பாலைவனத்தில் வாழும் ஒப்பற்ற உயிரினம், அரேபியர்களால் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் இறைவனின் பரிசு என்று அழைப்பதையே பெருமையாக கொள்கிறார்கள். அதிசய விலங்கு என்று கூற காரணம் நீரின்றி, உணவின்றி, பல மாதங்கள் வாழக்கூடியது. ஒட்டகம் என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் ஒரு தாவர உண்ணி. குட்டிகளை ஈன்று பாலூட்டும் வகையை சார்ந்த ஒரு வீட்டுவிலங்கு எனலாம்.
ஒட்டகத்தின் உடல் அமைப்பு மற்றும் சிறப்புகள்
ஒட்டகத்தின் உடல் எடை 250 லிருந்து 680 கிலோ வரை வளரும். இதன் உயரம் 7 முதல் 8 அடி வரை இருக்கும். இவை சராசரியாக 30 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. பார்ப்பதற்கு சாதுவான விலங்காக இருந்தாலும் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் திறன் கொண்டவை. மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் தன்மை கொண்டவை. 200 கிலோ வரையிலான எடையைச் சுமந்து கொண்டு 50 கிலோ மீட்டர் தூரம் வரை நடக்கக் கூடியது. .
கொதிக்கும் மணலிலும் 50° செல்சியஸ் வெப்பத்திலும் உணவின்றி, நீரின்றி 8 நாட்கள் வரை இருக்கும். அதன் எடையில் 22% இழந்தபின்னும் உயிர் வாழும் தன்மை கொண்டவை. கடும் குளிர் காலத்தில் உணவின்றி, நீரின்றி ஆறுமாதம் வரை கூட இருக்கும். மேய்வதற்குப் புல் போன்ற சிறிது உணவு கிடைத்தால் கூட போதும், அடுத்த 10 மாதங்களுக்கு தேவையான அளவு சேமித்து கொள்ளும். இடையில் நீர் கூட அருந்தாமல் இருக்கக் முடியும். இடையில் சிறிது தண்ணீர் கிடைத்து விட்டால் போதும், இன்னும் அதிகமான நாட்கள் உணவின்றி, நீரின்றி இருக்கும்.
திமில் அமைப்பு
ஒட்டகத்தின் உடல் அமைப்பு மற்றும் உடல் கூறுகள் மற்ற விலங்கினக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை எனலாம். இதன் உடலில் மிக முக்கிய பகுதியாக முதுகிலுள்ள தசை முண்டு அல்லது புடைப்புப் (hump) பகுதியாகும். ஒட்டகம் தனக்கு தேவையான உணவு மாற்று தண்ணீரை அதன் தசைமுண்டு பகுதியில் சேமித்து கொள்ளும். காலியாக இருக்கையில் தன் வடிவத்தை இழந்து ஒரு பக்கமாகச் சாய்ந்து தொங்கும் (flops). அதே நேரத்தில் ஒட்டகம் தனக்குத் தேவையான தண்ணீரையும் சேமித்துக் கொள்கிறது.
திமில்களின் சிறப்பு
ஒட்டகத்தின் உடலில் இருக்கும் திமில்கள் சுமார் 45 கிலோ எடை வரை சேமித்து கொள்ளும். பொதுவாக அது கொழுப்பாக இருக்கும். உணவோ, நீரோ கிடைக்காத சமயங்களில் அதன் திமிலில் உள்ள கொழுப்பினை ஹைட்ரஜனோடு சேர்த்து சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை கலந்து நீராகவும், உணவாகவும் அவ்வப்போது தேவைக்கேற்ப ஆக்சிகரணம் செய்து மாற்றிக் கொள்கிறது. ஒரு திமில் அல்லது இரு திமில் கொண்ட இருவகையான ஒட்டகங்கள் உள்ளன. அவற்றில் இரு திமில் கொண்ட ஒட்டகங்களுக்கு அதிக சக்தி பெற்றவையாக இருக்கும்.
