1. கால்நடை

பயிர்களில் ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் அறிகுறிகள்

KJ Staff
KJ Staff

பேரூட்டம் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் பற்றாக்குறை ஏற்பட்டால் அவை பயிரில் அறிகுறிகளை ஏற்படுத்துவதுடன் விளைச்சலும் குறையக் காரணமாகிறது. ஊட்டச்சத்துக்களால் ஏற்படும் குறைபாடுகளைக் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதன் மூலம் நல்ல பயிர் வளர்ச்சியைப் பெறுவதுடன் மண் வளத்தையும் காக்கலாம்.

ஊட்டச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள்

 • நைட்ரஜன் / தழைச்சத்து (N)

முதிர்ந்த இலைகளின் நுனி மஞ்சள் நிறமாகும். இலைகள் வெளிறிய பச்சை நிறத்தில் இருக்கும். மஞ்சள் நிறம் நடு நரம்பின் வழியாக காம்பை நோக்கி பரவும். பயிர்களின் அடியிலிருந்து மேல்நோக்கி இலைகள் உலரத் தொடங்கி, உதிர்ந்துவிடும். தானியப்பயிர்களில் தூர்களின் எண்ணிக்கை குறைவதால் விளைச்சல் குறையும்.

நிவர்த்தி செய்யும் முறை

 • 5-1 சத யூரியா கரைசலை இலைகள் மீது தெளிக்க வேண்டும். தழைச்சத்து உரங்களை அடியுரமாகவும், பயிரின் முக்கிய வளர்ச்சிப் பருவத்தில் மேலுரமாகவும் இடவேண்டும்.
 • தழைச்சத்து வீணாவதைத் தடுக்க மெதுவாகக் கிடைக்கக்கூடிய நிலையில் உள்ள உரங்களைப் பயன்படுத்தலாம். உ.ம். தார் பூசிய யூரியா, வேப்பம் புண்ணாக்கு கலந்த யூரியா)
 • பாஸ்பரஸ் / மணிச்சத்து (P)

இலை முழுவதும் அல்லது இலையின் ஓரங்கள் கத்திரிப்பூ நிறத்தில் காணப்படும். பயிரின் வளர்ச்சி குன்றி, முதிர்ச்சியடைதல் தாமதமாகும். கதிர்களில் மணிபிடிப்பு பாதிக்கப்படும்.

நிவர்த்தி செய்யும் முறை

பயிருக்குத் தேவைப்படும் மணிச்சத்தை அடியுரமாக இடவேண்டும். மண் ஆய்வுப்படி மணிச்சத்து உரமிடல் வேண்டும்.

 • பொட்டாசியம் / சாம்பல் சத்து (K)

பயிர் வளர்ச்சி குன்றி இலை நுனி மற்றும் விளிம்புகள் கருகி, சுருண்டு இருக்கும். புகையிலை, வாழை, பருத்தி மற்றும் உருளைக்கிழங்கு பயிர்களில் இச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள் நன்கு தெரியும்.

நிவர்த்தி செய்யும் முறை

பயிருக்குப் பரிந்துரைக்கப்படும் சாம்பல்சத்தை அடியுரமாகவும், மண்ணின் தன்மைக்கேற்ப மேலுரமாகவும் இடவேண்டும்.

 • கால்சியம் (Ca)

இலை விளிம்புகளில் வெண்ணிறம் படர்ந்து காணப்படும்.

நிவர்த்தி செய்யும் முறை

சுட்ட சுண்ணாம்பு மண்ணில் இட்டு உழுதல் வேண்டும். கால்சியம் சத்துள்ள உரங்களைப் பயன்படுத்த வேண்டும். உம். சூப்பர் பாஸ்பேட், கால்சியம் அம்மோனியம் நைட்ரேட்டு

 • மெக்னீசியம் (Mg)

முதிர்ந்த இலைகளில் வெண்ணிறத் திட்டுகள், புள்ளிகள் தோன்றும். நரம்பிடைப் பகுதிகள் மஞ்சள் நிறமாகவும், நரம்புகள் பச்சையாகவும் இருக்கும். பருத்தி பயிரில் இலைகள் செந்நிறமாக மாற்றமடையும்.

நிவர்த்தி செய்யும் முறை

 • மெக்னீசியம் சத்து கொண்ட உரத்தை நிலத்திலிட வேண்டும்.
 • மெக்னீசியம் சல்பேட் 1 சத உப்புக் கரைசலை இலைகளில் தெளிக்க வேண்டும்.

கந்தகம் (S)

பாதிக்கப்பட்ட பயிரின் இலைகளில் மஞ்சள் நிறம் படர்ந்திருக்கும். நரம்பிடை பாகங்களைக் காட்டிலும் நரம்புகள் வெளுப்பாக இருக்கும். பச்சையம் மற்றும் புரத உற்பத்தி குறைந்து வேர் மற்றும் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது.

நிவர்த்தி செய்யும் முறை

கந்தகச் சத்துள்ள உரங்களைப் பயன்படுத்த வேண்டும்.

