உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை பிரிவு துவக்க விழா அடிவள்ளி கிராமத்தில் நடந்தது. உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கான நிரந்தர கட்டடம் கோழிக்குட்டை கிராமத்தில் கட்டப்பட்டு வருகிறது. கால்நடை மருத்துவ கல்லுாரி சார்பில், கால்நடை வளர்ப்புக்கான பல்வேறு வழிகாட்டுதல்கள் சிறப்பு முகாம்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.
நடமாடும் கால்நடை மருத்துவமனை (Moving Veterinary Hospita)
கால்நடை மருத்துவ கல்லுாரி சார்பில், நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை திட்டத்துக்கு, அடிவள்ளி கிராமம் தத்தெடுக்கப்பட்டது. அக்கிராமத்தில், திட்ட துவக்க விழா நடந்தது. விழாவில், திட்டத்தை துவக்கி வைத்து, கால்நடை மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் டீன் குமரவேல் பேசியதாவது: அடிவள்ளி சுற்றுப்பகுதி கிராமங்களில், 2,500க்கும் அதிகமான கால்நடைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இக்கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கவும், பராமரிப்பு ஆலோசனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கால்நடை மருத்துவ கல்லுாரி சார்பில், திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, வாரந்தோறும் புதன்கிழமைகளில், காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரை, சிறப்பு டாக்டர்கள் குழு வாயிலாக முகாம் நடத்தப்படும். முகாமில், செயற்கை கருவூட்டல் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்படும். தங்கள் கிராமத்திலேயே தங்களது கால்நடைகளுக்கான சிகிச்சை கிடைப்பதால், கால்நடை வளர்ப்போர் அதிகம் பயன்பெறுவார்கள். இந்த முகாமிற்கென பிரத்யேகமாக வாகனமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து கால்நடைகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டது. கால்நடை வளர்ப்பவர்கள் இத்திட்டத்தை சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க
Share your comments