மூன்று வயிறுகள்
ஒட்டகத்திற்கு என்று பிரதேயமாக மூன்று வயிறுகள் உள்ளன.முதல் வயிறானது மேயும் போது பெறப்படும் உணவைப் பின்னர் அசைபோடுவதற்காகச் சேமித்து வைக்கும் இடமாகப் பயன்படுகிறது. இரண்டாவது வயிற்றில் உணவைச் செரிப்பதற்கான செரிமானச் சாறு (digestive juice) உற்பத்தி செய்யப்படுகிறது. மூன்றாவது வயிற்றில் அசைபோட்ட உணவு செரிமானமாகிறது. முதல் இரண்டு வயிறுகளின் சுவர்ப் பகுதிகளில் தண்ணீரைச் சேமித்து வைப்பதற்கான பொட்டலம் போன்ற அமைப்புகள் உள்ளன.
இவ்வமைப்புகள் நீரால் நிரம்பி இருக்கும்போது தசைகளால் பாதுகாக்கப்படுகின்றன. ஒட்டகத்திற்குத் தண்ணீர் தேவைப்படும்போது, தசைகள் திறந்தும் மூடியும் தேவையான நீர் வெளியேற்றப்படுகிறது. ஒட்டகம் மெதுவாகவும் குறைந்த அளவு எடை கொண்ட சுமையுடனும் பயணம் செய்யும்போது, அதன் வயிற்றிலுள்ள நீர் ஆறு முதல் பத்து நாட்கள் வரை அதற்குப் போதுமானதாயிருக்கும்.
100 லிட்டர் தண்ணீர் 10 நிமிடங்களில்
நீர் அருந்தாமல் சில மாதங்கள் இருந்தாலும் மீண்டும் நீர் அருந்தும்போது ஒரே மூச்சில் 100 லிட்டர் தண்ணீரைக் குடிக்கும் குணம் கொண்டது. இவ்வாறு நீரைக் குடித்தவுடன் 10 நிமிடங்களில் அதன் உடலில் தேவையான நீர்ச்சத்து பெற்று விடும். மற்ற விலங்குகள் நீர் இல்லாத உலர் நிலையில் இருந்து இத்துணை விரைவாக நீர்ப்பதம் அடைய இயலாது. பொதுவாக ரத்தத்தில் திடீரென்று இவ்வளவு நீர்த்த நிலை ஏற்பட்டால் எந்த உயிரினத்தின் சிவப்பணுக்கள் வெடித்து விடும். ஆனால் ஒட்டகங்கள் நீரை அருந்தியவுடன் அதன் இரைப்பையில் உள்ள நீர் அறைகளில் குடித்த நீரைத் தற்காலிகமாக ஏற்றிக் கொள்கிறது. பின் அங்கிருந்து உறிஞ்சப்பட்டு ரத்தத்தின் சிவப்பு அணுக்களில் ஏற்றி சேமித்துக் கொள்கிறது. அப்போது சிவப்பணுக்களின் சவ்வுப்படலமானது 240 % விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டது.
சக்தி வாய்ந்த சிறுநீரகம்
ஒட்டகத்திற்கு இருப்பது போல் சக்தி வாய்ந்த சிறுநீரகம் வேறு எந்த உயிரினத்திற்கும் கிடையாது. பொதுவாக மனிதனுடைய சிறுநீரில் அதிகபட்சமாக 8% தாது கழிவுகளும், 92 % நீரும் இருக்கும். ஆனால் ஒட்டகத்தின் சிறு நீரில் 40 % அதிகமாக கழிவுகளும், மிக குறைந்த அளவிலான நீரும் இருக்கும். அந்த அளவிற்கு குறைவான நீரைக் கொண்டு கழிவை வெளியேற்றும் சத்தி வாய்ந்தது. நம்முடை கிட்னியாக இருந்தால் எப்போதோ செயலிழந்திருக்கும். அதுமட்டுமில்லை, இரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகரித்து இறந்து விடுவோம். ஆனால், ஒட்டகம் மட்டும் எப்படி அதிக யூரியாவினால் பாதிப்படையவில்லை என்றால், அதன் ‘விசேஷ லிவர்’ ஆனது யூரியாவை மட்டும் இரத்தத்தில் இருந்து தனியே பிரித்து எடுத்து அதை புரோட்டீனாகவும் தண்ணீராகவும் மாற்றி விடுகிறது.