இரும்பு (Fe)

 • காரத்தன்மை மற்றும் சுண்ணாம்புச்சத்து அதிகம் உள்ள நிலங்களில் இச்சத்துப் பற்றாக்குறை அதிகமாகக் காணப்படும்.
 • இளம் இலைகள் மஞ்சள் நிறமாகும்.

நிவர்த்தி செய்யும்முறை

இரும்பு சல்பேட் அல்லது இரும்புக் குளோரைடு உப்பை நிலத்திலிடல் வேண்டும். 0.5-1.0 சத இரும்பு சல்பேட் கரைசலை இலைகள் மேல் தெளிக்கலாம். காரத்தன்மை உள்ள நிலங்களில் இரும்பு கீலேட்டுகளை (Fe-EDTA) இடலாம்.

 • துத்தநாகம் (Zn)

இலைகள் சிறுத்து பசுமை இழந்து விடும். பயிர் வளர்ச்சி தடைபடும். வேர்கள் நீரை உறிஞ்சாது.

வேர்களில் தடிப்புகள் தோன்றி, அதில் புதிய வேர்கள் தோன்றும். மக்காச்சோளப் பயிரில் வெள்ளை மொட்டு, இளம் மஞ்சள் கோட்டு நோய், குட்டை நோய், சூரியகாந்தியில் இலை அடுக்குநோய். நெற்பயிரில் கைரா நோய் போன்றவை இச்சத்து பற்றாக்குறையால் தோன்றும்.

நிவர்த்தி செய்யும்முறை

துத்தநாக சல்பேட் உரத்தை அடியுரமாக நிலத்தில் இடவேண்டும். 0.5 சத துத்தநாக சல்பேட் கரைசலை இலைகளின் மீது தெளிக்க வேண்டும்.

 • மாங்கனீசு (Mn)

இளம் தளிர்களில் இலைகள் வெளிறி, நரம்புகள் பச்சையாகி நரம்பிடைப்பகுதி மஞ்சள் நிறமாகும். சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ள நிலங்களில் இப்பற்றாக்குறை ஏற்படும். ஒட்ஸ் பயிரில் சாம்பல் புள்ளி நோய், சர்க்கரைக்கிழங்கில் மஞ்சள் புள்ளி நோய் மற்றும் கரும்பில் பஹாலா கருகல் நோய் ஆகியவை இதன் குறைபாட்டால் ஏற்படும்.

நிவர்த்தி செய்யும்முறை

0.2-10 சத மாங்கனிஸ் சல்பேட் கரைசலை இலைகளில் தெளிக்க வேண்டும்.

தாமிரம்

பயிரின் குருத்து கருகி, அதன் அடியில் பல குருத்துகள் தோன்றி கருகும். தானியப் பயிர்களில் வெள்ளை இலை நுனி நோய், குதிரை மசால் பயிரில் - இலை சுருட்டு நோய் மற்றும் எலுமிச்சையில் எலிவால் அமைப்பு நோய் ஆகியவை இதன் பற்றாக்குறையால் ஏற்படும்.

நிவர்த்தி செய்யும்முறை

 • எக்டருக்கு 1-15 கிலோ தாமிர சல்பேட்டை நிலத்தில் இட்டு உழவேண்டும்.
 • 2 சத தாமிர சல்பேட் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றை நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.

போரான் (Bo)

 • பழவகை மரங்களிலும், காய்கறிச்செடிகளிலும் வளரும் இளந்திசுக்கள் கருகும்.
 • கிளை மற்றும் தளிர்களின் வளர்ச்சி குன்றி, காய்ந்து, கருகிவிடும்.
 • தசைப்பற்றுள்ள திசுக்களின் உள்பாகம் செந்நிறமாகும்.
 • மகரந்தச்சேர்க்கை தடைபடும்.
 • சாகுபடிப் பயிர்களில் இலை நரம்பு உடைதல்,
 • நரம்பு பெருத்தல்,
 • ஆப்பிள் நடுட்திசுக்கள் கருப்பு நிறமாதல் (Corking),
 • தென்னை குரும்பை உதிர்தல் (Button shedding)

ஆகியவை இதன் பற்றாக்குறையால் ஏற்படும்.

நிவர்த்தி செய்யும்முறை

எக்டேருக்கு 10-25 கிலோ போராக்ஸை நிலத்திலிட்டு மண்ணுடன் கலக்க வேண்டும். 0.2 சத போராக்ஸ் கரைசலை இலை மீது தெளிக்கலாம்.

மாலிப்டினம் (Mo)

பயிர்கள் வெளுத்து வளர்ச்சி குன்றிவிடும். காலிபிளவர் பயிரில் விப்டெய்ல் (Whip tai) என்னும் நோய் இதன் பற்றாக்குறையால் ஏற்படும்.

நிவர்த்தி செய்யும்முறை

எக்டருக்கு 0.5 கிலோ சோடியம் அல்லது அம்மோனியம் மாலிப்டேட் உப்பை மண்ணில் இடவேண்டும்.

 

English Summary: Nutrient deficiency symptoms in Plants

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.