, அருகிலுள்ள வேளாண் நிலையங்களை அணுகி அறிவுரை பெறலாம்.
பொதுவாக உபதொழில்கள் ஒவ்வொன்றும் மற்றொரு உப தொழிலைச் சார்ந்து இருந்தால் பண்ணையில் விளையும் பொருட்களை கொண்டே தீவனக் கலவை தயார் செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உபதொழிலுக்கு ஆகும் உற்பத்திச் செலவை குறைத்து லாபம் பெறலாம்.
Anitha Jegadeesan
krishi Jagran
Share your comments