வைட்டமின் ‘C’ நிறைந்த ஒட்டக பால்
பொதுவாக பசு போன்ற விலங்கு சிறுநீர்/சாணம் இவற்றின் வழியாக 20 லிட்டர் நீரை ஒரு நாளைக்கு வெளியேற்றுகிறது.ஒட்டகத்தின் சாணத்தை அது போட்ட ஒரு சில மணி நேரத்தில் எரிபொருளாக பயன்படுத்தி விடலாம். அந்த அளவிற்கு உலர்ந்த நிலையில் சக்கையை மட்டும் வெளியேற்றும் பண்பு கொண்டது. ஆதனால் 1 லிட்டர் நீரை கூட வீணாக்குவதில்லை. அனைத்தையும் ஒட்டகம் பாலாக மாற்றி மனிதனுக்கு தருகிறது. கிடைத்ததை உண்டு பத்து கறவை மாடுகள் கொடுக்கும் பாலை ஒரு ஒட்டகம் கொடுக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ..! பசுவின் உடல் சூடு ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி விட்டால் பால் சுரப்பு குறையும். ஆகவே அதன் கொட்டகையை நிழலில் வைத்து அதன் மேல் நீரை ஊற்றியோ, அல்லது வெப்பம் குறைவாக உள்ள இடத்தில் வைத்தோ பராமரிக்க வேண்டும். ஆனால் ஒட்டகதிற்கு என்று ப்ரதியகமாக ஏதும் தேவை இல்லை. பலநாட்கள் வெயிலிலேயே நின்றாலும் கூட அதனால் பால் இயலும். பசுவிற்கு நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒன்று பால் நின்றுவிடும் அல்லது பாலில் உள்ள கொழுப்பு 30% அதிகரித்து, பால் குடிக்க முடியாத நிலைமைக்கு மாறிவிடும். ஆனால் ஒட்டகம் அப்படி அல்ல. கடுமையான கோடையில் கூட குறைந்த அளவு நீரை குடித்துவிட்டு தன் குட்டிக்கும் பாலை கொடுத்துவிட்டு 15லிருந்து 20 லிட்டர்வரை நமக்கும் பால் கொடுக்க கூடியது. தொடர்ந்து பத்து நாட்கள் வரை நீர் குடிக்க விட்டாலும் கூட அதே தரத்தில் அதே அளவு பாலை கொடுக்க முடியும். ஒட்டகப் பாலில் பசும்பாலை விட மூன்று மடங்கு வைட்டமின் ‘C’ அதிகம் உள்ளது. இது காய்கறிகள், பழங்களுக்கு நிகரான அளவு பாலைவன மக்களுக்கு அவசியமான உணவினை தருகிறது.
மூச்சு காற்றின் ஈரப்பதம்
மனிதன் தன்னுடைய மூச்சை ஒரு நோக்கி விட்டால் கண்ணாடியின் மேல் ஈரம் படர்வதை காணலாம். அதாவது நாம் 1-லிட்டர் காற்றை சுவாசித்தும் என்றால் 16 மில்லி கிராம் நீரை இழந்திருக்கிறோம் என்று பொருள். கடும் வெப்பக்காற்றை சுவாசிக்கும் ஒட்டகம் அக்காற்றை ஈரப்படுத்துவதுடன் வெளிவிடும் மூச்சில் ஈரம் மனிதனை விட பல மடங்கு குறைவாக உள்ளது.இதன் மூக்கமைப்பானது, சுவாசித்து வெளியே அனுப்பும் காற்றில் உள்ள ஈரத்தில்,மூன்றில் இரண்டு பகுதியை வெளியேற விடாமல் தடுத்து விடும் அமைப்பு உடையது. மேலும், பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரை கூட தன் மோப்ப சக்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது.
ரப்பர் போன்ற உதடுகள்
ஒட்டகத்தின் உதடுகள் ரப்பர் போன்ற அமைப்பை கொண்டது.இதன் காரணமாக அதனால் குத்தும் முட்களை கொண்ட சப்பாத்திக்கள்ளி, கற்றாழை போன்றவற்றை உண்ண முடிகிறது. அந்த விசேஷ உதட்டமைப்பு அதனுடைய நாக்கினை நீட்டாமல் அப்படியே மேய உதவுகிறது. உண்ட உணவை தனித்தனியே பிரித்து செரிக்கும் வேலையை அதன் நான்கு அரை கொண்ட விசேஷ இரைப்பை கவனித்து கொள்கிறது. அவசரமாக சாப்பிட்டதை ஆர அமர நிதானமாய் மீண்டும் வாய்க்கு கொண்டு வந்து அசை போட்டு கொள்ளும்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments